ஹாபிஸ் இஸ்ஸதீன்
அன்று ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். “நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என எனது பிள்ளைகள் அனைவரும் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் நண்பர், சிறிது கவலை தோய்ந்த முகத்துடன். “அது நல்லது தானே! இதை ஏன் கவலையோடு சொல்கிறீர்கள்?” என்று நான் அவரிடம் கேட்டேன்.
“எனது நீண்ட ஆயுளுக்காக அவர்கள் பிரார்த்திப்பது நல்லதுதான். ஆனால் நான் முதுமை அடைந்து நலிவுற்று விடுவேனோ என்ற பயமும் அவர்களை உள்ளூர வாட்டிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்” என்றார் நண்பர்.
மனித வாழ்க்கையின் பரிதாப நிலையே இதுதான். தம் பெற்றோர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை பிள்ளைகளுக்கு இருக்கிறது. அதே வேளை அவர்கள் முதுமை அடைந்து, பலவீனமுற்று, எதிர்காலத்தில் தமக்குச் சுமையாக மாறி விடுவார்களோ என்ற பயமும் சில பிள்ளைகளிடம் இருக்கத்தான் செய்கிறது. முதுமை அடையாமலே ஆயுளை நீட்டுவதற்கு ஒரு வழியை யாரும் கண்டுபிடித்தாலே அன்றி, இந்த ஆசையும் பயமும் பரம்பரை பரம்பரையாக சங்கிலித் தொடர் போல் நீடிக்கத்தான் போகிறது.
சிறுவயது முதலே வீட்டிலும் சுற்றயலிலும் பல முதியவர்களோடு நெருங்கி உறவாடக் கிடைத்ததனால், முதுமைப் பருவத்தின் சாதக பாதகங்களை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அது பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் சில முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள முதியவர்களுடன் நெருங்கி உரையாடினேன். அவர்களது உள்ளங்களில் புதைந்து கிடந்த ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் வலிகளையும் அறிந்து கொண்ட போது முதுமையடைய முன்னரே மரணம் வருவதுதான் பாக்கியமோ என்ற எண்ணம் கூட வந்தது.
எனவே முதுமையைச் சாதகமான முறையில் எதிர்கொள்வதற்கு எம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். மற்றவர்களுக்குத் துன்பம் இல்லாத முறையில் வயோதிபத்தை அனுபவிப்பது எப்படி என்பது பற்றிச் சிந்தித்து அதற்காக நாம் மானசீகமாகத் தயாராக வேண்டும். எப்படியோ நானும் தட்டுத் தடுமாறி இப்போது வயோதிபப் பருவத்தை அடைந்து விட்டேன். இன்னும் சில வாரங்களில் 73வது அகவையில் கால் பதிக்கப் போகின்றேன். இந்த நிலையில், முதுமையைச் சாதகமான முறையில் எதிர்கொள்வதற்குத் தயாராவது எப்படி என்பது தொடர்பாக என்னுடைய ஆலோசனைகள் சிலவற்றை இங்கு முன்வைக்கின்றேன். இந்த விடயத்தில் அக்கறை உள்ளவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.
முதுமையில் எமது பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களும்தான் எம்மைப் பராமரித்து ஆதரவு வழங்கப் போகிறார்கள். எனவே அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்குப் பங்கமோ, தொல்லையோ இடையூறோ ஏற்படாத வகையில், வாழ்ந்துவிட்டுப் போவதே இங்கு எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
* நடுத்தர வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகச் செயலிழப்பு, மூல நோய் போன்ற நீண்ட காலத்திற்குரிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதும் பொருத்தமான முறையில் தமது வாழ்க்கைப் பாணியை மாற்றி அமைத்துக் கொள்வதும் மிக முக்கியம். உடலில் வீரியம் உள்ள காலத்தில் இந்தக் கோளாறுகளை பொருட்படுத்தாது அலட்சியமாக நடந்து கொள்பவர்கள் முதுமையில் தமக்கும் பிறருக்கும் தொந்தரவு கொடுப்பவர்களாக மாறிவிடுவர்.
* பார்வை, கேள்வி போன்ற புலன்களிலும் பற்கள், கைகால் மூட்டுக்கள் போன்றவற்றிலும் ஏதேனும் கோளாறுகள் இருப்பின் அவற்றுக்கு நேர காலத்துடனேயே பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில், வயோதிபத்தை அடையும் வரை பொடுபோக்காக இருப்பவர்கள் மனம் வருந்தி கைசேதப்பட நேரிடும்.
