(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த அமர்வில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்கேற்காது பகிஸ்கரிப்பு செய்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஷிம் மற்றும் ஏ.ஆர்.இஷாக் உள்ளிட்டோருடன் ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, வடிவேல் சுரேஸ் உள்ளிட்டோர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தனர்.
நேற்று காலை 10.30மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.
எதிர்க்கட்சி புறக்கணிப்பு
ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஆரம்பிக்க முற்பட்டதுடன் சபையில் அர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரையை பகிஷ்கரிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வரும் ஜீ.எல். பீரிஸ், வீரசுமன வீரசிங்க ஆகியோரும் சபையில் இருந்து வெளியேறிச்செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
இருந்தபோதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் யாரும் சபைக்கு வருகை தரவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் உரையை பகிஷ்கரித்து வெளியேறிச் சென்றபோதும் அந்த கட்சியை சேர்ந்த ராஜித்த சேனாரத்ன, சரத்பொன்சேகா ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எச்.எம். ஹரீஸ். பைசல் காசிம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகியோரும் சபையில் இருந்தனர். அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பெளசி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சுயாதீனமாக செயற்படும் சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம ஆகியோரும் ஜனாதிபதியின் உரை முடியும்வரை சபையில் இருந்தனர்.
அத்துடன் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையை செவிசாய்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தவராசா கலையரசன் ஆகிய இருவரும் மாத்திரமே சபையில் இருந்தனர்.
அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களில் ஹரினி அமரசூரிய இடையில் சபைக்கு வந்தபோதும் சிறிது நேரம் கழித்து சபையில் இருந்து வெளியேறிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.- Vidivelli