ஏ.ஆர்.ஏ.பரீல்
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் 1500 பக்கங்களை மறைத்து விட்டது. எமக்கு வழங்கிய ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட 1500 பக்கங்களும் காணப்படவில்லை. இதேவேளை அரசு சஹ்ரான் மற்றும் சஹ்ரான் குழுவினருடன் தொடர்பிலிருந்தார்கள் எனக் குற்றம் சுமத்தி 23 முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த 23 முஸ்லிம்களும் இத்தாக்குதலின் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பு திருச்சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது, அரசாங்கம் எமது கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆறு சிடிக்களில் எமக்கு வழங்கியது. எமது சட்டத்தரணிகள் அந்த அறிக்கையை கவனமாக ஆராய்ந்தார்கள். அதில் 70 ஆயிரம் பக்கங்கள் உள்ளன. என்றாலும் அறிக்கையின் 1500 பக்கங்களை அரசு எமக்கு வழங்கவில்லை. இந்த 1500 பக்கங்களையும் அரசாங்கம் சூட்சுமமாக தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் ஆகிய முக்கியமான சாட்சிகளால் வழங்கப்பட்ட சாட்சியங்களையே அரசாங்கம் எம்மிடம் கையளிக்கவில்லை. இது பாரிய சந்தேகத்துக்குரியதாகும். தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் சாரா ஜெஸ்மின் எனும் பெண்ணாகும். அவரது சாட்சியங்கள் எமக்கு வழங்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை முழுமையாக எமக்கு வழங்கும்படி நாங்கள் பல கடிதங்கள் எழுதிய பின்பே அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது. இதேவேளை முழுமையான அறிக்கை எமக்கு வழங்கப்பட்டதாக அரசு ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளது.
அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இத்தாக்குதல் தொடர்பான 99 வீத விசாரணைகள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் ஆராய்ந்த போது அதில் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அரசாங்கம் சஹ்ரான் மற்றும் அவரது குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி 23 முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. அரச அதிகாரிகள் இந்த 23 பேரையும் தற்போது பலிக்கடாவாக்கப் பார்க்கிறார்கள். இத்தாக்குதல் குறித்த அனைத்து விடயங்களையும் விசாரணை செய்வதை தவிர்த்து 23 முஸ்லிம்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்டு அடுத்த மாதத்துடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. நாங்கள் புதிய சுயாதீன விசாரணைகளைக் கோரிவரும் நிலையில் அதிகாரிகள் பொது மக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களையே முன் வைக்கின்றனர்.
இதேவேளை இராணுவ புலனாய்வு பிரிவின் இயக்குநருக்கும் சஹ்ரான் குழுவினருக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதில் தான் ஈடுபட்டமை தொடர்பில் ஆஸாத் மெளலானா விளக்கமளித்துள்ளார். உறுதி செய்துள்ளார். இதில் பிள்ளையான் தொடர்புபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய நிதியை பிள்ளையான் ஊடாக சஹ்ரான் குழுவினர் பெற்றுக்கொண்டதாகவும் ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்ட சுரேஷ் சாலேவுக்கும் சஹ்ரான் ஹாசிம் குழுவினருக்குமிடையில் சந்திப்புகள் இடம் பெற்றதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் ஜெலனிகமயில் சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் காணப்பட்ட லொறியொன்றினை சோதனை செய்யாது விடுவிக்குமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பிட்ட லொறி முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவைக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட லொறியின் வெடி மருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.- Vidivelli