தனியார் வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டு அது கிடைக்காத நிலையில் மனவிரக்தியுற்ற மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயின்ற இந்த மாணவி கணித பாட தனியார் வகுப்புக்கு செல்வதற்காக 150 ரூபா தேவை என தாயாரிடம் பணம் கேட்டிருக்கிறார். தாயார் இதனை தந்தையிடம் கூற தந்தையோ பணம் தர முடியாது என மறுத்திருக்கிறார். இதன் காரணமாக தாய்க்கும் தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சம்பவங்களால் மன விரக்தியுற்ற நிலையிலேயே குறித்த மாணவி தனது உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கிறார்.
இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் குடும்பத் தலைவர்கள் தமது செலவுகளை சமாளிக்க முடியாது திணறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக உணவு, மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படைத் தேவைகளைக் கூட தமது வருமானத்தினுள் சமாளிக்க முடியாதளவு வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ளது. இதற்கப்பால் பிள்ளைகளின் கல்வி மற்றும் போக்குவரத்திற்கான செலவுகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. இப் பின்னணியில் தான் பதுளையில் இந்த சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.
இது ஒரு குடும்பத்தின் நிலை மாத்திரமல்ல. இந்த மாணவி எடுத்த முடிவினால் இந்த விவகாரம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியில் வராத ஆயிரக் கணக்கான இவ்வாறான சோகக் கதைகள் ஒவ்வொரு குடும்பங்கள் மத்தியிலும் உள்ளன. பிள்ளைகள் மாத்திரமன்றி பெற்றோரும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் 2024 இற்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் பெற்றோர் பிள்ளைகளுக்கு புதிய அப்பியாசக் கொப்பிகள், காகிதாதிகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மேலதிகமாக பல ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்பார்களாயின் அது பெற்றோருக்கு சுமக்க முடியாத சுமையாக மாறிவிடுகிறது.
பதுளையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவி எடுத்த முடிவு மிகத் தவறானதாகும். இஸ்லாம் தற்கொலையை அங்கீகரிக்கவில்லை. இச் சம்பவத்தை வைத்து அம் மாணவியின் பெற்றோரையோ குடும்பத்தையோ விமர்சிப்பதை விட நம்மைச் சூழ நடக்கும் கள யதார்த்தங்களை இச் சம்பவத்தின் ஊடாக புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளைத் தேடுவதே புத்திசாலித்தனமானதாகும்.
இவ்வாறு தேவையுடைய குடும்பங்களை இனங்கண்டு உதவி செய்வதற்காக பள்ளிவாசல்களை மையப்படுத்திய பொறிமுறைகள் அவசியப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகங்களும் தத்தமது பகுதிக்குட்பட்ட குடும்பங்களின் உண்மையான நிலைவரங்களை சரிவரத் தெரிந்து வைத்திருந்தால் அவர்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் கை கொடுத்து உதவினால் அல்லது நெருக்கடிகள் ஏற்பட்டால் உதவி செய்ய பள்ளிவாசல் இருக்கிறது என்ற நம்பிக்கையையாவது ஏற்படுத்தினால் அதுவே மிகப் பெரிய வெற்றியாகும். அந்த வகையில் வறுமை என்ற ஒரே காரணத்திற்காக கல்வியைக் கைவிடவோ அல்லது பட்டினிச் சாவுக்குச் செல்லவோ இடமளிக்க முடியாது.
பள்ளிவாசல்களும் சமூக நிறுவனங்களும் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்ழுடுத்த வேண்டியுள்ளது. எனினும் தமது மஹல்லாக்களில் உண்ணவே வழியற்ற நிலையில் மக்கள் இருக்கத்தக்கதாக ரமழானை வரவேற்கவென பெயின்ட் பூசவும் அலங்காரங்கள் செய்யவும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுவே நமது சமூகத்தின் துரதிஷ்டமாகும்.
எனவேதான் பள்ளிவாசல்களும் முஸ்லிம் நிறுவனங்களும் இந்த விடயத்தில் தீவிர கரிசனை செலுத்த முன்வரவேண்டும். தத்தமது சக்திக்குட்பட்ட வகையில் மக்களின் துயர் துடைக்க செயற்திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். அதற்கான பலத்தை இறைவன் அனைவருக்கும் வழங்க வேண்டும்.- Vidivelli