அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது
ஆப்கானிஸ்தான் தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், பல்வேறு ஊடக அறிக்கைகள் மூலம் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால் அவ்வாறு நிகழ்வதற்கு சாத்தியமுள்ளது. அதன் பிரகாரம் அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்படுவதால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என ஆப்கானிஸ்தானின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எமக்கு ஆலோசனை வழங்கிய, பயிற்சியளித்த, உதவிபுரிந்த சில ஆயிரம் வெளிநாட்டுப் படையினர் விலகிச் செல்வதால் எமது பாதுகாப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பிரதம ஆலோசகரான பாஸெல் பஸ்லி தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு ஆப்கானிஸ்தானிடமே இருந்தது. ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படையின் இறுதி இலக்கு தமது தாய் மண்ணைப் பாதுகாப்பதற்கு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதாகவே காணப்படுகின்றது.
அமெரிக்க இராணுவ வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பிரச்சினையினைத் தோற்றுவிக்காதென ஜனாதிபதி செயலகப் பேச்சாளர் ஹாறூன் சக்கன்சூரி சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள 14,000 அமெரிக்கப் படையினருள் 7,000 பேரை மாத்திரம் வாபஸ் பெறுவதற்கு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை பல்வேறு அமெரிக்க ஊடகங்களும் கருத்து வெளியிட்டிருந்தன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அபூதாபியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அமெரிக்காவின் விசேட சமாதானத் தூதுவரான சல்மே காலில்ஸாட்டிற்கும் தலிபான்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற சர்வதேசப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான கலந்துரையாடலையடுத்தே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2002 ஆம் ஆண்டு தலிபான் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கு அமெரிக்கா தலையீடு செய்ததையடுத்து சுமார் 130,000 சர்வதேசப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன அதிலிருந்து சுமார் 2,500 அமெரிக்கப் படையினர் யுத்தத்தின்போது தமது உயிர்களை இழந்துள்ளனர்.
படையினர் வாபஸ் பெறுவது துல்லியமான ஆப்கான் படையினரின் இரவு நேரத் தாக்குதல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பேச்சாளர் ஸாஹிப் அஸீமி தெரிவித்தார். அமெரிக்காவின் வான்வழியுதவி ஆப்கானிஸ்தான் தரைப் படையினருக்கு இல்லாமல் போவது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ தலைமையிலான நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஆப்கானிஸ்தானில் சுமார் 14,000 படையினர் உள்ளனர். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான தனியான நடவடிக்கைகள் ஐ.எஸ் அமைப்பு மற்றும் அல்கைதா அமைப்புக்களுக்கு எதிராக அவற்றை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது
இது தவிர ஆப்கானிஸ்தானில் 38 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் ஆப்கான் படையினருக்கு பயிற்சிகளையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படையினர் வெளியேற்றப்பட வேண்டுமெனப் போராடிவரும் தலிபான்கள் மேற்கு ஆதரவுடனான காபூல் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
-Vidivelli