பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இலங்கையில் இன, மத முரண்பாடுகளைத் தூண்டிய, தூண்டிக் கொண்டிருக்கின்ற, எதிர்காலத்தில் தூண்டிவிட எண்ணியுள்ள அனைவருக்கும் தகுந்த பாடமாகும்.
2016 ஆம் ஆண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியோர் பொலிஸ் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் திணைக்களமே ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையிலேயே கடந்த வாரம் இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத் தீர்ப்புக்கு முன்னராக தேரர் தனது தவறை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றில் அறிவிருத்திருந்தார். எனினும் இந்த மன்னிப்புக் கோரல் மூலம் தான் செய்த தவறை மறைக்கவோ தண்டனையிலிருந்து தப்பிக்கவோ முடியாது என தீர்ப்பை வழங்கிய நீதிவான் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஞானசார தேரர் ஏலவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போதும் அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆங்காங்கே முன்வைக்கப்படுகின்றன. எனினும் பெளத்த மத பீடங்களிடமிருந்தோ அல்லது முக்கிய அரசியல் தலைமைகளிடமிருந்தோ அவ்வாறான விடுவிப்பு கோரிக்கைகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும். இதற்கிடையில் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதின்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை இந்த விவகாரத்தில் தீர்க்கமானதொரு நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது. இந்த வழக்கை ஆராய்ந்து தீர்ப்பளித்த நீதிவான் மிக நுணுக்கமாக இதனுடன் தொடர்புபட்ட சட்ட ஏற்பாடுகளை ஆராய்ந்துள்ளார். அத்துடன் இந்த நாட்டில் மதங்களுக்கிடையே ஒற்றுமையை நல்லிணக்கத்தை தோற்றுவிக்கப் பாடுபட வேண்டிய மதத்தலைவர்களே அவற்றை சீர்குலைக்கும் வகையில் நடப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதிலும் நீதிவான் உறுதியாகவிருந்துள்ளார் என்பதை இவ் வழக்கின் தீர்ப்பை வாசிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
உண்மையில் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையில் தேர்தல் ஒன்றில் வெல்வதற்கோ அல்லது வேறேதேனும் தமது நோக்கங்களை அடைந்து கொள்ளவோ இலகுவாக இனவாதத்தை தூண்டிவிடலாம் என்ற நினைப்பில் மண் அள்ளிப் போடுவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது இனவாத சக்திகள் அனைவருக்கும் நல்லதொரு பாடமாகும்.
இருந்தபோதிலும் இந்த தீர்ப்பையே துரும்பாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சில சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டி விடக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றன. இவ்வருடம் தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்காக இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம் என்பதே கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து நாம் கற்றுள்ள பாடமாகும். இந்தத் தீர்ப்பானது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியதாகும். இதில் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி அதனை இனவாத கண்ணோட்டத்தில் சித்திரிக்க யாருக்கும் இடமளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli