உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்
மஸ்ஜிதுந் நபவி இமாம் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி
சவூதி அரேபியாவிலிருந்து
எம்.பி.எம்.பைறூஸ்
“உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனினும் அவ்வாறு உதவி செய்வதானது இஸ்லாமிய வழிகாட்டல்களையும் வரையறைகளையும் பேணியதாக இருக்க வேண்டியது அவசியம்” என மதீனாவிலுள்ள புனித மஸ்ஜிதுந் நபவியின் பிரதம இமாம்களில் ஒருவரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரிவித்தார்.
“சக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு உதவுவது அல்லது ஆதரிப்பது ஒரு முஸ்லிமின் கடமையாகும். எனினும் இவற்றை இஸ்லாமிய வரையறைகளுக்குள்ளும் வழிகாட்டல்களுக்குள்ளும் நின்றே நாம் மேற்கொள்ள வேண்டும். நற்பணிகளுக்கான வாயில்கள் திறந்தே உள்ளன. எனினும் அவற்றை இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றியே முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு செய்வதற்கு அனுமதியில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் அழைப்பின் பேரில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும் இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை தரிசிப்பதற்குமென சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ள 16 நாடுகளைச் சேர்ந்த 250 பிரமுகர்களுடனான சந்திப்பின் போதே இமாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘மன்னரின் விருந்தினர்கள்’ திட்டம்
இரு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் சகல நாடுகளிலிருந்தும் 1,000 உம்ரா யாத்திரிகர்களை விருந்தினர்களாக அழைப்பதற்கு சென்ற வருட இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கமைய இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலும் குறித்த 1000 விருந்தினர்களும் சவூதி அரேபியாவை வந்தடைந்து புனித உம்ரா கடமையை நிறைவேற்றியுள்ளதுடன் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புடைய முக்கிய இடங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கமைய தலா 250 பேர் கொண்ட விருந்தினர்கள் நான்கு கட்டங்களாக சவூதி அரேபியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் முதல் தொகுதியினர் கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் உம்ரா கடமையை நிறைவேற்றினர். இறுதி குழுவினர் தற்போது சவூதி அரேபியாவில் தங்கியிருந்து உம்ரா கடமையை நிறைவேற்றுவதுடன் முக்கிய தலங்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.
இத் திட்டம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் அமுல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியமைக்காக மன்னர் சல்மானுக்கும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அல் ஷெய்க் தெரிவித்தார்.
இத்திட்டம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்வதிலும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கிடையே சகோதரத்துவப் பிணைப்பை வலுப்படுத்துவதிலும், பல்வேறு இஸ்லாமியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சவூதி அரேபியா கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள், முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 1,000 முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் இந்த விருந்தினர்கள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அல் ஷெய்க், இவ் விருந்தினர்கள் இரு புனித தலங்களிலும் வழிபாடுகளில் ஈடுபடவும் இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களையும் பார்வையிடவும் அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மதவெறி மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதுடன் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்வதே தமது அமைச்சின் பிரதான இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளை பரப்புவதற்கும் தமது அமைச்சு விரிவான திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து 10 பேர் பங்கேற்பு
இலங்கையில் இருந்தும் 10 பிரமுகர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் அஷ்ஷெய்க் நயீமுத்தீன், தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் ரமீஸ் அபூபக்கர் உட்பட ஊடகவியலாளர்கள், தஃவா பிரசாரகர்கள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இக் குழுவில் அடங்கியுள்ளனர்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் நேரடி வழிகாட்டலில் தெரிவு செய்யப்பட்ட இக் குழுவினர் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு புனித மதீனா நகரை வந்தடைந்தனர். அத்துடன் மேலும் 15 நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் மதீனாவை வந்தடைந்தனர். இவர்களுக்கு சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் அதிகாரிகளால் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பங்களாதேஷ், ரஷ்யா, தஜிகிஸ்தான், அவுஸ்திரேலியா, இலங்கை, மாலைதீவுகள், இந்தியா, கஸகஸ்தான், பாகிஸ்தான், அஸர்பைஜான், நேபாளம், துருக்கி, கொசோவோ, கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 250 பேரே தற்போது சவூதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
முதலில் மதீனாவுக்கு விஜயம் செய்த இக்குழுவினர், மஸ்ஜிதுந் நபவியில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் நபிகளாரின் அடக்கஸ்தலத்தையும் தரிசித்தனர். அத்துடன் குபா பள்ளிவாசல், உஹத் மலையடிவாரம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க தலங்களுக்கு விஜயம் செய்ததுடன் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இஸ்லாமிய நாகரிகம் (International Fair and Museum of the Prophet’s Biography and Islamic Civilization) தொடர்பான அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். மேலும் மதீனாவில் அமைந்துள்ள மன்னர் பஹத் அல்குர்ஆன் அச்சிடும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.
மதீனா இமாமுடன் சந்திப்பு
புனித உம்றா கடமைக்காக வருகை தந்திருக்கும் 16 நாடுகளையும் சேர்ந்த 250 விருந்தினர்களுக்கும் புனித மஸ்ஜிதுந் நபவியின் இமாம்களில் ஒருவரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போது புனித அல் குர்ஆனின் சில வசனங்களை அழகுற ஓதி நிகழ்வை ஆரம்பித்த இமாம் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி, விருந்தினர்களுக்கு சில உபதேசங்களையும் வழங்கினார். அத்துடன் விருந்தினர்களுடன் தனித்தனியாக சலாம் கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இமாம் அவர்கள் இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “நெருக்கடிகள் ஏற்படும்போது அந்தந்த நாடுகளின் முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்களைப் பின்பற்றியே இந்த விடயத்தில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் இவ்வாறான நெருக்கடிகள், பிரச்சினைகள், வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பார்கள். ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்காக துஆ செய்வதன் மூலம் தனது கடமையை நிறைவேற்ற முடியும்” என்றும் இமாம் அல் ஹுதைபி குறிப்பிட்டார்.
அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ளுமாறும் இமாம் அல் ஹுதைபி மன்னரின் விருந்தினர்களாக வருகை தந்தவர்களை வலியுறுத்தினார்.
“ஒரு முஸ்லிம் அடைய வேண்டிய மிகப் பெரிய மற்றும் உயர்ந்த நம்பிக்கை, சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் மகத்தான, எண்ணற்ற அருள்களுக்காக நன்றி செலுத்துவதாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் நன்றி செலுத்துவதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னரின் விருந்தினர்களுக்கு உம்ரா செய்வதற்கு கிடைத்த பாக்கியத்திற்காக அனைவரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் இமாம் அல் ஹுதைஃபி குறிப்பிட்டார்.
மக்கா இமாமுடன் சந்திப்பு
பத்து தினங்களைக் கொண்ட இந்த விஜயத்தில் முதல் 5 தினங்கள் மதீனாவில் தங்கியிருந்த இவ்விருந்தினர்கள் இறுதி 5 தினங்கள் மக்காவில் தங்கியிருப்பர். ரமழான் முதல் பிறை அன்று புனித மக்காவை வந்தடைந்த இக் குழுவினர் உம்ரா கடமையை நிறைவேற்றியதுடன் ரழமான் மாத அமல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மக்காவிலுள்ள இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை தரிசிக்கவுள்ளதுடன் மக்கா ஹரம் ஷரீபின் இமாம்களில் ஒருவருடனான சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய அறிஞர்களை, புத்திஜீவிகளை சந்திக்கும் வாய்ப்பு
இதேவேளை, இந்த விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், “உலகின் பல நாடுகளிலிருந்தும் 1000 பிரமுகர்களைத் தெரிவு செய்து இவ்வாறானதொரு பாக்கியத்தை வழங்கியமைக்காக விருந்தினர்கள் அனைவரும் இரு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர். புனித உம்ரா கடமையை நிறைவேற்றியது மாத்திரமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை சந்திக்கவும் அவர்களுடனான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் முடிந்தமை மற்றுமொரு பாக்கியமாகும். அது மாத்திரமன்றி இதுவரை நூல்களில் வாசித்த, உரைகளில் கேட்டறிந்த இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை நேரில் தரிசித்து அவற்றின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தவும் இலகுவாக விளங்கிக் கொள்ளவும் இந்த விருந்தினர் திட்டம் பெரும் உதவியாக அமைந்தது ” என்றார்.
மேலும் பெறுமதிமிக்க இந்தப் புனித பயணத்தை ஏற்பாடு செய்ததுடன் உலகின் ஏனைய நாடுகளிலிருந்தும் வருகை தந்த முஸ்லிம் உறவுகளுடன் தொடர்பாடுவதற்கும் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்காக இலங்கைக்காக சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானிக்கு இலங்கைக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.- Vidivelli