ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது
விட்டுக் கொடுப்பு அவசியம் என்கிறார் ஹக்கீம்
எம்.வை.எம்.சியாம்
எமது சமூகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் ஒரு சில விடயங்களை மாத்திரம் கட்டிப்பிடித்துக்கொண்டு முரண்பட்டு கொண்டிருக்கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்றமடைந்துள்ளன. சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சில விடயங்களை முஸ்லிம் சமூகமும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மாறவேண்டும். சர்ச்சைகளை வளர்த்துக்கொண்டு முரண்பட்டு கொண்டு இருக்காமல் கொஞ்சம் விட்டுகொடுத்து போகும் போது எமக்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஹெம்மாதகம கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கல்வித்துறையில் உயர் அடைவுகளைப் பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சல்மா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தில் எமக்குள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. நாமும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்று வழிகளை கடைபிடிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வளக்குறைப்பாட்டினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்களுக்கு மாற்று உபாய வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஸகாத் என்பது எமது மார்க்கத்தின் மிக முக்கியமான கட்டமைப்பு. ஆனால் ஸகாத் கடமையாகுவதற்கு முன்பு ஆரம்ப இஸ்லாமிய சமூகம் தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்தது. ஒருபோதும் அவர்கள் அளந்துக் கொடுக்கவில்லை. அளக்காமல் கொடுத்து வளர்ந்த சமூகம். நுபுவ்வதுக்கு 15 வருடங்களுக்கு பின்பு ஸகாத் கடமையானது. அந்த 15 வருட காலப்பகுதியில் மக்கா முஸ்லிம்கள் பல்வேறு துன்பத்தை அனுபவித்தார்கள். தம்மிடம் இருந்தவற்றை அனைத்தையும் கொடுத்தார்கள். அவ்வாறு கொடுத்து வளர்ந்த சமூகம் தான் நாம். இதனை நாம் சரியாக செய்யும் போது வறுமை என்ற ஒன்று இருக்காது.
குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. பெண்கள் இன்று பட்டப்படிப்பு துறையில் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். இது நல்லதொரு விடயமாகும். சில வருடங்களுக்கு முன்னர் எனது மகளும் சட்டத்துறையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். அங்கு அவருடன் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் 50 பேர் மாத்திரமே ஆண்கள். மற்றைய அனைவரும் பெண்கள். இவ்வாறே அனைத்து பீடங்களின் நிலைமையும் உள்ளது.
இதேவேளை, எல்லா துறைகளிலும் பெண்கள் தொழில் செய்ய முடியாது. எமது பெண்கள் ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்கிறார்கள்.வேறு தொழில்துறைகளுக்கு செல்வதற்கு அவர்களுக்கு பயம். இந்த நிலைமை மாற வேண்டும். இதற்கு எவ்வாறு மாற்று தீர்வு என்ன என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.மேலும் நாம் கல்வியில் முன்னேற காட்டும் ஆர்வத்தை போல சமூகத்தை முன்னேற்றுவதற்காகவும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் மாற்று சமூகங்கள் மத்தியில் எமது சமூகம் சார்ந்த புரிந்துணர்வுகளும் அவசியமாகும். அதில் நாம் எங்கு தவறு விடுகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தில் உள்ள அமைப்பு ரீதியான அம்சங்களின் முக்கியத்துவம் பற்றி மற்றையவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். மாற்று சமூகங்களுக்கு மத்தியில் எம்மை பற்றிய தவறான அபிப்பிரயாயத்தை இல்லாமல் செய்வது தொடர்பில் நாம் இன்னும் கவனம் செலுத்தவில்லை. சில விடயங்களை விட்டுக்கொடுக்காமல் முரண்பட்டு கொண்டும் அனைத்து விடயங்களிலும் மார்க்கம் கூறியுள்ள விழுமியங்களின் வரையறைகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும் அது தொடர்பில் சரியான புரிந்துணர்வு இல்லாமலும் இருக்கிறோம்.
ஆனால் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்காமல் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மாத்திரம் கட்டிப்பிடித்துக்கொண்டு முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகள்.
