கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஏதேனும் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகளோ எதிர்பாராத வேறு இடைஞ்சல்களோ இடம்பெறாவிட்டால் 2024 இலங்கையின் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்பதே பொதுவாக எல்லாரினதும் எதிர்பார்ப்பு. ஆனால் அந்தத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்குமோ பொதுத்தேர்தலாக இருக்குமோ அல்லது அவை இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுமோ அவ்வாறு நடைபெறின் அவற்றுள் எது முதலில் நடைபெறும் என்பது ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் முடிவைப் பொறுத்தது. இலங்கை அரசியலில் அவர் ஒரு பழங்காட்டு நரி என்பதை யாவரும் அறிவர். எனவே, பெரும்பாலும் முதலில் தனது பதவியை உறுதிசெய்துகொண்டு அதன்பின் பொதுத் தேர்தலை நடத்துவார் என்ற எண்ணத்தில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் வரும் என்பதை இக்கட்டுரை எதிர்பார்க்கின்றது.
வருகின்ற தேர்தல் எதுவாக இருப்பினும் அந்தத் தேர்தலுக்கும் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேறுபாடு உண்டு. அதாவது, இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல், பொருளாதாரம், இன உறவு, கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படை அமைப்பையே மாற்றி இந்த நாட்டை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்லக்கூடிய ஒரு வாய்ப்பைத் தெரிவுசெய்யும் தேர்தலாக அமையப் போகின்றது. சுருக்கமாகக் கூறின் நாடாளுமன்ற ஜனநாயம் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கிவந்த சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி முறை இன்று நோய்வாய்ப்பட்டுப் புண்ணாகிப் புரையோடி நாட்டின் சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் பொருளாதார மீட்சிக்கும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில் அந்த அரசியல் சமூக அமைப்பையே முற்றாக உதறித் தள்ளிவிட்டுப் புதியதோர் அரசியல் கலாச்சாரத்தையும் பொருளாதார நிர்வாகத்தையும் சமூக அமைப்பையும் ஏற்படுத்துவதற்கு மக்களின் ஆதரவைத் தேடும் ஒரு தேர்தலாக அது அமையப் போகின்றது.
1948 இல் ஆட்சிச் சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் இலங்கையின் ஆட்சியமைப்புக்கு அத்திவாரமாக அமைந்த சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையே இப்போது நிலவும் பொருளாதார வங்குரோத்துக்கு அடிப்படைக் காரணம் என்பதை பொருளாதார மீட்சிக்கான வழிவகைகளைப்பற்றிப் பல சிபார்சுகளை முன்வைக்கும் நிபுணர்களும்கூட சொல்லத் தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊழல்மலிந்த அரசாட்சியும் அரசாங்கங்களின் பொறுப்பற்ற செலவினங்களும், திருப்பிச் செலுத்த முடியாத கடன் சுமைக்குள் நாட்டையே ஈடுவைத்து நடாத்தப்பட்ட ஓர் உண்ணாட்டுப் போரும், பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிடப்படாத முறையிலும் சுயலாபம் கருதியும் வெறும் புகழை எதிர்பார்த்தும் மேற்கொள்ளப்பட்ட அனாவசியமானதும் ஆடம்பரமானதுமான முதலீடுகளும், மனித உரிமைகளையும் பொது மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தையும் புறந்தள்ளிவிட்டு இனங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு அதனை அடக்குவதாகக் கூறிக்கொண்டு அமுலாக்கப்பட்ட சட்டங்களும், நீதித் துறையினையே அரசியல் மயமாக்கியமையும் இன்னும் பல காரணிகளும் ஒன்று சேர்ந்து உருவாக்கியதே இன்றைய பொருளாதார வங்குரோத்தும் அதனால் மக்கள்படும் தாங்கொணாத கஷ்டங்களும் என்பது உண்மையெனினும் இத்தனைக்கும் அடிப்படையாக விளங்குவது இந்த நாட்டின் அரசியல் அமைப்பும் அதன் கலாச்சாரமுமே. அந்த அமைப்பை மாற்றாதவரை இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் விடிவு ஏற்படாது. அதனை மாற்றப் போவது யார்? இந்தக் கேள்விக்குத்தான் எதிர்வரும் தேர்தல் பதில்கூறப் போகின்றது. ஆகவே அந்தத் தேர்தலில் சிறுபான்மை இனங்களின் பங்களிப்பு என்ன?
