குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்
எம்.ஐ.அப்துல் நஸார்
குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த தீவிர வலதுசாரி கும்பலொன்று, புனித ரமழான் மாதத்தின் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை தாக்கியதில் குறைந்தது நான்கு வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை, ‘தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக’ இந்திய வெளிவிவகார அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிவாசல் இல்லாததால், ரமழான் தராவீஹ் தொழுகைக்காக மாணவர் விடுதியில் சனிக்கிழமை இரவு ஒரு சிறிய முஸ்லிம் மாணவர்கள் குழு ஒன்றுகூடியதாக உள்ளூர் ஊடகங்களுக்குத் குறித்த மாணவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்திலேயே, ஒரு கும்பல் தடிகள் மற்றும் கத்திகளுடன் விடுதிக்குள் நுழைந்து, அவர்களைத் தாக்கியதோடு அவர்களின் அறைகளை சேதப்படுத்தியது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
’15 மாணவர்கள் கொண்ட குழு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மூன்று பேர் வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சலிட ஆரம்பித்தனர். நாங்கள் அங்கு தொழுகையில் ஈடுபடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்’ என ஒரு மாணவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
‘சிறிது நேரம் கழித்து, சுமார் 250 பேர் வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டனர். அவர்கள் கற்களை வீசியதோடு விடுதி சொத்துக்களையும் சேதப்படுத்தினர். ‘அவர்கள் அறைகளுக்குள் வைத்தும் எங்களைத் தாக்கினர். அவர்கள் எமது மடிக்கணினிகள், தொலைபேசிகளை சேதப்படுத்தியதோடு எமது மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர், அது மட்டுமல்லாது காற்றுச் சீராக்கி மற்றும் ஒலிக் கட்டமைப்புக்களையும் அவர்கள் தாக்கி அழித்தனர்’ என ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு மாணவர் உள்ளூர் என்டிரிவி வலையமைப்பிடம் தெரிவித்தார்.
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர் விடுதிகளையும், ஒரு கும்பல் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை நீண்ட தடிகளைக் கொண்டு தாக்கி அழித்ததையும் காட்டின.
‘எங்களால் இப்படியான சூழலில் வாழ முடியாது,’ என ஒரு ஆபிரிக்க மாணவர் ஒருவர் தனது விடுதியில் இருந்து படம்பிடித்த காணொளியில் கூறியுள்ளார்.
பின்னணியில், பலத்த கூச்சலும், குறித்த கும்பல் பொருட்கள் அடிப்பது, உடைப்பது, அடித்து நொறுக்குவது போன்ற சத்தங்களும் கேட்கின்றன.
‘நாங்கள் படிப்பதற்காக இந்தியா வந்தோம், இப்போது ரமழான் காலம். முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் தாக்கப்படுகிறோம். இப்போது அவர்கள் எமது மோட்டார் சைக்கிள்களை உடைக்கிறார்கள், எல்லாமே கீழ்த்தளத்தில் நடைபெறுகின்றன’ எனவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, இரு மாணவர்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
சூத்திரதாரிகளுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கை
‘இரவு 10:30 மணியளவில் மாணவர்கள் குழுவொன்று தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் 20- , 25 பேர் வந்து, நீங்கள் ஏன் இங்கு தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள்? தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றால் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கூறியிருக்கிறார்கள்,’ என அகமதாபாத் பொலிஸ் ஆணையாளர் ஜி.எஸ் மாலிக் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
‘அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, வெளியில் இருந்து வந்தவர்களால் கற்கள் வீசப்பட்டு அவர்களது அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன.’ 20, 25 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசு ‘சூத்திரதாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது,
‘இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களுள் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்’ என ஊடகப் பேச்சாளர் ரந்தித் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் ‘உறுதியான செய்தியை வெளிப்படுத்த இந்த விடயத்தில் தலையிடுவார்களா ? என தெற்கு நகரமான ஹைதராபாத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அசாதுத்தீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘என்னவொரு வெட்கக்கேடு. முஸ்லிம்கள் தங்கள் மதத்தை அமைதியாக கடைப்பிடிக்கும் போது மட்டுமே உங்களது பக்தி மற்றும் மத முழக்கங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன’ என அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘உள்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு இந்தியாவின் நல்லெண்ணத்தை அழித்து வருகிறது’ என அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்து தீவிர வலதுசாரிக் குழுக்கள் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன. இந்த மாத ஆரம்பத்தில், தலைநகர் புதுதில்லியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியோரத்தில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் ஆண்களை காலால் உதைத்ததன் காரணமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
சர்வதேச மாணவர்கள் ‘கலாச்சார கூருணர்வு’ தொடர்பில் பயிற்சி பெற வேண்டும் என குஜராத் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் நீர்ஜா ஏ குப்தா உள்ளூர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
‘இவர்கள் வெளிநாட்டு மாணவர்கள், நீங்கள் வெளிநாடு செல்லும்போது, நீங்கள் கலாச்சார கூருணர்வு தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாணவர்களுக்கு திசைமுகப்படுத்தல் அவசியமாகும். நாங்கள் அவர்களுடன் அமர்ந்து, கலாச்சாரம் தொடர்பான திசைமுகப்படுத்தலை வழங்குவோம், அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலும் கலந்தரையாடுவோம்,’ எனவும் குப்தா தெரிவித்ததாக என்டிரிவி மேற்கோள் காட்டியுள்ளது.- Vidivelli