எம்.ஐ.அப்துல் நஸார்
ஐக்கிய நாடுகள் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பு (UNRWA) பலஸ்தீன அகதிகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் அதற்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் அந் நிறுவனத்தை ‘பதிலீடு செய்யவோ அல்லது மாற்றவோ’ முடியாது என காஸா உதவிக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகள் UNRWA இற்கான நிதியுதவியை நிறுத்திவிட்டன. மேலும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உதவி வழங்கும் நாடுகளுடன் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
UNRWA இற்கான நிதியினை நிறுத்துவது காஸாவில் மனிதாபிமான பேரழிவினை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் உரிமைகள் அலுவலகம், யுனிசெப் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட ஐ.நா.வின் உயர்மட்ட மனிதாபிமான ஒருங்கிணைப்பு நிறுவனங்களின் முகவரகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
‘UNRWA இற்கான நிதியை நிறுத்துவது ஆபத்தானது என்பதோடு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்திலும் பிராந்தியம் முழுவதிலும் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளின் நீண்டகால பாதிப்புக்களுடன் காஸாவில் மனிதாபிமான கட்டமைப்பின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும், என மேற்படி ஐ,நா நிலையியற் குழு அமைப்புகளின் தலைவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவில் உள்ள மேற்படி முகவரகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை ஹமாஸ் அமைப்பு தனது ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதாக UNRWA மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து செவ்வாய்க்கிழமை தொடக்கம் இந்த சர்ச்சை தீவிரமடைந்தது.
UNRWA இன் 12 ஊழியர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நிதியினை நிறுத்துவது சாதாரண பாலஸ்தீனர்களைப் பாதிக்கும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஐ.நா. முகவரகம் நீண்டகாலமாக இஸ்ரேலின் நுணுக்கமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டது எனவும் அவ்வமைப்பு திட்டமிட்ட முறையில் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராகச் செல்வதாகவும் அந் நாடு குற்றம் சாட்டியுள்ளது.
யுத்தத்தின் பின்னர் காஸாவிலுள்ள இம் முகவரகத்தின் செயற்பாடுகளை நிறுத்தவுள்ளதாக இஸ்ரேல் உறுதிபடத் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்க ஊடகப் பேச்சாளரான எய்லோன் லெவி UNRWA ‘அடிப்படையில் ஹமாஸுடன் இணைந்து செயற்படுகின்றது’ என தெரிவித்ததன் பின்னர் இஸ்ரேலின் நிலைப்பாடு மேலும் இறுக்கமாகியுள்ளது.
‘பயங்கரவாதிகளை பாரிய அளவில் பணிக்கமர்த்துவதாகவும், அதன் உள்கட்டமைப்பை ஹமாஸ் இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதிப்பதாகவும், காஸா பகுதியில் உதவி விநியோகத்திற்காக ஹமாஸையே நம்பியிருப்பதாகவும்’ அவர் குற்றம் சாட்டினார்.
‘சிறந்த ஆற்றலையும் காஸாவில் உள்ள மக்கள் பற்றிய அறிவை கொண்ட UNRWA முகவரகத்தின் இடத்திற்கு வேறு ஒரு அமைப்பை ஈடுபடுத்தவோ பதிலீடு செய்யவோ முடியாது’ என ஐ.நா.வின் காஸாவுக்கான உதவி ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் தொடக்கம் UNRWA இற்கு 131 மில்லியன் டொலர்களை வழங்கிய முகவரகத்தின் மிகப்பெரிய நன்கொடையாளர் எனக் கூறப்படும் வொஷிங்டன், அதன் பணியை ‘மிகவும் ஆதரிப்பதாக’ தெரிவித்துள்ளது.
‘UNRWA முகவரகம் வழங்கும் அளவிற்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்கக்கூடிய மனிதாபிமான ஆற்றல்கொண்ட வீரர்கள் காஸாவில் வேறு யாரும் இல்லை’ என அமெரிக்க வெளிவிவகார பேச்சாளர் மெத்யூ மில்லர் தெரிவித்தார்.
‘நாங்கள் அந்த பணி தொடர்வதை விரும்புகிறோம், அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை இந்த சர்ச்சைக்குரிய விடயத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது, அவர்களை விசாரணை செய்வது, தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படுபவர்களை பொறுப்புக்கூறல் செய்தல் வேண்டும்.’
வரலாற்றில் முன்னொருபோதும் இடம்பெறாத வகையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆந் திகதி ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலும் பொதுமக்களாவர் என ஏ.எப்.பி. தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அவர்களுள் 132 பேர் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 28 பேரின் உடல்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இடைவிடாத இராணுவத் தாக்குதல்களை காஸாவில் மேற்கொண்டது, இதனால் காஸாவில் குறைந்தது 26,751 பொதுமக்கள் கொல்லப்பட்டள்ளதாகவும், அவர்களுள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் எனவும் காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. – Vidivelli