பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகைகள். அதன் சேவகர்கள் அல்லாஹ்வின் சேவகர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்ளிவாசல்களுக்கு உதவுவதிலும் நன்கொடைகள் வழங்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ளது. அது புனித சேவையாகவே கருதப்படுகிறது.
ஆனால் பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல் நிதியில் மற்றும் வக்பு சொத்துகளில் ஊழல்கள் இடம்பெற்று வருவதாக வக்பு சபைக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவுகளில் பண பலம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. சில பள்ளிவாசல்களில் ஒரே நிர்வாகிகள் தசாப்த காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பள்ளிவாசலைக் கட்டி ஆளுகின்றனர்.
பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவுகள் தொடர்பான பிணக்குகள் தீர்க்கப்படாது வருடக் கணக்கில் வக்பு சபையில் தேங்கிக் கிடக்கின்றன. இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் உருவாகாமல் இருப்பதற்கு ஒவ்வோர் பள்ளிவாசல்களின் ஜமாஅத்தார்களும் சமூகத்தில் நன்மதிப்புள்ள மார்க்கத்தில் பற்றுள்ள சமூக நலன்புரிகளில் ஆர்வமுள்ள புத்திஜீவிகளை நிர்வாகிகளாகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
ஒரு சில பள்ளிவாசல்களில் குறிப்பாக அதிகமான வருமானம், வசூல் ஈட்டும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் தாம் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கே விரும்புகின்றனர். அவ்வாறு தசாப்த காலமாக பதவியில் இருக்கும் அவர்கள் வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கணக்கறிக்கையைக் கூட சமர்ப்பிப்பதில்லை.
இதற்கு உதாரணமாக கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலைக் குறிப்பிடலாம். இப்பள்ளிவாசலில் தொடராகப் பதவி வகித்து வந்த நிர்வாகிகள் 2011 முதல் 2023 வரை 12 வருட காலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. வக்பு சபையினால் அப்பள்ளிவாசலுக்கு புதிதாக விசேட நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டதன் பின்பு 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது கணக்காய்வுக்குட்படாத அறிக்கை என வக்பு சபை தெரிவிக்கிறது.
அல்லாஹ்வின் மாளிகையை நிர்வகிக்கும் இவர்கள் ஏன் கணக்குகளை மறந்து விடுகிறார்கள். இது மாத்திரமல்ல அந்த நிர்வாகம் முஸ்லிம் நலன்புரி நிதியத்துக்கு செலுத்த வேண்டிய 6 வீத நிதியையும் செலுத்தத் தவறியுள்ளது.
இதேவேளை நோன்பு காலத்திலும் பழைய நிர்வாக தலைவர், புதிய நிர்வாகத் தலைவர் என முட்டி மோதிக் கொள்கிறார்கள். பள்ளிவாசலை நிர்வகிப்பவர்களின் பதவி மோகமே இதற்குக் காரணமாகும். இவ்வாறான ஒரு சம்பவம் மோதரை, எகொடஉயன பள்ளிவாசலில் இடம்பெற்றிருக்கிறது.
பள்ளிவாசல் மத்ரஸாவின் செயற்பாடுகளை முன்னாள் நிர்வாக சபைத் தலைவர் புதிய நிர்வாகத்திடம் கையளிக்காமையே இதற்குக் காரணம். இந்த முரண்பாடு பள்ளிவாசலுக்குள் சலசலப்பினை ஏற்படுத்தி இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.
மூவர் விசாரணைக்காக காலை முதல் மாலை வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்திலேயே அவர்கள் நோன்பும் துறந்துள்ளனர்.
ஏன் இந்த பதவி மோகம். தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர்களாக இருக்க விரும்புபவர்கள் பள்ளிவாசல்கள் மூலம் இலாபமீட்டுகிறார்களா? இவ்வாறான ஒரு சில நிர்வாகிகள் தொடர்பில் வக்பு சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட ரீதியில் பதவி வகிக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கள உத்தியோகத்தர்கள் சிலரும் இவ்வாறான பதவி மோகம் கொண்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வாறான உத்தியோகத்தர்களை திணைக்களம் நெறிப்படுத்த வேண்டும்.
அல்லாஹ்வின் மாளிகைகள் அனைத்து விடயங்களிலும் புனிதம் பெற வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும்.
தற்போது அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் விதுர விக்ரமவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு பள்ளிவாசல்களில் இவ்வாறான பிரச்சினைகள் எழா வண்ணம் கடுமையான சட்டத் திருத்தங்களை முன்மொழிய வேண்டும்.- Vidivelli