ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

0 185

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்­களில் நாம் அடைய இருக்­கின்றோம். இந்த ரமழான் எல்லா வகை­யிலும் பயன்­மிக்­க­தாக அமைய வல்­லவன் அல்லாஹ் எம் அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பா­னாக!

பொது­வாக உல­கமும் எமது தேசமும், முஸ்லிம் உம்­மத்தும் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் நாம் இவ்­வ­ருட ரம­ழானை சந்­திக்­கின்றோம். எமது நாடு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது. இதனால் இந்­நாட்டு மக்கள் இன, மத வேறு­பா­டில்­லாமல் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்.

மேலும், போதைப் பொருள் பாவிப்­போரின் எண்­ணிக்­கையும் கூடிக் கொண்டே செல்­கின்­றது. குறிப்­பாக, பாட­சாலை மாணவ, மாண­வி­களும் இளை­ஞர்­களும் இப்­பா­வ­னைக்கு அடி­மை­யாகி வரு­கின்­றனர். இதனால் எதிர்­கா­லத்தில் சமூ­கத்­திற்கு தலை­மைத்­துவம் வழங்­க­வேண்­டிய இவர்­க­ளது நிலை கவ­லைக்­கி­ட­மாக மாறி­யுள்­ளது.

முஸ்லிம் உம்­மத்தின் நிலையை அவ­தா­னிக்கும் போது கவலை தரும் நிகழ்­வு­க­ளு­டனே உலக முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தை அடை­ய­வுள்­ளனர்.
முஸ்­லிம்­களின் புனித பூமி­யுடன் தொடர்­பான பாலஸ்­தீன விவ­காரம் நெருக்­க­டி­யான கட்­டத்தை அடைந்­துள்­ளது. நபி (ஸல்) அவர்­களும், அவர்­க­ளது தோழர்­களும் அஹ்ஸாப் யுத்­தத்தின் போது எவ்­வா­றான பயங்­கர சோத­னைக்கு முகம் கொடுத்­தார்­களோ அதற்கு ஒப்­பான சோத­னைக்கு பாலஸ்தீன் மக்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர்.

ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் பாலஸ்­தீன மக்­க­ளுக்கு உதவி செய்ய முடி­யாத கையா­லா­காத நிலையில் அந்த நாடுகள் இருப்­பது மிகுந்த கவ­லையை தரு­கி­றது. பாலஸ்­தீன மக்கள் அல்லாஹ் மாத்­தி­ரமே தமக்கு உதவி செய்வான் என்ற ஆழ்ந்த நம்­பிக்­கை­யுடன், மிகுந்த பொறு­மை­யுடன் தமது இருப்­புக்­கான போராட்­டத்தை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
வல்­லவன் அல்லாஹ் அவர்­க­ளுக்கு விமோ­ச­னத்தை விரைவில் வழங்­கு­வா­னாக!

இத்­த­கைய தேசிய, சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளுடன் ரமழான் மாதத்தை சந்­திக்­க­வுள்ள நாம் எமக்கு முன்னால் உள்ள கட­மை­களை சரி­யாகப் புரிந்து செயற்­பட வேண்டும்.

இவ்­வ­கையில் தேசிய ஷூரா சபை ரமழான் மாதம் தொடர்பில் பின்­வரும் வழி­காட்­டல்­களை இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கு­கி­றது:-

