46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது
ஆதரவாக 108 வாக்குகள்; எதிராக 62 வாக்குகள்; 54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினமும் நேற்றையதினமும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நேற்றைய வாக்கெடுப்பின்போது நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நேற்றுமுன்தினம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் குறித்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் முடிவடைந்ததும் நேற்று பி.ப 5.00 மணிக்கு எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு அமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமைய இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே 54 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
விசேடமாக, இதில் சட்ட மூலத்துக்கு அரசுடன் இணைந்து செயற்படும் எதிர்க்கட்சி தரப்பில் உள்ள அலிசப்ரி ரஹீம், ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்டோர் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், எம்.எச். அப்துல் ஹலீம், கபீர் ஹாஷிம், இம்ரான் மகரூப், எஸ்.எம்.மரிக்கார், அலிசாஹிர் மௌலானா, பைஸல் காஷிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். இதனிடையே, குறித்த வாக்கெடுப்பில் அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அரச ஆதரவு உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப், எதிரணி உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.ஆர்.இஷாக், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் வாக்கெடுப்புக்கு வருகை தந்திருக்கவில்லை.
இதன் பின்னர், குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியினால் சட்டமூலத்தின் 36வது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்துக்கு வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த திருத்தத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் இந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. – Vidivelli