மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும்
காஸிமிய்யா முதல்வர் அப்துல்லாஹ் ஆலிம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாடசாலைகளில் இஸ்லாம் மத பாடம் போதிப்பதற்கு மெளலவி ஆசிரியர்கள் இல்லாதிருக்கிறார்கள். நீண்ட காலமாக மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையே இதற்குக் காரணம். எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு தாமதியாது மெளலவி ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுத் தர வேண்டும். ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கோரிக்கை விடுத்தார்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியிலிருந்து 2024ஆம் ஆண்டிற்கு சவூதி மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 8 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் இடம்பெற்றது. நிகழ்வில் உரை நிகழ்த்துகையிலேயே அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பாடத்திட்டம் சவூதி மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே காஸிமிய்யா மாணவர்கள் உயர்கல்வியினை சவூதியில் பெறுவதற்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
இங்கிருந்து உயர்கல்விக்காக செல்கின்ற மாணவர்கள் கல்லூரியின் பெளதீக வளங்களை முன்னேற்றுவதற்காக உழைக்க வேண்டும். அத்தோடு தங்களது ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்கு மதீனாவில் உயர்கல்வி கற்கின்ற காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எம்.நியாஸ், எக்ஸலன்ஸ் பாடசாலையின் அதிபர் எச்.அஜ்மல், வாமி நிறுவனத்தின் முன்னாள் இலங்கைக்கான ஸ்தாபக பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹிப்சுர்ரஹ்மான் புஹாரி, பஹன மீடியாவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.-Vidivelli