பள்ளி நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்து கையாளப்பட்டால் தெரியப்படுத்துக
முறையீட்டாளர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்கிறது வக்பு சபை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல் நிர்வாகங்களால் முறைகேடாக கையாளப்படும் வக்பு சொத்துகள் தொடர்பில் வக்பு சபையின் சட்ட அதிகாரிக்கு தாமதியாது எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு வக்பு சபை பொதுமக்களைக் கோரியுள்ளது.
வக்பு சபைக்கு கிடைக்கப்பெறும் இவ்வாறான முறைப்பாடுகளைச் செய்பவர்களின் பாதுகாப்பு கருதி இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. வக்பு சொத்துகள் முறைகேடாக கையாளப்படுகின்றமை தொடர்பில் ஜமாஅத்தார்கள் தாங்கள் இனங்காணப்பட்டு விடுவோம் எனப் பயப்படுகிறார்கள். இதனாலே வக்பு சொத்துகளின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை எனவும் வக்பு சபை குறிப்பிட்டுள்ளது.
பள்ளிவாசல்களுக்குரிய கடைகள், கட்டிடங்கள் மற்றும் ஏனைய சொத்துகள் மிகவும் குறைந்த வாடகைக்கு பள்ளிவாசல் நிர்வாகிகளினால் வழங்கப்பட்டுள்ளன. பல தசாப்த காலமாக மிகக் குறைந்த வாடகையே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளிவாசல்கள் உரிய வருமானத்தை இழந்து வருகின்றன. அதனால் இவை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது என வக்பு சபையின் உறுப்பினரொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைக்கும் ஜமாஅத்தார்கள் தங்கள் பெயர், விலாசம், தொடர்புகொள்ளக்கூயை தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, வட்ஸ்அப் போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் கேட்கப்படுகின்றார்கள். முறைப்பாடு செய்பவர்களின் விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும், பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகம்
பள்ளிவாசல்களின் நிர்வாக கால எல்லை சுமார் 3 வருடங்களாகும். அநேக பள்ளிவாசல்கள் இக்கால எல்லையையும் கடந்து புதிய நிர்வாக சபை தெரிவினை நடத்தாது தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொடர்பிலும் வக்பு சபை விபரங்களைத் திரட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளது.
எனவே இவ்வாறான பள்ளிவாசல்கள் தொடர்பிலும் ஜமாஅத்தார் வக்பு சபையின் சட்ட அதிகாரிக்கு அறிவிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.- Vidivelli