(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் வழங்க தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (3) அறிவித்தார். மாளிகாகந்த நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம வீரசிங்கவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடக்கும் போது, நாட்டின் ஜனாதிபதியாக, முப்படைகளின் பிரதானியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, பிரதான சூத்திரதாரி யார் என தனக்கு தெரியும் என வெளிப்படுத்தியுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி கண்டியில் வைத்து மைத்திரிபால சிறிசேன இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு, மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்தது. பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனை பிரகாரம் மாளிகாகந்த நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவிடம் இது தொடர்பில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பிரகாரம், மைத்திரிபால சிறிசேன குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் வழங்க விரும்புவதாக சி.ஐ.டி. அப்போது நீதிவானுக்கு அறிவித்தது.
அதன்படி இன்று 4 ஆம் திகதி அவ்வாக்குமூலத்தை வழங்க மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றமும் கட்டளையிட்டது.
இவ்வாறான பின்னணியில் நேற்று (3) சட்டத்தரணி சந்தீப்த சூரிய ஆரச்சி நகர்த்தல் பத்திரம் ஒன்றூடாக இவ்வழக்கை விசாரணைக்கு அழைத்தார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தனது சேவை பெறுநர் இரகசிய வாக்கு மூலம் வழங்க விரும்பவில்லை என அறிவித்தார். அதற்கான தேவைப்பாடு தற்போது இல்லை எனவும், சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள பின்னணியில் அந்த தேவை இப்போது எழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.- Vidivelli