பிணக்குகளுக்கு துரித தீர்வை வழங்க வக்பு சட்டத்தில் திருத்தம் அவசியம்
பிரதேச மட்ட அலுவலகர் நியமிப்பது குறித்தும் சலாம் குழு அவதானம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தெரிவு தொடர்பான பிணக்குகள் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு வக்பு சபை துரிதமாக தீர்வுகளை வழங்குவதற்கு புதிய திட்டமொன்றினை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் தலைவர் ஏ.டப்ளியு.எ.சலாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
பள்ளிவாசல்களில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் குறுகிய காலத்தில் தீர்த்து வைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள நடைமுறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வருடக்கணக்கில் நீண்ட காலம் விரயம் செய்யப்படுகின்றமையை தவிர்த்து குறுகிய காலத்துக்குள் தீர்வு வழங்கும் வகையில் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தீர்வுகள் வழங்குவதற்கான காலத்தை மட்டுப்படுத்தும் வகையில் பிரதேச செயலகங்களில் வக்பு சபை தனது அலுவலர் ஒருவரை பணிகளுக்காக அமர்த்தவுள்ளது. குறிப்பிட்ட அலுவலர் அப்பகுதியைச் சேர்ந்த படித்த ஒருவராக ஓய்வு பெற்ற நீதிபதி, அல்லது சட்டத்தரணியாக இருப்பார். இதனால் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நிர்வாக பிரச்சினைகளுக்கும் மக்கள் கொழும்புக்கு வருகை தர வேண்டிய நிலைமை ஏற்படாது. கால தாமதமும் தவிர்க்கப்படும் என குறிப்பிட்ட திருத்தங்களுக்கான நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அங்கத்தவர் ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அத்தோடு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு கொழும்பில் வக்பு சபையில் மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படும்.
வக்பு சட்டம் வக்பு சபை 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்று தெரிவித்திருந்தாலும் தற்போதைய நிலையில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் தீர்வுகளைத் துரிதப்படுத்துவதற்காக வக்பு சபை வாரம் இருமுறை அமர்வுகளை நடத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். – Vidivelli