(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் (2024) ஹஜ் ஏற்பாடுகளில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டு தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆறு ஹஜ் முகவர் நிலையங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
அல்ஹிக்மா, ஹம்தான், இமாரா, ஹலீம் லங்கா, அல்ரிபா, அல்மாஷா ஆகிய ஆறு ஹஜ் முகவர் நிலையங்களே இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளன.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளில் 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவாகும்.
ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ளது. அவ்வழக்கினை யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடெஸ் பிரைவட் லிமிடட் எனும் ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் மொஹமட் லரீப் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வருடம் ஹஜ் முகவராக தான் நியமிக்கப்படாமை, இது தொடர்பில் மேன்முறையீடு செய்தும் அம்மனு விசாரிக்கப்படாமல் ஹஜ் கோட்டா பகிர்ந்தளித்தமை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனது மேன்முறையீட்டு மனுவினை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் வரை ஹஜ் வழிகாட்டல்களின் படி ஹஜ் கோட்டா பிரித்து வழங்கப்பட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் உயர் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் தரப்பின் சார்பாக முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அலுவலர் ஒருவர் ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு வழக்குகளிலும் பிரதிவாதிகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், மற்றும் அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்களில் 6 வழிகாட்டல்கள் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சினால் 3500 ஹஜ் கோட்டா இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கோட்டா நேர்முகப் பரீட்சையொன்றின் பின் தெரிவு செய்யப்பட்ட 93 ஹஜ் முகவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli