(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற்றுக்கொள்வதற்காக குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.
அத்துடன், இப்தார் வைபவங்களுக்காக செலவிடும் பணம் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த திங்கட்கிழமை சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குவைத் நாட்டின் தேசிய தின வைபவத்தின் போது இத்தகவலை வெளியிட்டார்.
குவைத் தேசிய தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தனது உத்தியோகபூர்வ உரைக்கு முன்பாக இத்தகவலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள பலஸ்தீனர்களுக்கு இச்சூழ்நிலையில் உதவிகள் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் வழமையாக வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வுகள் இந்த வருடம் ரமழானில் இடம்பெறமாட்டாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரமழான் இப்தார் ஏற்பாடுகளுக்கு உத்தரவிடமாட்டார்கள்.
இந்த இப்தார் வைபவங்களுக்காக வழமையாக ஒதுக்கப்படும் நிதி பலஸ்தீனர்களுக்கான நிதியத்துக்கு மாற்றப்படும். அரசாங்கம் பலஸ்தீனர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளது. இந்த பலஸ்தீனர்களுக்கான நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பைச் செய்ய விரும்புவர்கள் அனுப்பி வைக்க முடியும் கிடைக்கப் பெறும் உதவிகள் பலஸ்தீன் நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கை, குவைத் அரசாங்கத்திற்கிடையில் 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையானது பல வசதிகளை வழங்குகிறது. இதனால் குவைத் நாட்டின் முதலீட்டாளர்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இலங்கை மற்றும் குவைத்துக்கிடையிலான இராஜதந்திர உறவு ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை இவ்விரு அரசுகளும் பரஸ்பரம் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றன.
அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் மூலம் சலுகைக் கடன்களை வழங்கி இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு குவைத் அரசாங்கம் வழங்கிய ஆதரவானது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளதை இங்கு குறிப்பாக நினைவுகூர வேண்டும்.
குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குவைத் இரண்டாவது தாயகமாகவுள்ளது. இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள குவைத் அரசாங்கத்திற்கு எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிபுணர்களை வழங்குவதன் மூலம் குவைத்தின் வளர்ச்சிக்கு பங்காளியாக இருக்க விரும்புகிறோம்.
2020 பெப்ரவரி மாதம் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் குவைத் வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மேம்படுத்துவதற்காக வருகை தந்தால், அது பெரும் சாதகமான முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.- Vidivelli