அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் முழந்தாளிடச் செய்த சம்பவம் பெரும் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.
இச் சம்பவத்தை கண்ணுற்ற பிரதேசவாசியொருவர் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சுமார் எட்டு மாணவர்கள் வெயிலில் முழந்தாளிடச் செய்யப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இம்மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர்கள் இருவர் கல்லூரியின் மேல் மாடியில் நிற்பதும் பகலில் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காது விளையாடிக் கொண்டிருந்தமைக்காகவே இத்தண்டனை வழங்கப்படுவதாக ஆசிரியர் ஒருவர் கூறுவதும் தெளிவாகக் கேட்கிறது.
குறித்த வீடியோவைப் பதிவு செய் நபர் மாணவர்களுக்கு இவ்வாறு நோன்புடன் தண்டனை வழங்குவதை அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து குறித்த மாணவர்கள் மீண்டும் அரபுக் கல்லூரி கட்டிடத்திற்குள் செல்வதும் இக் காணொளியில் பதிவாகியுள்ளது.
அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மத்ரசா ஒன்றில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்த நிலையிலேயே, தற்போது மருதமுனை பிரதேசத்தில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய சம்பவம் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அரபுக் கல்லூரி ஒன்றில் இவ்வாறு மாணவர்கள் மனிதாபிமானமற்ற வகையில் தண்டிக்கப்பட்டுள்ளமை விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் சட்டநடவடிக்கை எடுக்குமாறும் சமூக வலைத்தளங்களில் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரபுக் கல்லூரி நிர்வாகமும் பிரதேச ஜம்இய்யதுல் உலமாவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.- Vidivelli