1. அல்­குர்ஆன் – ரமழான் அல்­குர்ஆன் இறங்­கிய மாதம். எனவே அல்­குர்­ஆனை அதி­க­மாக ஓதுவோம். அதன் கருத்­துக்­களை அறிந்து கொள்­ளவும் அதன் படி நடக்­கவும் முயற்சி எடுப்போம். அதன் சில வச­னங்­களை அல்­லது சூராக்­க­ளை­யா­வது மன­ன­மிட நேரத்தை ஒதுக்கிக் கொள்வோம்.
2. தொழுகை – பர்­ளான தொழு­கை­களை உள்­ளச்­சத்­தோடு உரிய நேரங்­களில் ஜமா­அத்­தாக நிறை­வேற்­று­வ­தோடு ஏனைய நபி­லான வணக்­கங்­களில் இயன்ற வரை அதி­க­மாக ஈடு­பட்டு எமக்கும் ரப்­புக்கும் இடை­யி­லான உறவை மென்­மேலும் பலப்­ப­டுத்திக் கொள்வோம்.
3. பாவச் செயல்கள் –ஏனைய காலங்­களில் பொது­வா­கவும் குறிப்­பாக ரம­ழா­னிலும் அல்லாஹ் விரும்­பாத காரி­யங்­களில் அதா­வது, பாவச் செயல்­களில் ஈடு­ப­டா­தி­ருப்போம். ரமழான் காலத்துப் பாவங்கள் அல்­லாஹ்வை அதிகம் கோபப்­ப­டுத்தும் என்­ப­தையும் நாம் ஆழ­மாகப் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், ரமழான் மாதம் நல்­ல­மல்­க­ளுக்­கான பருவ கால­மாக இருப்­பதால் அவற்றில் ஈடு­பட்டு அதி­க­ம­திகம் நன்­மை­களை தேடிக் கொள்­ளாமல் அதற்கு மாற்­ற­மாக பாவச் செயல்­களில் ஈடு­ப­டு­வது மிகப்­பெ­ரிய முரண்­பா­டாகும். நல்­ல­மல்­களில் ஈடு­படும் அதே­வேளை பாவச் செயல்­க­ளிலும் ஈடு­ப­டு­வது குளித்துக் கொண்­டி­ருக்­கையில் சேற்­றையும் பூசிக்­கொள்­வது போன்ற விசித்­தி­ர­மான போக்­காகும்.எனவே ரமழான் காலத்தில் பாவங்­களில் ஈடு­ப­டு­வதை முற்­று­மு­ழு­தாகத் தவிர்ப்­போ­மாக!
4. சர்ச்­சைகள் – ரமழான் காலத்து அமல்­க­ளுடன் தொடர்­பான சட்ட விவ­கா­ரங்­களில் இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் காணப்­படும் கருத்து வேறு­பா­டு­களில் அளவு கடந்து ஈடு­பாடு காட்­டு­வது புனித ரம­ழானின் பிர­தான இலக்­கு­களில் இருந்து எம்மை திசை திருப்பி விடும் என்­பதை கவ­னத்தில் எடுத்து கருத்து வேறு­பா­டு­களை சகித்துக் கொண்டு எமக்கு மத்­தி­யி­லான ஒற்­று­மைக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்போம்.
5. பொரு­ளா­தாரம் – மிகப் பயங்­க­ர­மான பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்­துள்ள மக்­க­ளுக்கு இயன்ற வரை அதி­க­மாக உதவி செய்ய முற்­ப­டுவோம். முஸ்லிம் அல்­லாத சகோ­தர்­க­ளுக்கும் எமது உத­விகள் சென்­ற­டைய வேண்டும். கட­மை­யான ஸகாத்தை உரிய முறையில் கணக்­கிட்டு முறை­யாகக் கொடுத்து, ஸத­காக்­களை வழங்கி, அல்­லல்­ப­டு­வோரின் துயர் துடைத்து, உள்­ளங்­களில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தோடு அல்­லாஹ்வின் திருப்­தி­யையும் பெற்றுக் கொள்வோம்.
6. வீண்­வி­ரயம் – பொது­வாக எல்லாக் காலத்­திலும் குறிப்­பாக இந்த புனி­த­மான மாதத்­திலும் உணவு, உடை போன்­ற­வற்றில் வீண்­வி­ரயம் செய்­வதை முழு­மை­யாகத் தவிர்ந்து கொள்வோம். இஸ்லாம் வீண்­வி­ர­யத்தை தடை­செய்­தி­ருக்­கி­றது. அது ஷைத்­தானின் சகோ­த­ரர்­க­ளது பண்பு என அல்­குர்ஆன் (இஸ்ரா:27) குறிப்­பி­டு­கின்­றது. நாம் செய்யும் வீண்­வி­ரயம் பல­போது மற்­ற­வர்­களின் அத்­தி­யா­வ­சியத் தேவை­யாக இருக்­கலாம் என்­பதைக் கவ­னத்திற் கொள்வோம்.
