(ஏ.ஆர்.ஏ.பரீல்,ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சவூதி அரேபியா அரசு ரமழான் நன்கொடையாக இலங்கை முஸ்லிம்களுக்கென 50 தொன் (50 ஆயிரம் கிலோ) பேரீத்தம் பழங்களை வழங்கியுள்ளது. பேரீத்தம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது.
கிடைக்கப்பெற்றுள்ள பேரீத்தம் பழங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நாடெங்குமுள்ள 2500 பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், பள்ளிவாசல் நிர்வாகங்கள் தங்களது ஜமாஅத்தினருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்களெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆலா அஹமட் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு வருடாந்தம் ரமழானில் சவூதி அரேபியா அரசு நன்கொடையாக பேரீத்தம் பழங்களை வழங்கி வருகின்றமைக்கு சவூதி அரேபியா அரசுக்கும் மன்னர் மற்றும் இளவரசர் சல்மான், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், சல்மான் நிலைய அதிகாரிகள் உட்பட தொடர்புபட்ட அனைவருக்கும் உதவிப்பணிப்பாளர் என்.நிலோபர் நன்றிகளைத் தெரிவித்தார்.
நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத்தூதுவர் அமீர் அஜ்வத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல், புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உட்பட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.– Vidivelli