மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்
சர்வதேச நாணய நிதியத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்
மனித உரிமைகள் தொடர்பான தராதரங்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவகையில் உத்தேச அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலத்தைக் கைவிடுமாறும், நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தைப் பகிரங்கமாக வலியுறுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியமானது அதனூடாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உதவித்திட்டத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இவ்விடயத்தை வலியுறுத்தி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மற்றும் அவ்வமைப்பின் பொருளாதார நீதி மற்றும் உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அர்விந்த் கணேசன் ஆகியோரால் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சிவில் சமூக இடைவெளியைத் தீவிரமாக மட்டுப்படுத்துவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்ட அமுலாக்கத்தை செயலிழக்கச்செய்யக்கூடியவகையில் இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் புதிய சட்டவரைபுகளைக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தவேண்டும். குறிப்பாக நல்லாட்சியை மேம்படுத்துவதிலும், ஊழலை இல்லாதொழிப்பதிலும் சிவில் சமூகத்தின் வகிபாகம் மிகமுக்கியம் எனினும், அடிப்படை சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட அண்மையகால நடவடிக்கையே உத்தேச அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான (பதிவுசெய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டமூலமாகும்.
அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட மறுசீரமைப்புசார் உத்தரவாதங்களுக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித்திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை, அப்பொருளாதார நெருக்கடியிலிருந்து உடனடியாக வெளிவருவதற்கு உதவியது. இருப்பினும் அடிப்படை உரிமைகளை மிகத்தீவிரமாக மட்டுப்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தக்கூடியவகையிலான சரத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது. அதேபோன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலுடன் தொடர்புடைய புதிய குற்றங்களையும், கைதுசெய்வதற்குரிய தன்னிச்சையான அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக அரச சார்பற்ற அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளை சுதந்திரமான முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்படக்கூடும்.
நாடு கடந்த 2022 ஆம் ஆண்டு மிகத்தீவிர பொருளாதார சீர்குலைவுக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நல்லாட்சியை உறுதிப்படுத்துமாறும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தினர். இருப்பினும் தற்போது மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியதும், சாதக மறுசீரமைப்புக்களில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியதுமான மிகமோசமான சட்டங்களும், கொள்கைகளுமே வகுக்கப்பட்டுவருகின்றன. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிபீடமேறுவதற்கு உதவின. ஆனால் ஜனாதிபதி மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதற்குப் பதிலாக, அமைதியான முறையிலான கருத்து வெளிப்பாட்டை ஒடுக்க முற்படுகின்றார்.
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டவரைபு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட சில சிவில் சமூக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன், அதுபற்றிய பின்னூட்டங்களை சமர்ப்பிப்பதற்கென 3 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அச்சட்டவரைபின் ஊடாக அவசியமான விடயங்கள் எவையும் ஈடேற்றப்படவில்லை. மாறாக சிவில் சமூக அமைப்புக்களை அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டின்கீழ் கொண்டுவர முற்படுவதுடன், அதில் கூறப்பட்டிருக்கும் நிர்வாக செயன்முறைக்கு அமைவாக இயங்காத அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தலையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் தொடர்பான தராதரங்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவகையில் உத்தேச அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலத்தைக் கைவிடுமாறும், நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தைப் பகிரங்கமாக வலியுறுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியமானது அதனூடாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உதவித்திட்டத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் சர்வதேசப் பங்காளிகள், இப்பொருளாதார நெருக்கடிக்கு தவறான ஆட்சி நிர்வாகமும், ஊழல் மோசடிகளுமே பிரதான காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அவர்களது முயற்சிகள் வெற்றியடையவேண்டுமேயானால், அடிப்படை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஒடுக்கக்கூடியவகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.- Vidivelli