தங்கம் கடத்திய விவகாரம்: அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால தடை
சபையில் பிரேரணை நிறைவேற்றியதையடுத்து பாராளுமன்றிலிருந்து வெளியேறிச் சென்றார்
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற சேவையை நேற்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடை நிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணை நேற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.
இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்ட நிலையிலேயே நேற்று ஒரு மாதத்திற்கான சேவைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கான சிறப்புரிமை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ்வினால் முன்வைக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமையவே அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால பாராளுமன்ற சேவைத் தடை விதிக்கப்பட்டது.
தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் அவர் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ்வினால் இந்த வருடத்தின் ஜனவரி 24ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையில் வழங்கப்பட்டிருந்த பரிந்துரைக்கு அமைய அவருக்கான ஒரு மாத கால சேவைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மேற்படி பிரேரணையை முன்வைத்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சிறப்புரிமை குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் பாராளுமன்ற சேவை இன்று 6ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இடை நிறுத்தப்பட வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது என்றார்.
அத்துடன், இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு கீழ்வரும் அறிவிப்பை விடுத்தார்.
அதில், “2023.05.23 ஆம் திகதி அலி சப்ரி ரஹீம் ஆகிய நீங்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டினை முறையற்ற வகையில் பயன்படுத்தி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் 70 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடன்கூடிய தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.
அச்சட்டவிரோதச் செயற்பாடு தொடர்பாக இலங்கைச் சுங்கத்தினால் தங்களுக்கு 75 இலட்சம் ரூபா தண்டப் பணம் விதிப்பதற்கும், கொண்டுவரப்பட்ட சகல பொருட்களையும் அரசுடைமையாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2018 ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 2018 ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் 06 வது பிரிவான “உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்ட பகிரங்க நம்பிக்கைக்கிணங்க செயலாற்றுதல் வேண்டும் என்பதுடன், எவையேனும் பொது வளங்களைப் பயன்படுத்துவது உட்பட அவர்களின் நடவடிக்கை எப்போதும் நேர்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும்” என்பதை மீறியுள்ளது.
24 ஆம் பிரிவான “உறுப்பினர் ஒவ்வொருவரும் பொதுப்பணத்திலிருந்து அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஏதேனும் செலவினங்கள், வசதிகள் மற்றும் சேவைகள் அத்தகைய கருமங்கள் மீது இடப்படும் விதிகளிற்கிணங்க உள்ளனவென உறுதிப்படுத்துவதற்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பாக இருக்கின்றனர். உறுப்பினர்கள் தங்களால் பயன்படுத்தப்படும் ஏதேனும் பகிரங்க வளங்கள் எப்போதும் தமது பாராளுமன்ற கடமைக்கு உதவி புரிவதாக உள்ளனவென உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் அது அத்தகைய உறுப்பினர்களின் அல்லது வேறெவரேனும் அல்லது ஏதேனும் அரசியல் அமைப்பின்மீது ஏதேனும் முறையற்ற, தனிப்பட்ட அல்லது நிதிசார் நன்மைகளை அளித்தல் ஆகாது” என்பதையும் மீறியுள்ளது.
உங்கள் முறையற்ற செயற்பாடு காரணமாக பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகையை முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இத்தால் கடிந்துரைக்கின்றேன்” என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், குறித்த பிரேரணையை சபை அனுமதிக்கிறதா என கேட்டபோது, சபை அதற்கு அனுமதி வழங்கியபோது, சபையில் இருந்த அவிசப்ரி ரஹீம் எம்.பியை படைக்கல உதவியாளர் அவரை சபையை விட்டு செல்லுமாறு தெரிவித்த போது அவர் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார். – Vidivelli