எப்.அய்னா
குருணாகல் மாவட்டம் கிரி உல்ல கல்வி வலயத்துக்கு உட்பட்ட சியம்பலாகஸ்கொட்டுவ,மதீனா தேசிய பாடசாலையின் பிரச்சினை இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் மிகப் பெரும் பேசுபொருளாக பேசப்பட்டு வருகின்றது. சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயிலும் முன்னணி பாடசாலையான இந்த தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரு மாணவர் கூட, கடந்த 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாடசாலை செல்லாமை அதற்கான பிரதான காரணியாக அடையாளப்படுத்தலாம். இதனைவிட சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்கம், பெற்றோர் என அனைவரும் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்த விவகாரம் பாராளுமன்றம் வரை கவனத்தை ஈர்த்துள்ள நிலையிலேயே உண்மையில் இந்த விடயத்தின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த கட்டுரை ஆராய்கிறது.
பிரச்சினை என்ன?
மதீனா தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபராக கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த ஹைதர் அலி என்பவர் கடமையாற்றுகின்றார். இவ்வாறான பின்னணியில், கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐ சேர்ந்த அமீர் என்பவருக்கு அப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்குமாறு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தான் பிரச்சினையின் அடிப்படை.
பின்னணி:
பல கல்விமான்களை உருவாக்கிய நாடளாவிய ரீதியில் பிரபலமான மதீனா தேசிய பாடசாலை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கலானது. இரு வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர் ஒருவர் இன்றி பாடசாலையானது அதன் கல்வி வரலாற்று பின்னணியை மறந்து பயணிக்கலானது. இவ்வாறான பின்னணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த அப்போது சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டப் பணிப்பாளராகவிருந்த ஹைதர் அலி என்பவரை, பாடசாலை சமூகம் கல்வி அமைச்சின் ஒப்புதலுடன் அவர்கள் ஊடாக பாடசாலையின் அதிபராக நியமித்து, பாடசாலையை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை கையளித்தனர்.
அதன் பெறுபேறு, கடந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில், சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தது. இதனைவிட பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பு, புத்தகக் கல்விக்கு மேலதிகமாக மாணவர்களின் இணை பாட விதானங்களில் விருத்தி என பல மாற்றங்களை அப்பாடசாலை சமூகம் உணர்ந்தது.
இவ்வாறான நிலையில் தான் வெற்றிப் பாதையில் காலடி எடுத்து பயணிக்க ஆரம்பிக்கும் போது புதிய அதிபரை நியமிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாடசாலை சமூகம் எதிர்ப்பு வெளியிட்டு, ஆர்ப்பாட்டம், புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
புதிய அதிபர் நியமனம் ஏன்?
இந்த தேசிய பாடசாலையில் 2500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றாலும், இதுவரை அப்பாடசாலைக்குரிய அதிபர், அதிபர் சேவையின் தரம் 1 இற்குரியவராகவே இருந்து வருகின்றார். அதனாலேயே கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த அதிபர் ஒருவர் கடமைகளை முன்னெடுக்கும் பின்னணியில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த ஒருவர் வெற்றிடத்தின் அடிப்படையில் பொதுச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அதிபரை நியமிப்பது யார்:
ஆனால், தேசிய பாடசாலைக்கு அதிபர்களை நியமிக்கும் உண்மை அதிகாரம் பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கு இருந்தாலும், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த அதிகாரத்தை அமுல் செய்யும் உத்தியோகபூர்வ அனுமதி கல்வி அமைச்சின் செயலாளருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், தற்போது புதிதாக நியமனக் கடிதம் பெற்றுள்ள அதிபர் சேவையை சேர்ந்த அதிபரை, மதீனா தேசிய பாடசாலைக்கு நியமிக்க வேண்டாம் என அப்பாடசாலைச் சமூகம் எழுத்து மூலம் கல்வி அமைச்சை கோரியிருந்த பின்னணியில் அந்த நியமனக் கடிதம் எந்த விசாரணைகளும் இன்றி கையளிக்கப்பட்டுள்ளமை பாடசாலை சமூகத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனாலேயே அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நியமனக் கடிதத்துடன் வரும் புதிய அதிபரை அவர்கள் பாடசாலைக்குள் கடமைகளை பொறுப்பேற்க அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறி தொடர்ச்சியாக பாடசாலை முன் ஒன்று திரண்டு உள்ளனர்.
முஸ்லிம் தலைமைகள் என்ன செய்கின்றனர்?:
சுமார் 2500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக மட்ட தலைவர்கள் பலரும் அக்கறை கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விவகாரத்தை நடப்பு விவகார பிரச்சினையாக முன் வைத்து பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைவிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இப்பாடசாலை நிர்வாக சேவை தரத்தை உடைய அதிபர் ஒருவர் மட்டுமே கடமையாற்ற முடியுமான அத்தனை தகைமைகளையும் கொண்டுள்ளதால், அத்தரத்துக்கு தரமுயர்த்துவதன் ஊடாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கையை கல்வி அமைச்சரிடம் நேரடியாக கொண்டு சென்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானும் இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடி உடனடி தீர்வினை கோரியுள்ளார்.
கல்வி அமைச்சர் சொல்வதென்ன?:
இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மிக்க கரிசனை காட்டுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போதைய புதிய அதிபர் நியமனத்தை ரத்து செய்ய தன்னால் தலையீடு செய்வது பொருத்தமற்றது எனவும் இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வொன்றினை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த ஒருவரே அதிபராக கடமையாற்ற முடியும் வண்ணம் பாடசாலையை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஒட்டுமொத்த பாடசாலை சமூகமும் எதிர்க்கும் பின்னணியில் புதிய நியமனக் கடிதம் பெற்ற அதிபர் அப்பாடசாலையில் கடமைகளை முன்னெடுத்து செல்வது சாத்தியமே இல்லை என சுட்டிக்காட்டும் கல்வி அமைச்சர், மிக விரைவில் விடயத்துக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கா வண்ணம் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார்.
பின்னணியில் சதி:
சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் வெற்றிப் பயணத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கையாகவும் இந்த அதிபர் விவகார பிரச்சினை பார்க்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சொத்துக்களில் ஒன்றான இப்பாடசாலையை கட்டிக் காத்து, அதன் பயனை எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. எனவே தனிப்பட்ட நலன்கள், வேறுபாடுகளை மறந்து சமூக நலனை முன்னிறுத்தி இப்பாடசாலையின் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். – Vidivelli