உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்

0 630

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்­படும் தக­வல்­கள், அதன் விசா­ர­ணைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை எழும்பி வரு­கின்­றது. இந்த தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி யார் எனும் பாரிய கேள்வி நிலவும் நிலையில், தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­கி­றது என்ற முழு­மை­யான தக­வல்கள் கிடைத்தும் அதனை தடுக்­கா­தது ஏன் என்ற மிகப் பெரிய கேள்­வியும் விடை­யின்றியே இத்­தனை வரு­டங்­க­ளா­க உலா வரு­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில், 1000 சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டாலும், அதன் பின்­ன­ணியில் உள்ள அர­சியல் சார்­பு­டைய சந்­தே­கங்கள் மிக முக்­கி­ய­மா­னது. செனல் 4 தொலைக்­காட்­சியின் ஆவ­ணப்­படம் ஊடா­கவும் இது தொடர்­பி­லான சில விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு சந்­தே­கங்­க­ளுக்கு வலுச் சேர்க்­கப்பட்­டி­ருந்­தது.

அதன்­படி, ‘அபூ ஹிந்த்’ எனும் ஒரு பெயர் தொடர்ச்­சி­யாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் விவ­கா­ரத்தில் பயன்­ப­டுத்­த­ப்படும் நிலையில், இது­வரை அப்­பெ­ய­ருக்கு உரி­யவர் கண்­ட­றி­ய­ப்ப­ட­வில்லை. எனினும் அந்த பெய­ருக்கு உரி­யவர் என இந்­தி­யாவில் உள்ள உளவு முகவர் ஒரு­வ­ரையும், முன்னாள் இரா­ணுவ புல­னாய்வு பணிப்­பாளர் துவான் சுரேஷ் சலேயின் பெய­ரையும் சிலர் முன் வைத்­தாலும் இது­வரை அவை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில், இந்த தாக்­கு­தலின் ஆரம்பம் 2018 ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்­புக்கு சிறிது காலத்­துக்கு முன்னர் வரை நீண்­டது என பல்­வேறு தரப்­பி­னரும் சுட்­டிக்­காட்டி வந்­தி­ருந்­தனர். இந்த தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள சில சாட்­சி­யங்­களும் அவற்றை உறுதி செய்யும் வகையில் அமைந்­துள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி ஆணைக் குழு­வுக்கு குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர, தற்­போ­தைய பதில் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னகோன், அரச உளவுச் சேவையின் தற்­போ­தைய பணிப்­பாளர் துவான் சுரேஷ் சலே மற்றும் சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதியா ஆகியோர் வழங்­கிய சாட்­சி­யங்­களின் பதிவு இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் தகவல் அதி­காரி ஹங்ச அபே­ரத்­ன­வினால் மரு­தானை CSR மையத்­துக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த வாக்கு மூலங்­களை ஆராயும் போதே இந்த உண்மை வெளிப்­ப­டு­கின்­றது.

இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 2023 செப்­டம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திக­தி­களில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் மற்றும் செனல் 4 காணொளி தொடர்பில் நடந்த விவா­தத்தின் இடையே, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த சாட்சி பதி­வு­களை சபைப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இந்த தக­வல்­களை கோரி சமூக மற்றும் அமை­திக்­கான மையத்தின் ஆய்வுக் குழு தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் ஊடாக முன் வைத்த தகவல் கோரிக்­கைக்கு அமைய இந்த தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதில் துவான் சுரேஷ் சலே இலங்கை இரா­ணு­வத்தின் புல­னாய்வு பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்த காலம் முதல் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­விடம் சஹ்ரான் ஹாஸிம் தொடர்­பி­லான தக­வல்கள் இருந்­துள்­ளன என்­பது தெரிய வந்­துள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தில் செயற்­பட்ட‌ புல­னாய்வு அதி­கா­ரிகள் சஹ்ரான் ஹாஸிம் தொடர்பில் தக­வல்­களை வழங்­கி­யமை துவான் சுரேஷ் சலே 2020 ஜூன் 25 ஆம் திகதி ஜனா­தி­பதி ஆணைக் குழு­வுக்கு வழங்­கிய சாட்­சி­யத்தில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சஞ்­ஜீவ திஸா­நா­யக்க தொடுத்த கேள்­விகள் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த சாட்­சி­யத்தின் 94 மற்றும் 95 ஆவது பக்­கங்­களில் இது தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தெளஹீத் ஜமாஅத் குழு­வொன்­றுடன் அவர்கள் தொடர்­பு­பட்­ட­தா­கவும், அவர்­களை பாது­காப்பு அமைச்­சுக்கு அழைத்து கலந்­து­ரை­யாடல் நடாத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் அவ­ரது சாட்­சி­யத்தில் 113 ஆவது பக்­கத்தில் குறிப்­பிட்­டுள்ளார். இதனை விட JMI அமைப்­புக்குள் தமது இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முகவர் ஒரு­வரை அனுப்பி தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் அது மிக இர­க­சி­ய­மான நட­வ­டிக்கை எனவும் அவர் தனது சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் சஹ்­ரானின் பாது­காப்பு தொடர்பில் ஆர்­வ­மாக செயற்­பட்ட இந்­தி­யாவில் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப‌டும் ‘அபூ ஹிந்த்’ எனும் நபர் சஹ்­ரா­னுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதிப் பகு­தி­யி­லி­ருந்து உரை­யாட ஆரம்­பித்­துள்­ள­தாக சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதியா ஆணைக் குழு­விடம் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி ஆணைக் குழு­வுக்கு அவர் கடந்த 2020 ஒக்­டோபர் மாதம் 20 ஆம் திகதி சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். 2017 இறுதிப் பகு­தி­யி­லி­ருந்து 2019 வரை ‘அபூ ஹிந்த்’ எனும் பெயரில் இருந்த நபர் சஹ்­ரா­னுடன் தொடர்ச்­சி­யாக தொடர்­பா­டலை முன்­னெ­டுத்­தி­ருந்­த­தாக ஹாதி­யாவின் சாட்­சி­யத்தின் 76 ஆவது பக்­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே போல ஏப்ரல் 3 ஆம் திகதி பாணந்­துறை மற்றும் கட்­டு­வா­பிட்­டிய வீடு­க­ளுக்கு இடையே பொருட்­களை (குண்டு சார் பொருட்கள்) மாற்றும் நட­வ­டிக்கை தொடர்­பிலும் ஹாதி­யாவின் சாட்­சி­யத்தில் 124 மற்றும் 125 ஆவது பக்­கங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கண்­டியில் நடந்த ஆயுத பயிற்­சியின் இடையே பொலிஸார் வந்து பரி­சீ­லனை செய்­த­போது சஹ்ரான் உள்­ளிட்­ட­வர்­க­ளிடம் ஆயு­தங்கள் இருந்­த­தா­கவும், சஹ்­ரானின் பையை சோதனை செய்த போதும் பொலிசார் ஆயு­தத்தை கண்­டு­பி­டிக்­க­வில்லை என சஹ்ரான் தெரி­வித்­த­தா­கவும் ஹாதியா தனது சாட்­சி­யத்தின் 150 ஆவது பக்­கத்தில் குறிப்­பிட்­டுள்ளார். சாய்ந்­த­ம­ருது சம்­ப­வத்தில், வீடு நெருப்­பெ­டுத்­த­போது வீட்­டுக்கு வெளி­யே வந்து சஹ்­ரானின் சகோ­தரர் சைனி தன்னை அழைத்­த­தா­கவும், தான்­செல்­ல­வில்லை எனவும், சில நிமி­டங்­களில் சூட்டுச் சப்­தங்கள் கேட்­ட­தா­கவும், அச்­சத்­தத்தின் பின்னர் சாராவின் குரலை ஒத்த குரல் ஒன்று கேட்­ட­தா­கவும், தான் பின்னால் திரும்பிப் பார்த்­த­போது பெண் ஒருவர் நின்­று­கொண்­டி­ருந்­த­தா­கவும், அவ­ரது முகத்தில் இரத்தம் தோய்ந்து இருந்­த­தா­கவும், உடை சற்று தீப்­பற்றி இருந்­த­தா­கவும் சஹ்­ரானின் மனைவி தனது சாட்­சி­யத்தின் 170 மற்றும் 171 ஆவது பக்­கங்­களில் குறிப்­பிட்­டுள்ளார். அந்த பெண்ணின் உருவ அமைப்பு சாராவை ஒத்­தது என ஹாதியா குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­விட அப்­போது மேல் மாகாண வடக்கு பகு­திக்­குப் ­பொ­றுப்­பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் தற்­போ­தைய பதில் பொலிஸ் மா அதி­ப­ரு­மான தேச­பந்து தென்­னகோன் 2017 முதல் சஹ்­ரானின் பெயரை கேள்­விப்­பட்­டுள்­ள­தா­கவும், 2017 இல் நால­க ­சில்வா நடாத்­திய செய­ல­மர்­வொன்றில் தான் கலந்­து­கொண்­ட­தா­கவும், அதில் மத அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் குறிப்­பிடும் போது சஹ்­ரானின் பெயரும் குறிப்­பி­டப்­பட்­ட­தாக தேச­பந்து தென்­னகோன் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுக்கு முன்னர் கிடைத்த உளவுத் தக­வல்கள், பொலிஸ் மா அதி­பரால் கீழ் நிலையில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பின்னர் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பாக அப்­போது இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தான் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அது தொடர்பில் செயற்­பட எழுத்து மூலம் ஆலோ­சனை வழங்­கி­ய­தா­கவும், அந்த ஆலோ­ச­னை­களை சரி­யாக பின்பற்றி இருந்தால் கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீதான தாக்­கு­தலை தடுத்­தி­ருக்க வாய்ப்­பி­ருந்­த­தாக தான் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் தேச­பந்து தென்­னகோன் தனது சாட்­சி­யத்தின் 78, 79 ஆம் பக்­கங்­களில் குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பிட்ட ஆவ­ணங்­களை தான் தனக்கு கீழி­ருந்த அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­ய­தா­கவும், ஏப்ரல் 18 ஆம் திகதி கட­மையை முடித்­து­விட்டு தான் விடு­மு­றையில் சென்­ற­தா­கவும், குண்டு வெடிக்கும் போது தான் மஹி­யங்­கனை பகு­தியில் இருந்­த­தா­கவும் தென்­னகோன் குறிப்­பிட்­டுள்ளார். கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­ப‌டும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­மையால் கத்­தோ­லிக்க, கிறிஸ்­தவ மத­கு­ரு­மாரை இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தினீரா என நீதி­ப­திகள் தேச­பந்து தென்­ன­கோ­னிடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்த நிலையில், அவ்­வாறு எதுவும் செய்­ய­வில்லை என அவர் பதி­ல­ளித்­துள்ளார்.

