மட்டக்களப்பு பள்ளி முன்றலிலிருந்த 350 வருட பழமையான மரத்தை வெட்டிய விவகாரம்: வழக்கு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு ;மே 21 இல் மீண்டும் விசாரணை
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்டக்களப்பு ஜாமி உஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் நின்ற 350 வருடங்கள் பழைமையான மரத்தை சட்டத்திற்கு முரணாக வெட்டியமைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதியன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஏ.எல்.எம்.மர்சூக் மற்றும் ஆப்தீன் ஆகிேயாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மரமானது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் மட்டக்களப்பின் ஒரு அடையாளமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் இம் மரமானது சூழலுக்கு பயன்மிக்கதாக காணப்பட்டது எனவும் அதனை பலாத்காரமாக வெட்டியமையினால் பிரதிவாதிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரத்தில் பல நூற்றுக்கணக்கான பறவைகள் வசித்து வந்தன. மரம் வெட்டப்பட்டவுடன் அவை கூடுகளை இழந்துள்ளன எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த இந்த மரத்தினை பள்ளிவாசலின் அனுமதியின்றி மட்டக்களப்பு பிராந்திய இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியோரின் ஆதரவோடு சட்டத்திற்கு முரணாக வெட்டி வீழ்த்தி உள்ளனர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் வழக்கின் பிரதிவாதிகளாக இலங்கை மரக்கூட்டுத்தாபனம், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மட்டக்களப்பு மா நகர சபை மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாமா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ஜா.றாஸி முஹம்மத் ஆகியோருடன் அறிவுறுத்தல் சட்டத்தரணியாக றுடானி ஸாஹிர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். குறிப்பிட்ட வழக்கானது எதிர்வரும் மே மாதம் 21 திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் காணப்படும் இம் மரம் கடந்த 16.10.2023 அன்று வெட்டப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமையானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரத்தினை முழுமையாக வெட்ட வேண்டாமெனவும் முறிந்த பகுதியை பகுதியளவு அகற்றுமாறும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகம் எழுத்து மூலமும் வாய் மூலமும் தெரிவித்திருந்த நிலையிலும் குறித்த மரம் முற்றாக வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli