பாகிஸ்தான் தேர்தல்: யார் கையில் ஆட்சி?

0 275

பாகிஸ்­தானில் பர­ப­ரப்­பான பொதுத்­தேர்தல் நடந்து முடிந்து ஒரு வார­மா­கின்­றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகி­றது, அடுத்த பாகிஸ்தான் பிர­தமர் யார் என்­பது இன்னும் பெரும் பர­ப­ரப்­பையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
முன்னாள் பிர­தமர் இம்­ரான்கான் சிறையில் அடைக்­கப்­பட்டு, அவ­ரது பாகிஸ்தான் தெஹ்­ரீக்-­-­ இன்சாப் கட்சி தேர்­தலில் போட்­டி­யிட பல தடைகள் விதிக்­கப்­பட்ட போதிலும், அக்­கட்­சியின் ஆத­ர­வுடன் சுயேச்­சை­யாக போட்­டி­யிட்ட 101 வேட்­பா­ளர்கள் தேர்­தலில் வெற்­றி பெற்று ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

மூன்று தடவை பிர­த­ம­ராக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்­களில் வெற்­றி பெற்று 2-வது இடத்தை பிடித்­தி­ருக்­கி­றது. அக்­கட்சி பாகிஸ்­தானின் சக்தி வாய்ந்த இரா­ணு­வத்தின் ஆத­ரவை கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு என்ன சொல்­கி­றது?
பிலாவல் பூட்டோ சர்­தா­ரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்­க­ளிலும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்­ளது. எஞ்­சிய இடங்­களை சிறிய கட்­சிகள் கைப்­பற்­றி­யுள்­ளன.

அர­சியல் கட்­சிகள் பெப்­ர­வரி 29 ஆம் திகதி அல்­லது தேர்தல் நடந்த நாளுக்கு மூன்று வாரங்­க­ளுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்­தானின் அர­சியல் சாசனம் கூறு­கி­றது. பாகிஸ்தான் பாரா­ளு­மன்­றத்தில் மொத்தம் 336 இடங்கள் உள்­ளன. அவற்றில் 266 நேரடி வாக்­கெ­டுப்பு மூலம் முடிவு செய்­யப்­ப­டு­கின்­றன. மீத­முள்ள 70 இடங்கள் இட­ஒ­துக்­கீடு மூலம் முடிவு செய்­யப்­ப­டு­கின்­றன — 60 பெண்­க­ளுக்கும், 10 இஸ்­லா­மியர் அல்­லா­த­வர்­க­ளுக்கும் – இவை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஒவ்­வொரு கட்­சியின் பலத்­திற்கும் ஏற்ப ஒதுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன், ஒரு அர­சியல் கட்சி வெற்றி பெறும் ஒவ்­வொரு 3.5 இடங்­க­ளுக்கும் ஒரு பெண்­ணுக்கு இடம் ஒதுக்­கீடு பெறு­கி­றது. சுயேட்சை வேட்­பா­ளர்கள் எந்த கட்­சி­யையும் சேர்ந்­த­வர்கள் அல்ல என்­பதால் அவர்கள் இதற்கு தகு­தி­யற்­ற­வர்கள். தேர்தல் முடி­வுகள் வெளி­யாகி 72 மணி நேரத்­திற்குள், அவர்கள் ஒரு கட்­சியில் சேரவோ அல்­லது சுயேச்­சை­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவோ அமர விருப்பம் தெரி­விக்க வேண்டும்.

தொடர்ந்து இழு­பறி
இந்­நி­லையில் ஆட்சி அமைப்­ப­தற்கு 133 பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் தேவை என்­கிற நிலையில், எந்த கட்­சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. இதனால் கூட்­டணி அரசை அமைக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் இதில் அர­சியல் கட்­சி­க­ளி­டையே ஒரு­மித்த கருத்து ஏற்­ப­டா­ததால் புதிய அரசை அமைப்­பதில் தொடர்ந்து இழு­பறி நீடித்து வரு­கி­றது.

அர­சியல் கட்­சிகள் தேர்தல் நடந்த நாளில் இருந்து 3 வாரங்­க­ளுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்­தானின் அர­சியல் சாசனம் கூறு­கி­றது. எனவே நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்­சியும், பிலாவல் பூட்டோ சர்­தா­ரியின் பாகிஸ்தான் மக்கள் கட்­சியும் இணைந்து கூட்­டணி அரசை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன.

எனினும் பிர­தமர் பதவி யாருக்கு என்­பதில் இரு கட்­சி­க­ளுக்கும் இடையே கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது. நான்­கா­வது முறை­யாக பிர­த­ம­ராக வேண்டும் என்­பதில் நவாஸ் ஷரீப்பும், பிலாவல் பூட்டோ சர்­தா­ரியை பிர­த­ம­ராக்­கியே தீருவேன் என்­பதில் அவ­ரது தந்­தையும், பாகிஸ்தான் முன்னாள் அதி­ப­ரு­மான ஆசிப் அலி சர்­தா­ரியும் உறு­தி­யாக உள்­ள­தாக தகவல் வெளி­யாகி இருந்­தது.
பிர­தமர் பத­வியை தவிர்த்து, வெளி­யு­றவு அமைச்சு, உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் பாகிஸ்­தானின் மிகப்­பெ­ரிய மாகா­ண­மான பஞ்­சாபின் முத­ல­மைச்சு போன்ற முக்­கிய பத­வி­க­ளுக்கு யார் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­திலும் இருக்­கட்­சிகள் இடையே கருத்து வேறு­பா­டுகள் நில­வு­வ­தாக கூறப்­பட்டு வந்­தது.