இவற்றை வைத்துக் கொண்டு கடுமையாக அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சில விடயங்களை முஸ்லிம் சமூகமும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதிகளவிலான முஸ்லிம் நாடுகளில் பெண்களையும் காதி நீதவான்களாக நியமித்து விட்டது. மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகள் இதற்கு நல்ல உதாரணமாகும். ஆனால் நாம் மாத்திரம் இதற்கு முரண்பட்டு கொண்டிருக்கிறோம். நாம் ஷாபி மத்ஹபை பின்பற்றி கொண்டு அதற்கு மேல் செல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். ஒரு கட்டத்தில் எமக்கு இருக்கும் இந்த தனியார் சட்டமும் இல்லாமல் போய் விடும்.
சர்ச்சைகளை வளர்த்துக்கொண்டு முரண்பட்டு கொண்டு இருக்காமல் கொஞ்சம் விட்டுகொடுத்து போகும் போது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மேலும் திருமண வயது எல்லை தொடர்பாகவும் கூறலாம்.
குர்ஆனில் ஓரிடத்தில் திருமண வயதெல்லை இதுவாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு சொல்லவில்லை. பக்குவ வயதை அடையும் போது அதாவது சொத்து விடயத்தில் அனாதைகள் வயதெல்லையை அடைந்து விட்டால் அவர்களின் சொத்துக்களை திருப்பி கொடுத்து விடுங்கள் என குர்ஆன் சொல்கிறது. சொத்துக்களை பற்றி கையாளுவதற்கு பேசும் குர்ஆன் திருமணம் செய்வதற்கு பக்குவம் இல்லாமல் பிள்ளைகளை தள்ளிவிடுமா என்பதை சிந்திக்க வேண்டும். இல்லை. என பல அறிஞர்கள் கூறுகிறார்கள். கால மாற்றத்திற்கு நாம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பதால் தான் சமூகம் முன்னேற முடியும்.
எந்தவொரு பிரச்சினையும் நீண்டகாலம் இழுபறி நிலையில் தொடரும்போது ஏனைய சமூகத்தினால், முஸ்லிம் சமூகத்தினர் கடும்போக்குவாதம் மற்றும் ஆணாதிக்கவாதம் நிறைந்த சமூமாகவே சித்தரிக்கப்படுவர். மாற்று சமூகங்களுக்கு மத்தியில் எமது சமூகம் தொடர்பில் நல்ல அபிப்பிராயங்களை ஏற்படுத்த நாமும் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வருவதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இஸ்லாம் அனைத்து விடயங்களிலும் எளிமையான விடயங்களை பின்பற்றுகிறது.
அண்மையில் ஒரு நிக்காஹ் வைபவத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நிகாஹ் உரையாற்றிய மௌலவி என்னிடத்தில் ஒரு விடயத்தை கூறினார். பயானை ஆண்களுக்கு மாத்திரமே செய்கிறோம். ஏன் நாம் திரைமறைவில் குறித்த மணப்பெண்ணையும் வைத்து பயானை கேட்க விட செய்யக்கூடாது என்றார். பெண்களையும் ஏன் நிக்காஹ் பயான்களை கேட்பதற்கு பள்ளிவாசலுக்கு அனுமதிக்க கூடாது என்றார்.
இஸ்லாம் அனைத்து விடயங்களிலும் எளிமையை விரும்புகிறது. இஸ்லாம் மிகவும் எளிமையாக கட்டியெழுப்பப்பட்ட மார்க்கம். ஏன் எமது எளிமையை பிற சமூகங்களுக்கு தெளிவுப்படுத்த கூடாது. நிக்காஹ் வைபவங்களின் போது ஏன் முஸ்லிம் அல்லாத நண்பர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது. சில சந்தர்ப்பங்களில் எமது பள்ளிகளை பார்வையிட அனுமதிக்கிறோம். இவற்றில் என்ன பிழை இருக்கிறது.
அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றுபட வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எம்மை பிளவுபடுத்தி மேற்கொள்ளும் அரசியல் சூழ்ச்சிக்கு சிக்கிக்கொள்ளாமல் அதனை பகிரங்கமாக சுட்டிக்காட்ட வேண்டும். முதலில் எமக்குள் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். எங்கு பார்த்தாலும் எமது பிரச்சினைகள் பேசும் பொருளாக காணப்படுகிறது. இந்த நிலைமையை முதலில் இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாம் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும் என்றார். – Vidivelli