எம்.எல்.எம்.மன்சூர்
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக இடம்பெற்று வரும் மதரஸாக்கள் (அல்லது இஸ்லாமிய கல்வி நிலையங்கள்) தொடர்பான விவாதங்களின் சாராம்சத்தை இப்படி தொகுத்துக் கூற முடியும்:
“நவீன கால சமூகத்தையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும் புரிந்து கொள்வதற்கு அவசியமான முக்கியமான பாடங்களை மதரஸாக்கள் போதிப்பதில்லை. அதன் காரணமாக, சமகால உலகின் பிரச்சினைகளையும், சவால்களையும் சரிவரப் புரிந்து, செயற்படக் கூடிய சமயத் தலைவர்களையோ அல்லது அறிஞர்களையோ அவற்றால் உருவாக்க முடியாதுள்ளது”.
அதே நேரத்தில், முஸ்லிம்கள் அல்லாத தரப்புக்கள் ‘மதரஸாக்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைநிலங்களாக இருந்து வரும் காரணத்தால் அவை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விடுத்து வருகின்றன’ என்ற விதத்திலான பிரச்சாரங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, வட இந்தியாவில் BJP/RSS தரப்புக்களும், இலங்கையில் பொதுபல சேனா இயக்கம், அத்துரலியே ரதன தேரரையும் உள்ளிட்ட தீவிர சிங்கள – பௌத்த நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சில முன்னணி பிக்குகள் மற்றும் சிங்கள ஊடகங்கள் ஆகிய தரப்புக்கள் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், மதரஸாக்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பை அரசாங்கம் முதலில் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக்கான துறைசார் கண்காணிப்பு கமிட்டியிடம் ஒப்படைத்தது.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இஸ்லாமிய கல்வி நிலையங்களின் ஒழுங்குமுறைப்படுத்துனர்
(Regulator) என்ற அதன் பாத்திரத்தை எவ்விதமான தயவு தாட்சண்யமுமின்றி வகித்து வர வேண்டும்.
அந்தக் கமிட்டியின் பணிப்பாணை வருமாறு:
“இனங்களுக்கும், மதங்களுக்குமிடையில் நட்புறவைப் பலப்படுத்தி, புதிய பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் இல்லாதொழிக்கும் பொருட்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை முன்வைத்தல்”.
அதாவது, ‘மதரஸாக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன’ என்ற பொதுப் புத்தி சார்ந்த சிந்தனையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தினால் இவ்வாறான ஒரு பணிப்பாணை வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தையும் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புக்கள் மதரஸாக்கள் தொடர்பான பிரச்சினையை ‘சிறுவர் உரிமைகள்’ என்ற கண்ணோட்டத்தில் அணுகி, விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதாவது, பிள்ளைகளின் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் “16 வயது வரையிலான கட்டாய முறைசார் கல்வி” என்ற உறுப்புரிமையை இந்தியாவெங்கிலும் செயற்பட்டு வரும் பெருந்தொகையான மதரஸாக்கள் மீறி வருகின்றன என்பதே அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து சிங்கள ஊடகங்களில் மதரஸாக்கள் மிக முக்கியமான ஒரு பேசுபொருளாக எழுச்ச்சியடைந்ததுடன், அத்துரலியே ரதன தேரர் போன்றவர்கள் “இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மதரஸாக்களிலிருந்தே தோன்றுகின்றது” என்ற கருத்தை மிகவும் வெற்றிகரமான விதத்தில் சந்தைப்படுத்தி, சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் ஊன்றச் செய்தார்கள்.
அந்தப் பின்னணியில், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2019 மே மாதம் முதல் வாரம் “மதரஸா கல்வியை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம்” என அழைக்கப்படும் ஒரு சட்டவரைவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. பின்னர் இது தொடர்பான அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய விதத்தில் “இஸ்லாமிய கல்வி வரைவுச் சட்டம்” என்ற ஆவணம் 17.07.2019 இல் சமர்ப்பிக்கப்பட்டது.
அண்மையில் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் மார்க்க கல்வியை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு வெகு விரைவில் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதாவது, இந்நோக்கத்துக்கென 2019 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைவு கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது அதன் மூலம் தெரிய வந்தது.
கிழக்கிலங்கையில் இடம்பெற்ற ஒரு மதரஸா மாணவனின் துரதிர்ஷ்டவசமான மரணத்தையடுத்து இந்தத் தலைப்பு கிட்டத்தட்ட இரண்டு வார காலம் (குறிப்பாக சமூக ஊடகங்களில்) பேசுபொருளாக இருந்து வந்தது. அச்சந்தர்ப்பத்திலும் கூட, மதரஸாக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்ட வரைவு உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கோரும் வலுவான குரல்கள் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எழவில்லை.
குறிப்பாக, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகித்ததாகவும் தெரியவில்லை. வழமை போல இப்போது எல்லோரும் அதனை மறந்திருக்கிறார்கள் (மீண்டும் ஒரு அசம்பாவிதம் இடம்பெறும் வரையில் அல்லது மற்றொரு சம்பவத்தை முகாந்திரமாகக் கொண்டு ரதன தேரர் போன்றவர்கள் மதரஸாக்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கும் வரையில் நிலைமை அப்படித்தான் இருக்கும்).
1978 தொடக்கம் ஒரு புறம்பான திணைக்களமாக செயற்பட்டு வந்திருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் மதரஸாக்கள் குறித்து – அதாவது, நாட்டில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியை வழங்கி வரும் முதன்மையான கல்வி நிறுவனங்கள் குறித்து – கவனம் செலுத்தியிருக்கவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம். (தேவை மதிப்பீடுகள் எவையும் மேற்கொள்ளப்படாமல்) ஊருக்கு ஊர் காளான்கள் போல மதரஸாக்கள் பெருகி வருவது குறித்து சமூக நலனில் அக்கறை கொண்டிருந்த பலர் நீண்ட காலமாக கரிசனைகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் செயற்பட்டு வந்திருக்கும் இத்திணைக்களம், சிங்கள இனவாதச் சக்திகள் இப்பிரச்சினையை கையில் எடுத்த பின்னரேயே திடீரென விழித்துக் கொண்டது.
வருடாந்தம் ஹஜ் பயணங்களை ஏற்பாடு செய்வதும், மீலாத் விழாக்களை நடத்துவதும் மட்டும் தான் ‘முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்’ என்ற விடயப் பரப்புக்குள் வரும் பணிகள் என அது சிந்தித்து, செயற்பட்டு வந்திருப்பது போல் தெரிகிறது.
2019 இல் தயாரிக்கப்பட்ட சட்டவரைவின் பிரகாரம், “மதரஸாக்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், இலங்கையில் மதரஸா கல்வியை விருத்தி செய்து, மேம்படுத்துவதற்கும்” அதிகாரங்களைக் கொண்ட ஒரு மதரஸா கல்விச் சபை உருவாக்கப்படவுள்ளது.
இச்சபை பின்வரும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்:
மதரஸா கல்வியில் நிபுணத்துவ அறிவைக் கொண்டிருக்கும் மூன்று மார்க்க அறிஞர்கள்
கல்வித்துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய நபர்கள்
கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதிகள்.
அது தவிர, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளரின் கீழ் பின்வரும் முதன்மை உத்தியோகத்தர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்:
மதரஸாக்கள் பதிவாளர்
– பரீட்சைகள் கட்டுப்பாட்டாளர்
– மதரஸா பரிசோதகர்
இச்சட்ட வரைவின் பிரகாரம், “மதரஸா” என்ற பதத்துக்கு பின்வரும் விதத்தில் வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது:
“மதரஸாக்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய தத்துவங்கள் என்பவற்றை கற்றுக் கொடுக்கும் வேறு நிறுவனங்கள் (தப்ஸீர், ஹதீஸ், கலம், உசூல், முகாலத் என்பவற்றை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள்)’’.
மதரஸாக்களை நடத்துவதற்கு வழிகாட்டுதல்ளை வழங்குவதற்கென விரிவான ஒரு கைநூலும் தயாரிக்கப்படவுள்ளது. இக்கைநூல் மதரஸாக்களை பதிவு செய்யும் நடைமுறை, மாணவர் அனுமதி, தொடர் கண்காணிப்பு, ஆசிரியர்களின் தகைமைகள், பாடத்திட்டம்/ பாடநெறிகள், கட்டடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் என்பன தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களையும், இந்த ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய தர நியமங்களையும் (Standards) உள்ளடக்கியிருக்கும்.
நன்கொடைகளை பெற்றுக் கொள்வதற்கென புறம்பான ஒரு மதரஸா நிதியமும் உருவாக்கப்பட உள்ளது. கைநூலில் எடுத்து விளக்கப்பட்டிருக்கும் தர நியமங்களைப் பூர்த்தி செய்யத் தவறும் மதரஸாக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. அவ்விதம் பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் ‘சட்ட விரோதமானவை’ எனக் கருதப்பட்டு, அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதரஸா கல்விச் சபையினால் உருவாக்கப்படும் பொதுப் பாடத்திட்டத்தை அவை பின்பற்ற வேண்டும். பொதுப் பரீட்சைகள் நடத்தப்படவிருப்பதுடன், மதரஸா மாணவர்களுக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சியும் வழங்கப்படும்.
இது தொடர்பாக ஒரு பொது பாடத்திட்டம் வெகு விரைவில் அமுல் செய்யப்படவிருப்பதாக இந்தத் திணைக்களம் அண்மையில் தெரிவித்ததுடன், அநேகமாக சம்பந்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இது இடம்பெற முடியும் எனத் தெரிகிறது. தேசிய கல்விக் கொள்கை 13 வருட கால கட்டாய முறைசார் கல்வியை அவசியப்படுத்திய போதிலும், இதனை தற்பொழுது மதரஸாக்கள் பின்பற்றுவதில்லை.
தேசிய பாதுகாப்புக்கான பாராளுமன்ற துறைசார் கமிட்டி அதன் அறிக்கையை 19.02.2020 இல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அனைத்துப் பிள்ளைகளும் ஆகக் குறைந்தது 11 வருட கால (O/L வரையிலான) முறைசார் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மதரஸா அனுமதிக்கான குறைந்தபட்ச வயது 16 ஆக இருந்து வர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், நாட்டில் இயங்கும் மொத்த மதரஸாக்களின் எண்ணிக்கை 75 ஆக வரையறை செய்யப்பட வேண்டும் எனவும் அது பரிந்துரை செய்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2020 ஆம் ஆண்டில் மதரஸா அதிபர்களுடனும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடனும் இந்த விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியது. இந்த சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அனைவரும் தமது உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், மதரஸாக்களின் எண்ணிக்கையை வரையறை செய்தல் மற்றும் அனுமதிக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக நிர்ணயித்தல் போன்ற நிபந்தனைகளுக்கு ஒரு சில மதரஸா சம்மேளனங்கள் உடன்படவில்லை என்பதனை அறிய முடிகிறது.
இப்பொழுது இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதரஸாக்களின் எண்ணிக்கை 317 ஆகும். 125 மதரஸாக்கள் பதிவு செய்யப்படாதவை. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை கமிட்டியின் அறிக்கையின் பிரகாரம், பதிவு செய்யப்படாத மதரஸாக்களின் எண்ணிக்கை 175 ஆகும். அப்படிப் பார்த்தால், தற்பொழுது நாட்டில் கிட்டத்தட்ட 492 மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 28,000 மாணவர்கள் இருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் படித்து வெளியேறும் கணிசமான அளவிலான மௌலவிமார் வேலையற்றவர்களாக இருந்து வருகின்றார்கள்.
உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது எப்போது ஒரு சட்டமாக நிறைவேற்றப்படும் என்ற விடயம் எவருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட தரப்புக்களும் இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை. ஊடகங்களின் கவனம் இந்த ஆண்டில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், ‘மதரஸா’ என்ற தலைப்பு (தற்காலிகமாக) மறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம் சமூகம் இது தொடர்பாக மெத்தனமாக இருக்க முடியாது. மதரஸா சீர்திருத்தம் எப்பொழுதும் அதன் முன்னுரிமைத் துறையொன்றாக இருந்து வர வேண்டும்.
வகைதொகையற்ற விதத்திலான மதரஸாக்களின் பரவலும், (அடிப்படை மனித உரிமை மீறல்களாக கருதப்படும்) சிறுவர் உரிமை மீறல்களும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், நன்கொடை வசூல் என்ற போர்வையில் ஆங்காங்கே இடம்பெற்று வரும் மோசடிகளும், வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக் கூறல் (Accountability) என்பன அறவே இல்லாத விதத்தில் செயற்பட்டு வரும் ஒரு சில மதரஸாக்களின் விதி மீறல்களும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் இச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, உரிய விதத்தில் அமுல் செய்யப்பட வேண்டும்.
அத்தோடு, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இஸ்லாமிய கல்வி நிலையங்களின் ஒழுங்குமுறைப்படுத்துனர் (Regulator) என்ற அதன் பாத்திரத்தை எவ்விதமான தயவுதாட்சண்யமுமின்றி வகித்து வர வேண்டும்.
இறுதியாக ஓர் எச்சரிக்கை குறிப்பு.மதரஸாக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவது எப்படிப் போனாலும், பாரிய நிதி வளங்களுடனும், மிதமிஞ்சிய அளவிலான, ஆடம்பரமான உள்கட்டமைப்பு வசதிகளுடனும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் செயற்பட்டு வரும் ‘நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய’ ஒரு சில மதரஸாக்கள் அப்பிரதேசங்களில் வாழ்ந்து வரும் உள்ளூர் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்ற யதார்த்தத்தை இங்கு சொல்லித் தான் ஆக வேண்டும்.- Vidivelli