ஏ.ஆர்.ஏ.பரீல்
காஸாவின் வடபகுதியில் பட்டினியால் சிறுவர்களும், குழந்தைகளும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் Tedros Adhamom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களையடுத்து முதற்தடவையாக கடந்த வார இறுதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் அல் அவ்தா மற்றும் கமால் அத்வான் வைத்தியசாலைகளுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தினை அடிப்படையாகக் கொண்டே அவர் குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வைத்தியசாலை கட்டிடங்கள் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போஷாக்கின்மை, உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக 10 சிறுவர்கள் இறந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை காஸாவிலுள்ள ஹமாஸின் சுகாதார அமைச்சு, காஸாவிலுள்ள கமால் அத்வான் வைத்தியசாலையில் மாத்திரம் போஷாக்கின்மை மற்றும் உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக 15 சிறுவர்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை 16ஆவது குழந்தை காஸாவின் தெற்கு நகரான ரஃபா வைத்தியசாலையில் இறந்துள்ளதாக பலஸ்தீன் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா (WAFA) தெரிவித்துள்ளது. இந்த 16ஆவது குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளது.
போஷாக்கின்மை மற்றும் பட்டினியால் பிள்ளைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். வட காஸா வைத்தியசாலைகளில் உணவு மற்றும் வைத்திய உபகரணங்கள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. வைத்தியசாலை கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என டாக்டர் டெட்ரோஸ்குறிப்பிட்டுள்ளார். மூன்று இலட்சம் மக்கள் சிறிது உணவு மற்றும் குடிநீருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸாவில் பட்டினி தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என ஐக்கிய நாடுகள் கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
காஸாவின் சனத்தொகையில் ¼ வீதமான மக்கள் மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறைக்குள்ளாகியுள்ளனர் என்றும் ஐ.நாவின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஸாவின் வடபகுதியில் 6 சிறுவர்களுக்கு ஒருவர் வீதம் இரண்டு வயதுக்குட்பட்டவர்கள் போஷாக்கின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போஷாக்கின்மை காரணமாக நிகழும் சிறுவர் மரணங்கள் பெரும் பீதியை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது என யுனிசெப்பின் பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். போஷாக்கின்மை காஸாவில் குழந்தைகளையும் சிறுவர்களையும் பலியெடுத்து வருகிறது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வான்வழியான உணவு விநியோகம்
அமெரிக்கா கடந்த சனிக்கிழமை உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வான்வழியாக தரையிறக்கியது. கடந்த சனிக்கிழமை 38ஆயிரம் உணவுப் பொதிகள் காஸாவில் தரையிறக்கப்பட்டது.
ஏற்கனவே இதற்கு முன்பு ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் காஸா மக்களுக்கு வான் வழியாக உதவிப் பொருட்களை தரையிறக்கின என உதவி நிவாரண நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால் இந்த நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான விநியோகங்கள் சில வேளைகளில் உயிர் பலிக்கும் காரணமாகி விடுகின்றன.
உதவிப் பொருட்கள் விநியோகத்தின் போது உதவிப் பொருட்களுடன் காஸாவுக்குள் நுழைந்த லொறிகளைச் சூழ்ந்து பெருந்திரளான மக்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கிருந்த இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதால் அண்மையில்112 பலஸ்தீனர்கள் பலியானார்கள்.
எச்சரிக்கை வேட்டுக்களே தீர்க்கப்பட்டதாகவும், உதவிப் பொருள் உள்ளடங்கிய லொறி மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிகமானோர் அங்கிருந்து பயத்தில் ஓடியதால் நெருக்கடியில் சிக்கி மிதியுண்டு பலியாகி இருக்கிறார்கள் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் கூற்றினை ஹமாஸ் இயக்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இஸ்ரேல் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்ள கூடியிருந்த மக்கள் மீதே வேட்டுக்களைத் தீர்த்துள்ளது. இதற்கான சாட்சியங்கள் உள்ளன என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
உதவி விநியோகங்கள் துரிதப்படுத்தப்படும்
காஸா பிராந்தியத்திலுள்ள மக்கள் பட்டினியால் வாடுவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ், அந்தப் பிராந்தியத்துக்கான உதவி விநியோகங்களை அதிகரிப்பதற்கு வலியுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அலபாமா பிராந்தியத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்,
நாளாந்தம் காஸா அழிவடைந்து வருவதை நாம் பார்க்கிறோம். அங்குள்ள மக்கள் இலைகளையும் மிருகங்களையும் உணவாகக் கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்கள் போஷாக்கற்ற குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள் ஆரோக்கிய கவனிப்பின்றியும் போஷாக்கின்மை, நீரிழப்பு காரணமாக இறப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. காஸாவில் எதிர்வரும் 6 வார காலப் பகுதிக்கு உடனடி யுத்த நிறுத்தம் அவசியம். அத்தோடு இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காஸாவில் அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்றார்.
காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் –ஜெனிவாவில் இலங்கை
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என்பதுடன், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு உதவிகள் உரிய முறையில் சென்றடைய வேண்டும். இதேவேளை இத்தகைய மிக மோசமான மீறலைக் கருத்தில் எடுக்கத் தவறுவது சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக இயங்கும் கட்டமைப்பின் நேர்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் இலங்கை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற 55ஆவது கூட்டத் தொடரின் 13ஆவது அமர்வில் உறுப்பு நாடுகளின் கருத்துகளுக்குப் பதிலளித்து உரையாற்றிய இலங்கையின் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவிக்கையில்,
ஒரே சீனா கொள்கைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் மனித உரிமைகள் சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கி வரும் ஒத்துழைப்பை பெரிதும் வரவேற்பதாகவும் கூறினார்.
மேலும் உலகளாவிய ரீதியில் இடம்பெறக் கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பால் நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும் மனித உரிமைகளும் மிக மோசமாக மீறப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். – Vidivelli