ஜனாதிபதி பதவியிலிருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ச தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை வெளிநாடுகளின் சதி எனக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ள நூல் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில் கடந்த வாரம் ஆங்கில மொழியிலும், சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்கள் மக்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது.
இந்நூலில் அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் அவரை வெளியேற்றுவதற்கு மேற்கொண்ட அரகலய போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டும் வெளியேறிய விதம், அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள், கொரோனா தொற்றில் மரணமான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாமல் எரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம், வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் பல இடங்களிலும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பல விடயங்களை எழுதியுள்ளார். “அரகலய போராட்டத்திற்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்தது. ஏனெனில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர்களும் பொது பல சேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்களும் என்னை எதிர்த்தார்கள். முஸ்லிம்கள் என்னை விரோதியாகவே பார்த்தார்கள். எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்கள பெளத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக் கூடும்”என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
“2012ஆம் ஆண்டு பொதுபலசேனா அமைப்பு உருவானது. அந்த அமைப்புடனான தொடர்பின் காரணமாக நான் முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டேன். 2019 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கே வழங்கப்பட்டன. இதனை நான் ருவன் வெலிசாய புனித தலத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தேன். சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளினாலேயே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் என்பதனையும் கூறினேன். கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது தகனம் செய்யப்பட வேண்டும் என்று எனது ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அவர்களது மதத்தின்படி உடல்கள் தகனம் செய்யப்படக் கூடாது. அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நான் முஸ்லிம்களின் கொவிட் தொற்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் எமது சுகாதார பிரிவின் நிபுணர்கள் கொவிட் தொற்று ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டால் கொவிட் வைரஸ், நிலத்தடி நீருக்குள் கலக்கும் என்று கூறி ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவிட்டார்கள். ஜனாஸாக்கள் எரிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கொன்கிரீட் பெட்டியொன்று அமைத்து அதற்குள் ஜனாஸா அடக்க முடியும் என்ற யோசனையையும் நான் நிபுணர் குழுவுக்கு முன்வைத்திருந்தேன். ஆனால் சுகாதார பிரிவு அதனை அனுமதிக்கவில்லை. குறிப்பாக நிபுணர் குழுவின் பேராசிரியர் மெத்திகா விதானகே தான் இந்த நிலைமைகளுக்குக் காரணம் எனவும் கோத்தாபய ராஜபக்ஷ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஜனாஸா எரிப்பு விடயத்தில் தனக்குப் பொறுப்பில்லை என்று நழுவியுள்ள கோத்தபாய முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னை ஆதரிக்கவில்லை என்ற கருத்தையும் பல இடங்களில் அழுத்தமாகப் பதித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்நூல் வெளிவந்த பிற்பாடு கருத்து வெளியிட்ட கோத்தபாயவின் நெருங்கிய சகா ஒருவர் ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தை தாக்குவதற்காக வந்தவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களே என பாரிய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இவ்வாறு இந்நூல் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நோக்கில் பொய்யான வரலாறுகள் மூலம் எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடாத்த முற்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.- Vidivelli