உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிவிப்பு தேசிய அரசியலில் சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்குத் தற்போது தெரிய வந்துள்ளதாகவும் நீதிமன்றம் கோரும்பட்சத்தில் அது தொடர்பில் வெளிப்படுத்த தயார் எனவும் மைத்திரி கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 24 பேரும் இதன் சூத்திரதாரிகளோ அல்லது நேரடியாக சம்பந்தப்பட்டவர்களோ அல்லர் என்ற வகையிலும் அவரது கருத்து அமைந்திருக்கிறது.
உண்மையில் மைத்திரியின் இந்த அறிவிப்பானது, இத் தாக்குதல் நடந்த சமயம் நாட்டில் ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
குறித்த தகவலானது தாக்குதல் நடந்தபோது தனக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே தனக்கு தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலத்தின் பிரதி தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு என்ன சட்டநடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 24 பேர் தொடர்பான வழக்கு அமர்வுகள் நேற்று இடம்பெற்ற போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் இவ்வழக்கில் ஆஜராக்குமாறு சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கு நீதிமன்றிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைக்காத போதிலும் எதிர்வரும் நாட்களில் ஏதோ ஒருவகையில் மைத்திரி நீதிமன்றில் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு கோரப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையில் 265 அப்பாவி கிறிஸ்தவ மக்களின் உயிரைப் பறித்து, எந்தவித சம்பந்தமுமற்ற முஸ்லிம் சமூகத்தை குற்றவாளிகளாக்கி நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிவதற்கு முழு உலகுமே ஆவலுடன் உள்ளது. இத் தாக்குதல் யாருடைய தேவைக்காக, யாருடைய உத்தரவில் நடத்தப்பட்டது என்ற உண்மை வெளிப்பட வேண்டும். இத்தாக்குதலை எந்தவித பாதுகாப்பு கெடுபிடிகளுமின்றி நடாத்துவதற்கு வழிவகுத்தவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் கூட, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்ட 24 பேரும் இத்தாக்குதலின் சூத்திரதாரிகளை மூடிமறைப்பதற்காக பயன்படுத்தப்பட்டவர்களே அன்றி அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் அல்லர் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் கர்தினாலின் இந்தக் கருத்தும் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு புதிய புதிய தகவல்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படும் நிலையில் உண்மையைக் கண்டறிந்து முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறியவும் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிந்து தண்டனை வழங்கவும் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவிடயத்தில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயற்பட வேண்டியது அவர்மீதுள்ள கடப்பாடாகும். -Vidivelli