விரைவில் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­ப‌டும் என தகவல் இருக்­கையில், உயிர்த்த ஞாயிறு தினம் என்­பது அண்­மித்த விஷேட தினம் என்ற சாதா­ரண அறிவு இருக்கும் நிலையில், விடு­மு­றையில் செல்ல முன்னர் தமது பாது­காப்பு கட்­ட­மைப்பு தொடர்பில் பதில் கட­மை­களை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­னீரா என ஆணைக் குழு கேள்வி எழுப்­பிய போது அவ்­வாறு செய்­ய­வில்லை என தேச­பந்து தென்­னகோன் பதி­ல­ளித்­துள்ளார்.

இந்த அனைத்து சாட்­சி­க­ளையும் அவ­தா­ன­மாக ஆராயும்போது, சஹ்ரான் மட்­டு­மல்­லாமல், கொழும்பை மையப்­ப‌­டுத்தி செயற்­பட்ட ஜே.எம்.ஐ. தொடர்­பிலும் புல­னாய்வு பிரிவு நீண்­ட­கா­ல­மாக அறிந்­தி­ருந்­தமை புல­னா­கி­றது.

கிடைக்கப் பெற்­றுள்ள சாட்­சி­யங்­க­ளுக்கு அமைய, மிகவும் குறைந்­த­ள­வானோர் உறுப்­பி­னர்­க­ளாக இருந்த ஜே.எம்.ஐ. அமைப்­புக்குள் இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முகவர் ஒருவர் உள் நுழை­விக்­கப்­பட்­டி­ருந்த பின்­ன­ணியில், குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான தக­வல்­களைப் பெற்று அதனை தடுக்க முடி­யாமல் போனமை மிகவும் ஆச்­ச‌­ரி­ய­மான விட­ய­மாகும்.

