முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு
அல் ஆலிம் பரீட்சையை நடத்தவும் உத்தரவு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த ஐந்து வருட காலமாக நடத்தப்படாதிருந்த அல் ஆலிம் பரீட்சை மீண்டும் நடத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சின் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலினையடுத்தே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
அல் ஆலிம் பரீட்சைக்கான பாடத்திட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும். அதன்பின்பே அப்பரீட்சை நடத்தப்படும் என கல்வியமைச்சு இழுத்தடிப்புச் செய்து வரும் நிலையிலே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். 5 வருட காலமாக பரீட்சை நடத்தப்படாமையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டிலுள்ள மத்ரஸாக்களை மேற்பார்வை செய்வதற்கான குழுவொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழன்றி கல்வி அமைச்சின் கீழேயே நிறுவப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
கொழும்பு மத்தியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமொன்றில் பாடசாலையொன்றினை நிறுவுவதற்கு காணியொன்றினை இனங்காணுமாறும் ஜனாதிபதி நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.
கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வளப்பற்றாக்குறை, இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடமும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடமும் எடுத்துரைத்தனர்.
சிங்கள மொழியில் இஸ்லாம் கற்பிப்பதற்கு பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது. சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் சிங்கள மொழியில் பயில்வதாக தெரிவிக்கப்பட்டது. கொழும்பிலுள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் சுமார் 200 ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிலவுகின்றமை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவிர்த்தி செய்வதற்காகவும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்காகவும் காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயுமாறும் ஜனாதிபதி நகர அபிவிருத்தி அதிகார சபை க்கு ஆலோசனை வழங்கினார். குறிப்பாக ஹைரியா மகளிர் கல்லூரி, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், அல்ஹிதாயா மகா வித்தியாலயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்காக கட்டிடம் நிர்மாணிக்கும் அங்கீகாரம் தொடர்பில், சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்குச் சொந்தமான மஹரகமயிலுள்ள 18 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் சிலரால் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எஞ்சியுள்ள 5 ஏக்கர் காணியில் பாடசாலையின் விவசாய பிரிவொன்றினை ஆரம்பிப்பதற்கும், விளையாட்டு கட்டிடத் தொகுதியொன்றினை நிர்மாணிப்பதற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜனாதிபதி வேண்டிக் கொண்டார்.
அத்தோடு முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஒரு மாத காலத்தில் மீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்டவர்களை வேண்டிக் கொண்டார்.
கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக,வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வலய கல்வி அதிகாரிகள், முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான ரீ.கே. அஸுர், செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ், காந்தாசவிய அமைப்பின் தலைவியும் பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உபதலைவியுமான பெரோஸா முஸம்மில், கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி, ஸாஹிரா கல்லூரி பணிப்பாளர் சபை தலைவர் பௌசுல் ஹமீட், பஹார்தீன் பவுண்டேஷன் தலைவர் பஹார்தீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் உட்பட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.