(ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.வை.எம்.சியாம்)
ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான விஷேட பணி நேர அட்டவணை இம்முறையும் வழங்கப்படவுள்ளது.
இதற்கென அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம் பணியாளர்களுக்கு தொழுகை மற்றும் சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக பணி நேரகால அட்டவணையைத் தயாரிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு குறிப்பிட்ட சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிம் பணியாளர்கள் தொழுகை மற்றும் சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் பணியாளர்கள் தங்களது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் பணிநேர திருத்தங்களை ஏற்பாடு செய்யும் படியும் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏதும் இருந்தால் மாத்திரம் சிறப்பு விடுப்பு கொடுக்க முடியும் எனவும் பொது நிர்வாக அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரமழான் (நோன்பு) எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதியன்று ஆரம்பமாகி ஏப்ரல் 11ஆம் திகதி நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. – Vidivelli