பாது­காப்பு அமைச்­சுக்கு தெளஹீத் ஜமாஅத் பிர­தி­நி­தி­களை அழைத்து கலந்­து­ரை­யாடி, அவர்­களின் நட­மாட்டம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அவ­தா­னத்­துடன் இருந்த புல­னாய்வுப் பிரிவு குண்டுத் தாக்­கு­தலை தடுக்­காமல் இருந்­த­மை­யா­னது யாரின் அழுத்­தத்­தினால் நடந்­தது, அதன் பின்­ன­ணியில் இருப்­பது யார் எனும் சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரிக்கச் செய்­கி­றது.

சஹ்­ரானின் மனை­வியின் சாட்­சி­யத்­துக்கு அமைய, கடந்த 2019 ஏப்ரல் 3 ஆம் திகதி பாணந்­துைற வீடு மற்றும் கட்­டு­வா­பிட்­டிய வீட்­டுக்கு இடையே பொருட்கள் பரி­மாற்றம் நடந்­துள்­ளது. கள­னி­க­மவில் அப்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்­து­வினால் சட்­டத்­துக்கு முர­ணான உத்­த­ர­வொன்­றுக்கு அமைய விடு­விக்­கப்­பட்­ட­தாக இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் குறிப்­பி­டப்­பட்ட லொறி, அவ்­வாறு விடு­விக்­கப்­பட்­டதும் ஏப்ரல் 3 ஆம் திகதியே என கூறப்­ப‌­டு­கின்­றது. தேச­பந்து தென்­னகோன் அதி­கார எல்­லைக்குள் இருந்த கட்­டு­வா­பிட்­டிய வீடு மற்றும் அவரின் அதி­கார எல்­லைக்கு அப்பால் இருந்த பாணந்­துறை வீட்­டுக்கு இடையே பொருள் பரிமாற்றம் நடக்கும் போது, அவ­ரது அதி­கார எல்­லைக்கு அப்­பாற்பட்ட கள­னி­கம பொலி­ஸா­ருக்கு கதைத்து லொறி தொடர்பில் ஆலோ­சனை வழங்­கி­யமை, ஏப்ரல் 19 முதல் சில தினங்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக விடு­முறை எடுக்க ஏப்ரல் 3 ஆம் திக­தியே விண்­ணப்பம் செய்­தமை ஆகிய விட­யங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தொடர்பில் தவிர்க்க முடி­யாத சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளது. இந்த விட­யங்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்பு குறித்தும் முறை­யான விசா­ர­ணைகள் அவ­சி­ய­மாகும்.

பாத்­திமா ஹாதி­யாவின் சாட்­சி­களின் பிர­காரம், சஹ்­ரானின் சகோதரர் சைனி மற்றும் சாரா ஆகியோர் சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் பின்னரும் உயிருடன் இருந்துள்ளனர். வெடிப்பின் பின்னர் சைனி தன்னை அழைத்ததாகவும் அதன் பின்னர் மீளவும் சூட்டுச் சப்தங்கள் கேட்டதாகவும் ஹாதியாவின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இடத்திலிருந்து சைனியின் சடலம் கிடைத்த போதும் சாராவின் சடலம் கிடைக்கவில்லை. வீட்டுக்குள் நடந்த வெடிப்பின் பின்னர் சைனி உயிருடன் இருந்தமை, அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்தமை, உயிருடன் இருந்த சாரா காணாமல் போனமை ஆகிய சம்பவங்கள் ஊடாக, குண்டுத் தாக்குதல்தாரிகளின் மிலேச்சத்தனத்தை மிஞ்சிய சதி ஒன்று இருந்துள்ளமை புலனாகிறது. இவை தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் ஏனைய சாட்சிகள் மற்றும் கோப்புகளை வெளிப்ப‌டுத்தாமல் இருப்பது, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதி வெளிச்சத்துக்கு வரும் என்பதனாலா எனும் பாரிய சந்தேகம் இன்னும் வலுத்துக்கொண்டே செல்கிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.