7. பொழு­து­போக்கு – தேவை­யற்ற பொழுது போக்­கு­களைத் தவிர்க்க வேண்டும். நேரம் என்­பது வாழ்க்­கை­யாகும். குறிப்­பாக இளை­ஞர்கள் மற்றும் மாண­வர்கள் வீண் விளை­யாட்­டுக்­களில் ஈடு­ப­டாமல் தமது பொன்­னான நேரங்­களை பய­னுள்ள செயல்­களில் கழிக்க வேண்டும். இதற்­காக ஊர் தலை­மைகள் தமது மஹல்­லாக்­களில் பய­னுள்ள திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த முடியும். இவற்றை திட்­ட­மி­டு­வது, அமு­லாக்­கு­வது போன்­ற­வற்றில் இளை­ஞர்­களை உள்­வாங்கிக் கொள்ள முடியும்.
8. பிற சமூ­கங்கள் – பல்­லின சமூ­கத்தில் நாம் வாழு­கிறோம் என்­பதால் பொது­வாக எல்லாக் காலங்­க­ளிலும் குறிப்­பாக ரம­ழா­னிலும் பிற­ச­ம­யத்­த­வர்­க­ளது உணர்­வு­களை நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்­கிகள்,வீட்டின் தொலை­காட்சி மற்றும் வானொலிப் பெட்­டிகள் என்­ப­வற்றை பிற­ருக்கு தொந்­த­ர­வாக இல்­லாமல் பாவித்துக் கொள்ள வேண்டும். ஸஹர், இஃப்தார்,தராவீஹ் பயான்கள் என்­ப­வற்றின் போது இந்த அவ­தானம் கூடு­த­லாகத் தேவை. இரவு காலங்­களில் பாதை­களில் விளை­யா­டு­வது, ஆங்­காங்கே நின்ற வண்ணம் அரட்­டை­ய­டிப்­பது, கூச்­ச­லி­டு­வது போன்­ற­வற்றை குறிப்­பாக இளை­ஞர்கள் முற்­றாக தவித்துக் கொள்ள வேண்டும். புனித ரமழான் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு இடை­யூ­றான மாதம் என்ற உணர்வை நாம் அவர்­க­ளது உள்­ளங்­களில் ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது.
9. துஆச் செய்­வது – எமது தேவை­களை நிறை­வேற்­றித்­தரும் படி வல்­லவன் அல்­லாஹ்­விடம் வேண்­டு­வ­தோடு எமது பாவங்­களை மன்­னிக்­கும்­படி அதி­க­மாக மன்­றா­டுவோம். பொது­வாக உல­கமும், எமது நாடும், குறிப்­பாக முஸ்லிம் சமூ­கமும் எதிர்­கொண்­டுள்ள பல்­வேறு சவால்­களில் இருந்து வெளி­வ­ரவும், முஸ்லிம் உம்­மாவின் நிலை சீரா­கவும், முஸ்லிம் நாடு­களில் ஸ்தீரத்­தன்மை ஏற்­ப­டவும் அல்­லாஹ்­விடம் கையேந்திப் பிரார்த்­தனை செய்வோம்.
இவ்­வு­லகில் நிலவி வருகின்ற அநீதி, அட்டூழியம், அராஜகம் என்பன இல்லாதொழிந்து, நீதி, சமாதானம், ஐக்கியம் என்பன ஏற்படவும் நாம் தொடராகப் பிரார்த்தனை செய்வோம்.

ரமழான் மாதம் முஸ்லிம் சமூகத்திற்கு வெற்றியை கொண்டு வந்த மாதம் என்பது எமது வரலாறாகும். எமது வாழ்க்கையில் பாவங்களைக் குறைத்து, நன்மைகளை அதிகரித்து, அல்லாஹ்விடம் எமது முறைப்பாடுகளை நம்பிக்கையுடன் முன்வைப்போம். அவனே அனைத்தையும் அறிந்தவன். அடியார்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றவன்.

யா அல்லாஹ், இந்த புனித ரமழான் மாதத்தில் உன்னை திருப்திப் படுத்தும் அமல்களில் ஈடுபட்டு, உனது நெருக்கத்தைப் பெற்றவர்களது கூட்டத்தில் எம்மையும் சேர்ப்பாயாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.