ஏ.ஆர்.ஏ.பரீல்
கொள்ளுப்பிட்டியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்ளிவாசல் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகும். இப்பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கு இன்று சவால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய விஷேட நிர்வாக சபைக்கெதிராக வக்பு சபையில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் சுமார் 1250 குடும்பங்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பள்ளிவாசலில் இதுவரை காலம் பதவியிலிருந்த நிர்வாக சபையின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி காலாவதியாகியது. இந்நிலையில் அப்போதைய நிர்வாக சபை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு புதிய நிர்வாக சபை தெரிவு தொடர்பில் கடிதம் ஒன்றினை பதிவுத் தபால் மூலம் 2023 ஆகஸ்ட் 13ஆம் திகதி அனுப்பி வைத்ததாக அப்போதைய நிர்வாக சபை உதவிச் செயலாளர் எம்.ஜே.எம். முபாறக் தெரிவித்தார். கடிதத்தில் புதிய நிர்வாக சபை தெரிவுக்கு திகதி ஒதுக்கித் தருமாறும் திணைக்களத்தின் அதிகாரியொருவரை அன்றைய தினம் அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டிருந்தது எனவும் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
ஆனால் திணைக்களம் பதில் அனுப்பவில்லை. அதனால் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கு தேர்தல் நடத்துவது பற்றி நாம் இரண்டு ஜும்ஆக்களில் மக்களுக்கு அறிவித்தோம்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு பெட்டிஷன் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் கொள்ளுப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் விஷேட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையொன்றினை நியமிக்கும்படி கோரப்பட்டிருந்தது. அத்தோடு நாங்கள் ஜனவரி 14ஆம் திகதி கூட்டப்படவிருந்த ஜமா அத்தார் சங்க பொதுக் கூட்டத்தையும் ரத்துச் செய்யும்படியும் கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்தே திணைக்களமும், வக்பு சபையும் எம்மை கடந்த ஜனவரி 10ஆம் திகதி அழைத்து திடீரென நிர்வாக சபை கலைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வெற்றிடத்துக்குப் புதிதாக 9 பேர் கொண்ட விஷேட நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது என்றும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பதவி விலக்கப்பட்ட நிர்வாக சபை கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து பதவி வகித்து வந்துள்ளது. எமது நிர்வா சபை மஹல்லாவாசிகளுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளது. தற்போதைய வக்பு சபை எவ்வித விசாரணைகளும் நடத்தாமல் எம்மை பதவி விலக்கியுள்ளது.
தற்போது விஷேட நிர்வாகிகளாக 9 பேர் இப்பகுதி மக்களை கலந்தாலோசிக்காது வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ளனர். வக்பு சபை இப்பகுதி மக்களின் விருப்பத்துடனே புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நிலை
வக்பு சபை இப்பள்ளிவாசலை நிர்வகிப்பதற்காக 9 பேர் கொண்ட புதிய நிர்வாக சபையொன்றினை நியமித்திருந்தாலும் முன்னைய நிர்வாக சபையினால் உரிய ஆவணங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை. பழைய நிர்வாக சபை ஆவணங்களைக் கையளிக்க தொடர்ந்தும் மறுத்து வருகிறது. அத்தோடு புதிய விஷேட நிர்வாக சபை தெரிவினையடுத்து கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகையினையடுத்து பள்ளிவாசலுக்குள் மஹல்லாவாசிகளால் அமைதிக் கண்டனப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘ஜமாஅத்தைக் கூட்டி, புதிய நிர்வாக சபையை தெரிவு செய்க’, ‘பின்கதவால் வந்தவர்களுக்கு பள்ளிவாசலை நிர்வகிக்க இடமளிக்க முடியாது’ என பதாதைகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வக்புசபை என்ன கூறுகிறது?
வக்பு சபை சட்ட வரம்புக்குள்ளேயே கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையைக் கலைத்து விட்டு அவ்வெற்றிடத்துக்கு புதிதாக விஷேட நிர்வாக சபையொன்றினை நியமித்துள்ளது. இவ்விஷேட நிர்வாக சபையில் 9 பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்நியமனத்தை மீள்பரிசீலனை செய்யும்படி முன்னாள் நிர்வாகிகள் கோரியுள்ள அதே நேரத்தில் புதிய நியமனத்துக்கு எதிராக வக்பு சபையில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வக்பு சபையின் உறுப்பினரொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அத்தோடு முன்னாள் நிர்வாக சபை கணக்குகளை பரிசோதனை செய்து வக்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மேலும் 2020 இலிருந்து ஜமாஅத்தார் பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை. அத்தோடு 2019 ஆம் ஆண்டு கடந்த நிர்வாக சபை தாம் 300 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி திட்டமொன்றினை வரைந்துள்ளதாகக் கூறி கடந்த 6 வருட காலமாக காலத்தைக் கடத்தியுள்ளது. ஆனால் எவ்வித அபிவிருத்தி திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான காரணங்களை முன்வைத்தே முன்னாள் நிர்வாக சபை பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய விஷேட நிர்வாக சபை நியமிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விஷேட நிர்வாக சபைக்கு வக்பு சபை பொறுப்புகளை வழங்கியுள்ளதுடன் சில கடமைகளையும் பணித்துள்ளது. பள்ளிவாசல் சொத்து விபரங்களை கையளித்தல், உடனடியாக ஜமா அத்தார் பட்டியலைத் தயாரித்தல், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தல் என்பனவே அவை.
முன்னாள் நிர்வாக சபை என்ன கூறுகிறது?
வக்பு சபை குற்றம் சுமத்தியுள்ள பள்ளிவாசல் கணக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை முன்னாள் நிர்வாக சபை ஏற்றுக் கொள்கிறது. முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஜே.எம். முபாரக்கிடம் இது தொடர்பில் வினவிய போது அது எங்களது தவறு என அவர் ஏற்றுக்கொண்டார்.
அத்தோடு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தினம் மக்களால் வழங்கப்படும் பணம் பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். வக்பு சபை முன்பு கணக்கறிக்கை தொடர்பில் எம்மைக் கோரவுமில்லை. நாம் வழங்கவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 3 வருடத்துக்கான கணக்கறிக்கையை கடந்த ஜனவரி 10ஆம் திகதி வக்பு சபையிடம் ஒப்படைத்தோம். அதற்கு முன்னைய கணக்கு விபரங்கள் கணினியிலிருந்து அழிவடைந்துள்ளது. அது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கியிடம் கோரியிருக்கிறோம். கிடைத்ததும் வக்பு சபையிடம் கையளிப்போம்.
வக்பு சபை குற்றம் சுமத்தியுள்ள 300 கோடி செலவிலான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதாக கூறி வெறுமனே காலத்தைக் கடத்தியது தொடர்பில் முன்னாள் நிர்வாக சபையிடம் விளக்கம் கோரிய போது முபாரக் பின்வருமாறு பதிலளித்தார்.
‘300 கோடி ரூபா செலவிலான அபிவிருத்தி திட்டமொன்றினை மேற்கொள்வதற்கு நாம் திட்டம் வகுத்திருந்தோம். 2019இல் இத்திட்டம் வகுக்கப்பட்டது. என்றாலும் அத்திட்டத்தை சில காரணங்கள் நிமித்தம் முன்னெடுக்க முடியாமற் போனது. திட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமிய வங்கியில் கடன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான நிதியம் ஒன்றினையும் உருவாக்கி 15 பேர் கொண்ட குழுவினரையும் நியமித்தோம்.
இந்த திட்டம் 8 மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றினை நிர்மாணிப்பதாகும். இத்திட்டத்துக்கு அருகிலிருக்கும் அலரி மாளிகை (Temple trees) அனுமதி வழங்கியிருந்தது. கட்டிடத்துக்கான வரைபடமும் தயார் நிலையில் இருந்தது. கட்டிடம் அமையவுள்ள காணிக்கு கீழால் நிலத்தடியில் கழிவு நீர் செல்வதால் மாநகர சபை அனுமதி தரவில்லை. இக் கழிவு நீரை முகாமைத்துவம் செய்து மாற்று வழியால் செல்வதற்கு பல மில்லியன் ரூபா திட்டம் வகுத்திருந்தோம். ஆனால் இத்திட்டங்களின் ஆரம்ப பணிகள் நிறைவுற்ற நிலையில் எமது பதவிக்காலம் முடிந்துவிட்டது.
பின்பு கொரோனா காலத்திலும் நாம் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டியேற்பட்டது என்றார்.
வக்பு சபை தீர்வு வழங்க வேண்டும்
வக்பு சபை ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகங்கள் மீதும் வக்பு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் விவகாரத்தில் பள்ளிவாசலின் வருடாந்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட கணக்கறிக்கையை முன்னைய வக்பு சபை பொறுப்பாளர் கோரவில்லை. அதனால் நாம் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளுக்கு வக்பு சபை இடம் வைக்கக்கூடாது. இதன் பின்பேனும் தற்போது அதிகாரத்திலுள்ள வக்பு சபை பொறுப்புணர்ச்சியுடன் தியாக சிந்தையுடன் செயற்பட வேண்டும். இதேவேளை பள்ளிவாசல் நிர்வாகங்கள் தமது பொறுப்புகளை ஏனோ தானோவென்று முன்னெடுக்கக் கூடாது என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli