அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை

0 212

எப்.அய்னா

பண்டாரகம – அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்­த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பினை நேற்று முன் தினம் (13) அறிவித்தார்.

‘கொத்து பாஸ்’ எனும் பெய­ரிலும், ‘பல்லிக் குட்டி’ எனும் பெய­ரிலும் அறியப்படும்  மொஹம்மட் பாரூக் கனேஷநாதன்  எனும் 30 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தைக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

திட்டமிடாத படுகொலை மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பிலிருந்து சிறுமியை கடத்தியமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபர்  தாக்கல் செய்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மையப்படுத்திய வழக்கு விசாரணைக்கு வந்த போது, அக்குற்றச்சாட்டுக்களை குற்றவாளி ஒப்புக்கொண்டதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, முதல் குற்றச்சாட்டு தொடர்பில் 5 இலட்சம் ரூபாவும் 2 ஆவது குற்றச்சாட்டு தொடர்பில் 25 இலட்சம் ரூபா வீதமும் மொத்தமாக 30 இலட்சம் ரூபாவை சிறுமி ஆயிஷாவின் தாயாருக்கு நட்ட ஈடாக செலுத்த குற்றவாளிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால்  முதல் குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் ஒன்றரை வருடங்களும் 2 ஆம் குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் 5 வருடங்களுமாக ஆறரை வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்தார். அத்துடன் இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் செலுத்தவும் நீதிபதி கட்டளையிட்டார்.  அந்த அபராத தொகையை செலுத்த தவறினால் தலா 6 மாதங்கள் வீதம் மேலும் ஒரு வருட சிைறத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என நீதிபதி எச்சரித்தார்.

இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த முதல் சந்தர்ப்பத்திலேயே குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். வழக்கை நெறிப்படுத்த சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஒஸ்வெல்ட் லக்ஸ்மன் பெரேராவுடன்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார ஆஜராகியிருந்தார். தண்டனை விதிக்கப்பட முன்னர் நீதிமன்றில் விடயங்களை முன் வைத்த பிரதி சொல்சிட்டர் ஜெனரால் ஜனக பண்டார,  குற்றவாளிக்கு அதிகபட்ச  தண்டனை வழங்க வேண்டும் என கோரினார்.

‘தனது நெருங்கிய நண்பரின் மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் கடத்தும் அளவுக்கு இந்த குற்றவாளி கொடூரமானவர்.  இது தற்போதைய சமூகத்தின் கோர முகத்தை காட்டும் சம்பவம். இவருக்கு அளிக்கும் தண்டனை சமூகத்தின் ஏனைய நபர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த நீதிமன்ற‌ம் குற்றவாளிக்கு இலகு சிறைத் தண்டனை அளிக்காது என நம்புகின்றேன்.’ என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார தனது இறுதி சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.

வழக்கின் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதன் ஊடாக  குற்றவாளி சார்பில் இலகு ரக தண்டனை எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த பாணந்துறை மேல் நீதிமன்றம் இந்த தண்டனைகளை விதித்து தீர்ப்பறிவித்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள கோழி இறைச்சிக் கடைக்கு கோழி இறைச்சி வாங்கச்  சென்­ற ஆய்ஷா முற்­பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்­பட்­ட­ நேரத்தில் காணாமல் போயிருந்தார்.

கோழி வாங்கச் சென்ற ஆயிஷா வெகு நேர­மா­கியும் வீடு திரும்­பாததால் அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் சிறுமி ஆயிஷாவை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.  ஆயிஷாவின் தாயார் அம்முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

அட்­டு­லு­கம பகு­தியில் சிறுமி ஆயி­ஷாவின் வீடு அமைந்­தி­ருந்த பெரிய பள்­­ளி­வா­சலை அண்­மித்த பகு­தி­யி­லி­ருந்து, அவர் இறைச்சி வாங்கச் சென்ற கோழிக் கடை வரை­யி­லான பகு­தியை  நோட்­ட­மிட்­டுள்ள பொலிஸார்  கோழிக் கடையை அண்­மித்து இருந்த சி.சி.ரி.வி. ஒன்றில் பதி­வான காட்­சி­களை உடனடியாக பரீட்சித்திருந்தனர்.

அதில், ஆயிஷா கோழிக் கடைக்குள் சென்று இறைச்சி கொள்­வ­னவு செய்­து­விட்டு திரும்­பு­வது தெளி­வாக பதி­வா­கி­யி­ருந்த நிலையில், அதன் பிறகே அவ­ருக்கு ஏதோ நடந்­தி­ருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

மீட்கப்பட்ட உயிரற்ற உடல் :

இவ்­வா­றான பின்­ன­ணியில், பொலிஸார், சிறு­மிக்கு அனர்த்தம் நிகழ்ந்­தி­ருக்­கலாம் என நம்­பிய 100 மீற்றர் பகு­தியை ஆராய்ந்த போது, அங்கு காடு­க­ளுடன் கூடிய ஒரு சதுப்பு நிலம் இருப்­பது தெரி­ய­வந்­தது. இந் நிலையில் விசா­ர­ணை­யா­ளர்­களின் ஆலோ­சனைப் படி, கடந்த 2022 மே 28 ஆம் திகதி அந்த சதுப்பு நிலப் பகு­தியில் தேடு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இதன்போது சேற்­றுக்குள் புதைந்­தி­ருந்த, காலின் ஒரு பகுதி சேற்­றுக்கு மேலே தெரிய, சிறுமி ஆயி­ஷாவின் உயி­ரற்ற உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

கொலை செய்தது எப்படி ?:

‘ சேர்… சதுப்பு நில சேற்றில் ஆயி­ஷாவின் முகத்தை அமிழ்த்தி அவளின் உடலின் முது­குப்­ப­கு­தியில் எனது முழங்­கா­லினால் ஊன்றிப் பிடித்தேன். அவள் இறந்­து­விட்டாள். பின்னர் சேற்­றுக்குள் அவளை மறைத்­து­விட்டு, எனது காலடி தடங்­க­ளையும் அழித்­து­விட்டு எதுவும் தெரி­யா­தது போல் சென்றேன். வீடு சென்று குளித்­து­விட்டு பள்­ளிக்குச் சென்றேன். ஆயி­ஷாவை அனை­வரும் தேடும் போது நானும் சேர்ந்து தேடினேன். எனினும் எனது மன­துக்குள் பயம் இருந்­து­கொண்டே இருந்­தது. நீங்கள் என்னைப் பிடித்­து­விட்­டீர்கள்” என சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் அப்போது ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியிருந்த்தார்.

எனினும் அவ­னது வாக்கு மூலத்தை மட்டும் முழு­மை­யாக ஏற்காத பொலிஸார், பாணந்­துறை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய நிபுணர் எச்.கே.ஜே.விஜே­வீர, உத்­பல ஆட்­டி­கல உள்­ளிட்ட மூவர் கொண்ட சிறப்புக் குழு நீதி­மன்ற கட்­டளை படி பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­து வழங்கிய அறிக்கையையும் ஆராய்ந்தது.

 

பிரேத பரிசோதனை :

2022 மே 30 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை சட்­ட­வைத்­திய நிபு­ணர்கள் மூவரை உள்­ள­டக்­கிய சிறப்பு குழுவால் இந்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அன்ரைய தினம் முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பித்த பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் சுமார் 04 மணிநேரம் நீடித்து பிற்பகல் 01.30 மணியளவில் நிறைவுற்றிருந்தது.

பிரேத பரிசோதனை பிரகாரம் சிறுமியின் மரணத்திற்கு வாய், மூக்கு வழியே சேறு, நீர் என்பன உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமையே பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ள அந்த குழாம் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்ததுடன், சிறுமியின் உடலில் ஒரேயொரு காயத்தை மட்டும் அடையாளமிட்டுள்ளனர். அது சிறுமியின் வாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட காயம் என அறிக்கை கூறுகின்றது.

இந் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையும் சந்தேக நபரின் வாக்கு மூலமும் பொருந்துவதை அவதானித்த பொலிஸார், அவரை பிரதான சந்தேக நபராக அறிவித்து, பாணந்துறை நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்திருந்த்தனர்.

இந்த நிலையிலேயே மிக குறுகிய காலத்துக்குள் சந்த்தேக நபரை பிரதிவாதியாக பெயரிட்டு சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த்த நிலையில், அவ்வழக்கின் தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்­தீர்ப்பு இவ்­வா­றான குற்­ற­வா­ளி­க­ளுக்கு தகுந்த பாட­மாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்­லை. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.