சிங்கள பௌத்த பேரினவாதம் முடிசூடா மன்னனாக இருந்துகொண்டு இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்தபோது அதனால் பலவகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழரும் முஸ்லிம்களுமே. எனினும் இப்பாதிப்பில் இரு இனங்களுக்குமிடையேயும் ஒரு குறிப்பிடக்கூடிய வேறுபாடுண்டு. அதாவது சிங்கள இனம் மட்டும் இந்த நாட்டைக் கட்டி ஆள்வதை தமிழினம் என்றுமே ஆதரிக்கவில்லை. அதற்கு இலங்கையின் பூர்வீக வரலாற்று அடிப்படையிலான காரணம் உண்டு. அதனை இங்கே விபரிக்க முயன்றால் கட்டுரை நீண்டுவிடும். சுருக்கமாகக் கூறின் சிங்கள இனத்துக்குள்ள அதே வரலாற்றுரிமை தமிழினத்துக்கும் உண்டு. ஆனால் முஸ்லிம்களோ எட்டாம் நூற்றாண்டளவில் வர்த்தகர்களாக வந்து குடியேறிய ஒரு கலப்பினம். அதனால் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன தங்களுக்கு வேண்டியதெல்லாம் வர்த்தகம் செய்யும் உரிமை மட்டுமே என்றபாணியிலேயே தங்களின் அரசியல் வாழ்வை நீண்டகாலமாக தீர்மானித்துக் கொண்டனர். அதனால் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையே அரசியல் உறவு பகையாக மாறியவுடன் முஸ்லிம்கள் வர்த்தக நலன் கருதி பெரும்பான்மை இனத்துடன் இணையலாயினர். அந்தச் சந்தர்ப்ப சகவாசம் உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு இனபேதமற்ற ஓர் அரசு என்பதைப் பறைசாற்ற இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த பரிசு. அந்த நிலையில் சிங்கள பௌத்த அரசுகளிடமிருந்து பல சலுகைகளை முஸ்லிம்கள் பெற்றனர். முஸ்லிம் பாடசாலைகளின் தோற்றமும் வளர்ச்சியும் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்றையும் இங்கே விபரிக்கத் தேவை இல்லை. ஆனால் 2009க்குப் பின்னர் அதாவது தமிழரின் ஆயுதம் தாங்கிய போர் படுதோல்வியில் முடிவடைந்து தமிழரைப்பற்றிய பயம் சிங்கள பௌத்த இனவாதிகளிடையே மறையத் தொடங்கவே, ‘தமிழரையே சரணடைய வைத்துவிட்டோம் இனி முஸ்லிம்களின் நட்பு தேவையா’ என்ற ஒரு கேள்வியை அவர்களிடம் தோற்றுவித்தது. அதன் விளைவுகளை 2009க்குப் பின்னர் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் கலவரங்கள் தெளிவுபடுத்தும். அதனால் சிங்கள-முஸ்லிம் உறவு ஓரு சந்தர்ப்ப சகவாசம் மட்டுமே என்பது நிரூபணமாகிறது. தமிழர்களின் தலைமைத்துவத்தின்கீழ் தமிழையே தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அணி திரளாமைக்கு தமிழ்த் தலைமைத்துவத்தின் முஸ்லிம்களைப்பற்றிய மாற்றாந்தாய் மனப்பான்மை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இருந்தும் முஸ்லிம்கள் இப்போது சிங்களவர்களாலும் கைவிடப்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த பேரினவாதத்தை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு தமிழினம் எவ்வாறு தமிழினவாதக் கட்சிகளை உருவாக்கியதோ அதேபோன்று சிங்கள தமிழ் இனங்களால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களும் முஸ்லிம் மதவாதக் கட்சிகளை ஆரம்பிக்கலாயினர். மொத்தத்தில் இலங்கையின் ஜனநாயக அரசியல் என்பது இனவாத அரசியலாக மாறிற்று. அதன் விளைவாக பொன் விளையும் இலங்கைப் பூமி பலவிதமான வரட்சிகளால் பாலையாக மாறிக் கிடக்கிறது. அந்தப் பாலையின் ஓர் அமிசத்தைமட்டும் அடுத்து விளங்க வேண்டும்.
