எம்.ஐ.அப்துல் நஸார்
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளுக்கு பாதுகாப்பு தேவைகளைக் கருத்திற்கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் திங்கட் கிழமையன்று அறிவித்தது.
காஸா போரில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாகக் காணப்படும் ஹமாஸ் அமைப்பு உத்தேச கட்டுப்பாடுகளை கண்டித்துள்ளதுடன், பலஸ்தீன மக்கள் இக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அணிதிரள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.
உலக முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான அல்-அக்ஸா பள்ளிவாசல் கருதப்படுவதோடு, யூதர்களால் விவிலிய காலத்தின் கோவில்களின் தளமாகவும் மதிக்கப்படுகிறது. குறித்த இடத்திறகுச் செல்லுதல் குறிப்பாக ரமழான் போன்ற விடுமுறைக் காலங்களில் அங்கு செல்லுதல் பதற்றம் ஏற்படுத்தும் செயற்பாடாகக் காணப்படுகின்றது. இந்த வருட ரமழான் மாதம் மார்ச் 10 அல்லது அதை அண்மித்த திகதியொன்றில் ஆரம்பமாகின்றது.
இஸ்ரேலில் வாழும் முஸ்லிம்கள் அல்-அக்ஸாவுக்குச் செல்வதைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கேட்கப்பட்டபோது, நெதன்யாகுவின் அலுவலகம் கூறியதாவது: ‘பாதுகாப்புத் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக சுதந்திரத்தை வழங்கும் வகையில் பிரதமர் நடுநிலையான முடிவொன்றை எடுத்துள்ளார்’ எனினும் இது தொடர்பில் மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நெதன்யாகுவின் அரசாங்கத்தின் தீவிர வலதுசாரிக் கூட்டணிப் பங்காளியான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் ஜிவிர் கருத்துத் தெரிவிக்கையில் ‘இஸ்ரேலை வெறுப்பவர்கள் ஹமாஸ் தலைமைக்கு ஆதரவைக் காட்டுவதற்காகவும், வன்முறையைத் தூண்டவும் இந்த நிகழ்வைப் பயன்படுத்துவார்கள்’ எனத் தெரிவித்தார்.
‘டெம்பிள் மவுண்டில் நடைபெறவுள்ள வெற்றிக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வெறுப்பாளர்கள் நுழைவது இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்லை ஏற்படுத்தும்’ எனவும் பென் ஜிவிர் தெரிவித்தார்.
‘இக் கட்டுப்பாடுகள் எமது பலஸ்தீன மக்களுக்கு எதிரான பயங்கரவாத ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் தீவிரவாத குடியேறிகள் குழு தலைமையிலான சியோனிச குற்றவியல் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான போரின் தொடர்ச்சி’ என உத்தேச கட்டுப்பாடுகளை ஹமாஸ் வருணித்துள்ளது.
‘இந்த குற்றவியல் முடிவை நிராகரித்து, ஆக்கிரமிப்பு அரசின் ஆணவம் மற்றும் அடாவடித்தனத்தை எதிர்த்து, அல்-அக்ஸா பள்ளிவாசல் விடயத்தில் உறுதியாக நிற்க அணிதிரள வேண்டும்’ என இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. – Vidivelli