ஏ.ஆர்.ஏ.பரீல்
செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையடுத்து செங்கடல் பாதுகாப்பு பணிகளுக்காக இலங்கையின் கடற்படையை ஆனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானம் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அரபு நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அரபு நாடுகளின் இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையின் இந்த தீர்மானம் இலங்கை மறைமுகமாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் இராஜதந்திர ரீதியில் தெரிவித்திருந்தனர். செங்கடல் பாதுகாப்புக்காக இலங்கையிலிருந்து அனுப்பப்படும் கப்பலும், கடற்படை வீரர்களும் அப்பிராந்தியத்தில் வேறோர் நாடுடன் இணைந்தே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அந்த வேறொரு நாடு இஸ்ரேலுக்கு ஆதரவான நாடாகவே இருக்குமென்பதால் அது இலங்கையின் அணி சேரா கொள்கையை மீறுவதாக இருக்குமெனவும் அரபு நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
ஜனாதிபதி ரணில் அரபு நாடுகளின்
தூதுவர்களுடன் சந்திப்பு
இலங்கையிலுள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள் செங்கடல் பாதுகாப்பு பணிகளுக்கு இலங்கை கடற்படையை அனுப்புவது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டதையடுத்து நிலைமையைச் சமாளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரமாக கொழும்பில் அரபு நாடுகளின் தூதுவர்களை கடந்த வாரம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப் டுத்தும் 10 நாடுகளின் தூதுவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகம் இச்சந்திப்பு தொடர்பில் ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிட்டது.
பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டார். மேலும் அவர் நிலையானதும் செயலூக்கமானதுமான பலஸ்தீன அரசாங்கத்தை நிறுவி மேற்குக் கரை பகுதிகளில் தஞ்சம் புகுந்திருப்பவர்களை நிரந்தரமாகக் குடியமர்த்த அவசியமான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திக் கூறினார்.
மேலும் ஒரு நாட்டை நிறுவி இரு நாடுகளுக்கு தீர்வு வழங்க முடியாதெனவும், ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காஸா எல்லைகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாதெனவும் அவர் கூறினார்.
காஸாவுக்கு இலங்கை உதவிகளை வழங்கவிருப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அப்பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பலஸ்தீன மக்களின் துயரங்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட ஜனாதிபதி அங்கு போர் நிறுத்தம் விரைவாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.
செங்கடலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். செங்கடல் பிராந்தியத்தின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை ரணில் விக்கிரமசிங்க கண்டித்தார். இந்நிலைமையினால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சவால்களை ஜனாதிபதி விளக்கினார். இந்நிலையில் கடல்வழி போக்குவரத்தில் இருக்க வேண்டிய சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது கடமை. அதனடிப்படையிலே இலங்கை செங்கடல் பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்ய தீர்மானித்தது என்பதனையும் ஜனாதிபதி விளக்கினார்.
அத்தோடு மேற்குலக நாடுகளுடனான தொடர்புகளுக்கு மேலதிகமாக ஆசியா, ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வலயங்களுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது சந்திப்பில் பங்குகொண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் பலஸ்தீன் மற்றும் காஸா மீது ஜனாதிபதி வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் இலங்கைகக்கான பலஸ்தீன தூதுவரின் தலைமையில் லிபியா, ஈரான், குவைத், ஓமான், சவூதி அரேபியா, ஈராக், எகிப்து, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்குகொண்டிருந்தனர்.
இலங்கையின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க ஆகியோர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல்
ரணில் எந்தப் பக்கம்?
பலஸ்தீன் – இஸ்ரேல் நெருக்கடி நிலைமை நூறு நாட்களையும் கடந்து தொடர்கிறது. காஸாவில் தினமும் இனப்படுகொலைகள் நடந்தேறுகின்றன. ஆயிரக்கணக்கில் பெண்கள், குழந்தைகள் என கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரபு நாடுகளினது பகைமையை தவிர்த்துக் கொள்வதற்காகவே கொழும்பில் அவசரமாக அரபு நாடுகளின் தூதுவர்களை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் அளித்துள்ள விளக்கங்கள் தெளிவானதாக இல்லை.
நாட்டில் பலத்த எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செங்கடல் பாதுகாப்புக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைக்கப்படுவது இஸ்ரேலை ஆதரிப்பதாகவே தெரிகிறது. செங்கடல் பாதுகாப்புக்காக மாதம் 500 மில்லியன் ரூபா செலவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் பொருளாதார பின்னடைவு, சுகாதார துறையில் சீர்கேடுகள் மற்றும் பொது மக்கள் வாழ்வதற்காக நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் என்பனவற்றுக்கு மத்தியில் இத்தகைய பெரும் செலவினம் அவசியம் தானா? என்று வினவத் தோன்றுகிறது.
எமது நாடு அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைளை பின்பற்றும் நாடு. மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகளைப் பேணிவரும் இலங்கை அணிசேரா கொள்கையிலிருந்தும் பிறழ்ந்து இஸ்ரேலின் பக்கம் சாய்ந்து வருவது நாட்டின் நன்மையை நிச்சயம் பாதிப்புக்குள்ளாக்கும்.
மேலும் இலங்கை 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தீர்மானித்திருக்கிறது. இந்த எண்ணிக்கையில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிர்மாண மற்றும் விவசாய பண்ணைகளில் இலங்கை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். அத்தோடு இஸ்ரேலில் மோதல் காணப்படும் இடையக வலயங்களில் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமை நிச்சயம் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
அத்தோடு செங்கடலுக்கு இலங்கை கடற்படை அனுப்பி வைக்கப்படுவது பூகோள அரசியல்சார் ஆயுதமோதலொன்றுக்குள் தள்ளப்படுவதற்கு காரணமாய் அமைந்துவிடலாம்.
ஜனாதிபதியின் இவ்வாறான நகர்வுகள் மத்தியகிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல்களை ஏற்படுத்தலாம்.- Vidivelli