சிங்கள பௌத்த இனமோ இலங்கையின் ஆட்சி என்றும் தனது கைவசம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கின்றது. ஆளும் கட்சிகள் மாறலாம். ஆனால் ஆட்சியின் தலைமைத்துவம் என்றும் சிங்கள பௌத்தர்களின் கைகளுள் இருக்கவேண்டும் என்பதே அதன் அரசியல் தாரக மந்திரம். அந்த மந்திரம் ஆட்சியாளர்களுக்கு நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில் எதையும் சிங்கள பௌத்த இனத்தின் மேம்பாட்டைக் கருதி மேற்கொள்ளலாம் என்ற ஒரு நிபந்தனையற்ற சுதந்திரத்தை எழுத்தில் அல்லாது நடைமுறையில் வழங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடற்ற சுதந்திரமே இலங்கையின் ஊழல் நிறைந்த ஆட்சிக்கும் நிர்வாகத்துக்கும் வழிவகுத்தது என்பதை உறுதியாகக் கூறலாம். இந்த நிலையில் ஜனநாயக ஆட்சி என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஒரு வெறும் பம்மாத்து. சீமான்களாவதற்குச் சிறந்த வழி எதுவென்றால் ஆளும் கட்சியில் அங்கத்தவர்களாகுவதும் முடியுமானால் அமைச்சர்களாகுவதும் என்ற நிலைக்கு ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றாதவரை சிறுபான்மை இனங்களுக்கும் விடிவில்லை இலங்கைக்கும் சுபீட்சமில்லை. அதை மாற்றுவது யார் அல்லது எந்தக் கட்சி என்பதையே எதிர்வரப்போகும் தேர்தல் தீர்மானிக்கப்போகிறது. எனவே தான் இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியம் பெறுகிறது. அதில் சிறுபான்மை இனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அத்தேர்தலின் முடிவு அவ்வினங்களின் தலையெழுத்தையே மாற்றலாம்.
அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து, பொருளாதார நிர்வாகத்தையும் ஊழலற்றதாக மாற்றி, இனங்களிடையே சமரச உறவுகளையும் வளர்த்து, மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பேணி, சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற ரீதியல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல் பெரும்பான்மை இனத்துக்குள்ளிருந்து வெளிப்பட்டபோதெல்லாம் சிறுபான்மை இனங்கள் இரண்டும் அக்குரலுக்குச் செவிசாய்க்க மறுத்தன. இதனை 1950, 1960களின் வரலாறு உறுதிப்படுத்தும். சிங்கள பௌத்த பேரினவாதத்துக்குப் பதில் சிறுபான்மையோரின் இனவாதமும் மதவாதமும் என்ற போக்கில் அரசியல் தொடர அதனால் விரக்தியடைந்த முற்போக்குக் குரல்கள் இனவாதக் கட்சியொன்றுடன் இணைந்து 1970களில் ஆட்சி நடாத்தி ஈற்றில் தமது பெயரையும் புகழையும் நிரந்தரமாகவே இழந்த வரலாற்றையும் மறக்க முடியாது. இந்த நிலை எதிர்வரப்போகும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதை முதலில் எச்சரிக்க வேண்டியுள்ளது. அவ்வாறாயின் எதிர்வரும் தேர்தலில் எந்தத் தலைவனுக்கு அல்லது கட்சிக்கு சிறுபான்மை இனங்களிரண்டும் ஆதரவு வழங்கவேண்டும்?
குறிப்பிடக்கூடிய வகையில் நான்கு கட்சிகளும் அவற்றின் தலைவர்களுமே இற்றைவரை களத்தில் குதிக்க ஆயத்தமாகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவும், ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையாக உருவாகி இன்று தனிமரமாக நிற்கும் மக்கள் ஐக்கிய முன்னணியும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவும், ராஜபக்சாக்களின் மொட்டுக் கட்சியும் அது முன்னிறுத்தவிருக்கும் ஜனாதிபதிக்கான அபேட்சகரும், தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைவர் அனுர குமார திஸநாயகாவுமே அவையாகும். இவற்றுள் முதல் மூன்றும் நடைமுறையிலுள்ள அரசியல் சமூக கலாச்சார அமைப்பை முற்றாகத் தகர்த்தெறிந்துவிட்டு புதியதொரு அமைப்பை ஏற்படுத்துவதுபற்றி மௌனமே சாதிக்கின்றன. ஆனால் அதே அமைப்பின்கீழ் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் இன்றுள்ள பொருளாதாரச் சீரழிவையே முன்னிறுத்தி அதற்கான தமது பரிகாரங்களை முன்வைத்து மக்களின் வாக்குகளைக் கவர முற்படுகின்றனர். இதிலே ஒரு பிரச்சினை உண்டு.
