காஸாவில் கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கிய போர் 100நாட்கள் கடந்தும் முடிவின்றித் தொடர்கிறது. ஒரே ஒரு தடவை ஓரிரு நாட்களுக்கு போர் நிறுத்தப்பட்ட போதிலும் அதுவும் எதிர்பார்த்தளவு நீடிக்கவில்லை. ஒக்டோபர் 7 முதல் நேற்று வரை சுமார் 26000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 63 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளனர். மறுபுறம் இக் காலப் பகுதியில் ஹமாஸின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1139 எனக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 24 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலஸ்தீன போராளிகளின் ரொக்கட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போர் ஆரம்பித்த பிற்பாடு ஒரே தாக்குதலில் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு முன்தினம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 195 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு நாளுக்கு நாள் இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் மோசமடைந்து கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் மனிதாபிமான நெருக்கடிகளும் முடிவின்றித் தொடர்கின்றன.
இந்த முரண்பாட்டுடன் இணைந்ததாக மத்திய கிழக்கு எங்கும் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஈரான் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதக் குழு ஒன்றை இலக்கு வைத்து நடாத்திய ரொக்கட் தாக்குதல் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தைத் தோற்றுவித்தது.
அதேபோன்று செங்கடலில் யெமன் ஹூதி போராளிகள் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தும் தாக்குதல்கள் மற்றுமொரு போருக்கு வித்திட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமையும் அமெரிக்க கப்பல் ஒன்று மீது ஹூதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான படைகள் யெமனிலுள்ள ஹூதி இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த அணியுடன் இணைந்து ஹூதிகளுக்கு எதிராக போராடவே இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்பவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஹூதிகள் கப்பல்களை இலக்கு வைத்த தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். ஹூதிகளுக்கு ஈரான் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது.
மறுபுறம் லெபனானைத் தளமாகக் கொண்டியங்கும் ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலும் ஹிஸ்புல்லாஹ் இலக்குகளை குறிவைத்துத் தாக்குகிறது. அது மாத்திரமன்றி ஈராக்கில் இயங்கி வந்த இஸ்ரேலின் மொசாட் அலுவலகம் மீது ஈரான் நடத்திய ரொக்கட் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்ட சம்பவமும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க காரணமாகியுள்ளது. அதேபோன்று மூன்று வாரங்களுக்கு முன்னர் லெபனானில் அமைந்துள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் நடாத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸின் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி கொல்லப்பட் சம்பவமும் போரில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பழிவாங்கல்கள் உச்சகட்டத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.
இவற்றுக்கு அப்பால் சிரியா மீதும் இஸ்ரேல் இந்த வாரம் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் மீது கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐவர் ஈரான் இஸ்லாமிய குடியரசு பாதுகாப்பு படையின் உறுப்பினர்களாவர்.
இவ்வாறு பலஸ்தீன் இஸ்ரேல் மோதலைச் சூழ்ந்து மேலும் பல மோதல்கள் மத்திய கிழக்கெங்கும் பரவியுள்ளன. இது மத்திய கிழக்கின் அமைதி மற்றும் எதிர்காலம் குறித்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. மேற்கு நாடுகள் இஸ்ரேலின் பின்னால் மறைந்து கொண்டு மற்றுமொரு மிக மோசமான போரை மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய தேசங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதையே இச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் சிரியாவையும் லிபியாவையும் சிதைத்தது போல் மேலும் பல முஸ்லிம் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்தும் மறைமுக நோக்கமே இதன் பின்னால் இருப்பது தெரிகிறது.
இவ்வாறான பல் தரப்பு மோதல்களால் மத்திய கிழக்கு பாரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான முகவரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 1991 இற்குப் பின்னர் இவ்வாறான மோசமானதொரு நிலைமையை தாம் அவதானிப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதே உலக நாடுகள் மீதுள்ள கடப்பாடாகும். வல்லரசு நாடுகள் மோதல்களில் பங்கேற்று முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தாது அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli