(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா, சவூதி அரேபிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், அந்நாட்டின் காலநிலை விவகார தூதுவருமான ஆதில் பின் அஹமட் அல் ஜுபைரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சவூதி அரேபியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.
குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பிராந்திய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை வழங்கிய ஒரு தொகுதி தேயிலையை சவூதி ரேபியா ஊடாக காஸாவுக்கு அனுப்பி வைப்பதற்கு உதவியமைக்கும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா சவூதி அரேபிய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது சவூதி இராஜாங்க அமைச்சரும், இலங்கைத் தூதுவரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு குறித்து மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொண்டனர். காலநிலை மாற்றம், சுற்றாடல் விவகாரங்கள் மற்றும் காஸாவின் மனிதாபிமான சவால்கள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர். – Vidivelli