இலங்கையின் பொருளாதாரச் சீரழிவை கட்டுப்படுத்தி அதனை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தவென்றே ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ சர்வதேச நாணய நிதியின் உதவியை நாடி அதிலிருந்து கடனுதவியையும் பெற்றுள்ளார். அந்த நிதியின் ஆலோசனைகளுக்கிணங்கவே 2023, 2024 வரவுசெலவு அறிக்கைகளையும் அவர் நிதி அமைச்சர் என்ற முறையில் தயார் செய்து அதனை நாடாளுமன்றமும் நிறைவேற்றியது. அதன் பாரதூரமான விளைவுகளை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் முதல் மூன்று கட்சிகளும் சர்வதேச நாணய நிதியின் சில நிபந்தனைகளை மீளாய்வு செய்து சில திருத்தங்களை கொண்டுவருவோம் என்றுமட்டும் கூறித் திருப்திகாண அனுர குமர திஸநாயகாவும் அவரது கட்சியுமே அந்நிதியின் அடிப்படைத் தத்துவமே மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்று வாதிட்டு அவ்வாறான ஒரு மீளாய்வுக்கேற்ப சில சிபார்சுகளை அந்நிதியின் தலைமைப்பீடத்திடம் முன்வைத்து மாற்றங்கள் கொண்டு வருவோம் என்று கூறுகின்றனர். இந்த வாதத்தை பொருளியல் ரீதியாக விளக்குவதற்கு இக்கட்டுரை இடந்தராது. வாசகர்கள் விரும்பினால் தமது விருப்பத்தை இப்பத்திரிகை மூலம் வெளியிட்டால் அதனை இன்னுமொரு கட்டுரையில் விளக்க முடியும். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரச் சீர்திருத்த நிலைப்பாட்டுக்கும் மற்றைய மூன்று கட்சிகளினதும் நிலைப்பாட்டுக்குமிடையே ஆழமான வேறுபாடுண்டு. அந்த வேறுபாடும் அமைப்பு மாற்றத்தின் அவசியத்தை வலுப்படுத்துகின்றது. இந்தத் தத்துவார்த்தமான வேறுபாட்டின் விளைவாகவே வேறு எந்தக்கட்சியுடனும் கூட்டுச் சேராது அனுர குமாரவின் கட்சி தனித்துக் களமிறங்கப் போகிறது. அந்த முடிவுக்கு 1970களில் முற்போக்குக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து மூக்குடைபட்டதும் ஒரு காரணம் என்று கூறலாம்.
எதிர்வரும் தேர்தலின் முடிவுபற்றிப் பல கருத்துக் கணிப்புகளும் ஹேஷ்யங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் அதிகமானவை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. அதனால்தானோ என்னவோ மற்றைய கட்சிகளெல்லாம் கூட்டிணைந்து அனுர குமாரவை தோற்கடிப்பதற்காக தம்மிடையே ஒரேயொரு அபேட்சகரைமட்டும் முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முனைகின்றன போலும். அந்த அளவுக்கு தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே வென்றுவிட்டது. ஆனால் அது நிஜமாக வேண்டும். எனவேதான் இரண்டு சிறுபான்மை இனங்களும் அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டியது அவசியமாகின்றது. இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பது தற்கொலைக்குச் சமனாகும். மாறாக தமக்கிடையே உருவாகியுள்ள இன மதவாதக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதும் விழலுக்கு இறைத்த நீராகும்.
இறுதியாக ஒன்று. தமிழரின் பிரச்சினைகளுக்கு இந்தியாவோ சர்வதேசமோ உதவப் போவதில்லை. அந்தப் பாடத்தை 2009 உணர்த்தியிருக்க வேண்டும். அதே போன்று முஸ்லிம்களும் “இஸ்லாமிய உம்மா” தங்களுக்கு உதவுமென்ற கனவைக் கலைக்க வேண்டும். அதனை இப்போது காசாவில் நடைபெறும் இனச்சுத்திகரிப்பு தெளிவுபடுத்துகின்றது. தமிழரும் முஸ்லிம்களும் முதலில் இலங்கையர். அதனால் அவர்களது பிரச்சினைகளுக்கு இலங்கைக்குள்ளேயே பரிகாரம் காண வேண்டும். எனவே எதிர்வரும் தேர்தலை ஒரு ஜீவமரணப் போராட்டமாகக் கருதி தேசிய மக்கள் சக்திக்குத் தமது ஆதரவை வழங்குவது நல்லது. இது இலங்கை அரசியலின் யதார்த்தத்தை விளங்கியதனால் விடுக்கப்படும் ஒரு தூரத்து நோக்குனனின் பக்கச்சார்பற்ற வேண்டுகோள்.- Vidivelli