நவாஸின் நிலைப்­பாடு
இந்­நி­லையில் பாகிஸ்­தானின் புதிய பிர­த­ம­ராக தனது சகோ­தரர் ஷெபாஸ் ஷரீப்­பையும், பஞ்சாப் மாகாண முத­ல­மைச்­ச­ராக தனது மக­ளான மரியம் நவா­சையும் நிய­மனம் செய்­வ­தாக நவாஸ் ஷரீப் தெரி­வித்­துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்­டோ-­ சர்­தாரி பிர­தமர் போட்­டியில் இருந்து வில­கி­யதை அடுத்து இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.
17 இடங்­களை வென்ற சமூக தாரா­ள­வாத முட்­டா­ஹிதா குவாமி இயக்­கத்­து­டனும் (MQM) நவாஸ் ஷரீபின் கட்சி பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. சுயேச்­சை­களை தன் பக்கம் இழுக்­கவும் முயற்­சிக்­கி­றது.

நவா­சுக்கு பிலாவல் ஆத­ரவு
பாகிஸ்தான் மக்கள் கட்­சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்­தாரி நேற்­று­முன்­தினம் செவ்­வா­யன்று, “நாட்டில் ஆட்சி அமைப்­பதை உறுதி செய்­வ­தற்­காக முஸ்லிம் லீக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கும்” என்று கூறினார். அந்த அமைச்­ச­ர­வையில் இடம்­பெ­றாமல், வெளியில் இருந்து ஆத­ரவு தருவோம் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்­சிக்கு சக்­தி­வாய்ந்த பாகிஸ்தான் இரா­ணு­வத்தின் ஆத­ரவு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது. நவாஸ் ஷெரீப்­புக்கு ஆத­ர­வ­ளித்த பிலாவல் மற்றும் அவ­ரது தந்தை ஆசிப் அலி சர்­தாரி ஆகி­யோ­ருக்கு ஷெபாஸ் நன்றி தெரி­வித்தார். கூட்­ட­ணிக்கு ஆத­ரவு தெரி­வித்த கட்­சி­க­ளுக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நன்றி தெரி­வித்­துள்­ளது.

இம்ரான் தரப்பு நிரா­க­ரிப்பு
இந்த சூழலில் பாகிஸ்­தானில் எந்த முக்­கிய அர­சியல் கட்­சி­க­ளு­டனும் கூட்­டணி ஆட்சி அமைக்கும் யோச­னையை இம்ரான் கான் நிரா­க­ரித்தார். மேலும் சிறிய கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்கும் இம்­ரான்­கானின் பாகிஸ்­தான் தெஹ்­ரீப் -­இ -­இன்சாப் கட்சி, பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை என்றால் எதிர்க்­கட்­சி­யாக இருப்போம் என திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது.

இம்ரான் கானின் ஊடக ஆலோ­சகர் சுல்பி புகாரி, பெரும்­பான்­மையை பெறத் தவ­றினால் கூட்­டணி அமைப்­ப­தற்குப் பதி­லாக எதிர்க்­கட்­சி­யா­கவே இருக்க விரும்­பு­வ­தாகக் கூறினார்.

பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களில் தற்­போது 14 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் இம்ரான் கான் முன்னர் கூறி­ய­தையே இது பிர­தி­ப­லிக்­கி­றது.

2018 இல், ‘கூட்­டணி அர­சாங்கம் பல­வீ­ன­மாக இருக்கும்’ என்றும், ‘நாடு எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­களைச் சமா­ளிக்க வலி­மை­யான அர­சாங்கம் தேவை’ என்றும் அவர் கூறினார். ஆயி­னும்­கூட, அவர் MQM போன்ற சிறிய கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணியை உரு­வாக்­கினார்.

நீதி­மன்றை நாடிய சுயேட்­சைகள்
இத­னி­டையே தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த சுயேச்சை வேட்­பா­ளர்கள் வாக்கு மோசடி குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளனர். அதன்­படி இம்­ரான்­கானின் பாகிஸ்­தான்-­தெஹ்­ரீப்-­இ-­இன்சாப் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்டு தோல்­வி­யுற்ற சுயேச்சை வேட்­பா­ளர்கள் பலர் நவாஸ் ஷரீப் மற்றும் அவ­ரது மகள் மரியம் நவாஸ் உள்­பட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலை­வர்­களின் வெற்றி ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என அறி­விக்­கக்­கோரி பல்­வேறு நீதி­மன்­றங்­க­ளிலும் வழக்கு தொடர்ந்­துள்­ளனர்.
அப்­படி சுயேச்சை வேட்­பா­ளர்கள் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட 30-க்கும் மேற்­பட்ட மனுக்­களை லாகூர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்டுள்­ள­து.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் உதய் சந்திரா, “முன்பு இம்ரான் கானுக்கு வாக்களிக்காதவர்கள் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரும் அவரது கட்சியும் இராணுவத்தால் நடத்தப்பட்ட விதம் அநீதியானது என்று உணரலாம். நாடு முழுவதும் இருக்கும் ஒரு பொதுவான ஜனநாயக உணர்வு, அந்தச் சம்பவங்கள் மூலம் மீறப்பட்டதாகத் தெரிகிறது.சுயேச்சைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், வாக்காளர்கள் இராணுவத்திற்கு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்: ‘ஜனநாயகம் மேலோங்கட்டும்” என்றார். (பி.பி.சி.) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.