* சம்பாதிக்கும் காலத்தில், முதுமைப் பருவத்தில் வருமானம் வரக்கூடிய வழி ஒன்றை ஏற்பாடு செய்து கொள்ள முடியுமாயின் நல்லது. அல்லது சேமிப்பு ஒன்றையேனும் வைத்திருக்க வேண்டும். பிறரில் தங்கி இருப்பதை குறைத்துக் கொள்ள இது உதவும். (ஓய்வூதியத்திற்கு தகுதிபெறும் வரை நான் அரச தொழிலில் ஒட்டிக் கொண்டிருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்)
* மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாத முறையில் ஈடுபடக்கூடிய சில பொழுதுபோக்குகளை பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தத்தமது நாவுகளுக்கு ஏற்றவகையில் உணவுகளும் பானங்களும் சுவையாக இருக்க வேண்டும், உரிய நேரத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் அடியோடு துறந்துவிட வேண்டும். கிடைப்பதைத் திருப்தியோடு உண்டு சந்தோஷப்படுவதற்கு தன் உள்ளத்தைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். தரப்படும் உணவையும், செய்யப்படும் பராமரிப்பையும் பற்றி எதிர்மறையாக நினைக்கவோ, விமர்சிக்கவோ முற்படக்கூடாது.
* முதுமை அடையும் போது மனித உடலில் பலவிதமான நோவுகளும் பலவீனங்களும் கோளாறுகளும் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறிய சிறிய நோவுகளுக்கும் உடற் பலவீனங்களுக்கும் நிரந்தர பரிகாரம் தேட நினைப்பதும், உடல் ஆரோக்கியம் முன்னைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பதும் இயற்கைக்கு மாறானது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம். அத்தோடு தமது உடல் அசௌகரியங்கள் பற்றி வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருக்காமல் மற்றவர்கள் மீது அக்கறை காட்டிப் பேச பழக வேண்டும்.
* 70 வயது பிந்திய பின் தனது உடலில் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்காக மில்லியன் கணக்கில் செலவாகும் சிகிச்சைகளை நாடக் கூடாது. பதிலாக, palliative treatment எனப்படும் தற்காலிக வலி நீக்கும் சிகிச்சைகளுடன் காலத்தைக் கடத்தக்கூடிய மனத் துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில வயோதிபர்கள் இப்படியான சிகிச்சைகளுக்காக தமது பிள்ளைகளின் அல்லது உறவினர்களின் பெருந்தொகைப் பணத்தை விரயம் செய்ய வழி வகுத்து விட்டு சொற்ப காலத்தில் இறந்து போய்விடுகிறார்கள். இப்படி மற்றவர் சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை விரயம் செய்வதற்கு நாம் காரணமாக அமைந்து விடக்கூடாது.
* உடல் வலிமை இருந்த காலத்தில் செய்த காரியங்களை எல்லாம் முதுமையிலும் செய்ய முடியும் என அடம் பிடிக்கக் கூடாது. நிலைமைக்கு ஏற்ப விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.
* குடும்பத்தில் எமக்கிருந்த ஆட்சி அதிகாரம், முன்னுரிமை, முதன்மை அந்தஸ்து முதலியவற்றைப் பசுமையான நினைவுகளாக மாற்றிக் கொண்டு அவற்றை நினைத்து சந்தோஷப்படுவதில் தவறில்லை. ஆனால் தொடர்ந்தும் அவற்றை எதிர்பார்க்கக் கூடாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலப்போக்கில் அவை அடுத்த பரம்பரைக்கு உரித்தாகிவிடும் என்ற புரிந்துணர்வு தேவை.
* நாம் எவ்வளவு அறிவுத்தரமும் அனுபவமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் எடுத்ததற்கெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்லும் முன்னைய பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும். குறிப்பாக நமது பேரப் பிள்ளைகளின் வளர்ப்பு விடயத்தில் அனாவசியமாக தலையிடக்கூடாது. காலம் மாறியிருக்கிறது; புதிய தலைமுறையினரின் சிந்தனையும் போக்கும் வித்தியாசமாக இருக்கும் என்பதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* இறைவனுடனான நெருக்கமே முதுமையில் நிம்மதியைத் தரும் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மரணத்தைப் பயமின்றி ஏற்றுக் கொள்வதற்கு உகந்த விதத்தில் தனது ஆன்மீக ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ள வேண்டும்.- Vidivelli