செங்கடலுக்கு கப்பலை அனுப்புவது இலங்கையை பூகோள ஆயுத மோதலுக்குள் தள்ளவே வழிவகுக்கும்
40 சிவில் அமைப்புகள் கூட்டாக அறிக்கை
(ஏ.எச்.ஏ. ஹுசைன்)
இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் மீதான சமவாயத்தின் அரச தரப்பில் ஒன்றாக, சர்வதேச நீதிமன்றத்தின் முன் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடுக்கும் வகையில் தென்னாபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆதரிப்பதாக இலங்கையிலுள்ள சுமார் 40 சிவில் சமூக அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் ஒன்றியங்கள் ஆதரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இஸ்ரேல் அரசு “காஸாவிலும் அதற்கு எதிராகவும் மேற்கொள்ளும் அதன் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் கோரும் இடைக்கால நடவடிக்கைகளும் தென்னாபிரிக்கா சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு தென்னாபிரிக்காவினால் வழங்கப்பட்ட விரிவான 84 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், “தென்னாபிரிக்க குடியரசும் இஸ்ரேல் அரசும், இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் மீதான சமவாயத்தின் கீழான தங்கள் கடப்பாடுகளுக்கு அமைவாக, பாலஸ்தீன மக்கள் தொடர்பில், இனப்படுகொலையைத் தடுப்பதற்காக தங்கள் அதிகாரத்தினுள் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றது.
தென்னாபிரிக்காவின் சமர்ப்பித்தல் மீதான முதற்கட்ட விசாரணைகள் 2024 ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிக்கான சர்வதேச நீதிமன்றில் காஸாவுக்கான தென்னாபிரிக்காவின் முன்னெடுப்பு நம்பிக்கை தருகிறது. இது இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காகவும் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு உதவ வேண்டும்.
காஸாவின் நிலைமை உலகின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனிதாபிமான அக்கறைகளை நிவர்த்தி செய்வதற்கான போர் நிறுத்தம் ஒன்றைக் கோரும் சர்வதேச அழைப்புகளை இஸ்ரேல் அங்கீகரிக்க மறுத்துள்ளமை காஸா மக்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய நிலையில் வைத்திருப்பது உறைய வைப்பதாக உள்ளது.
காஸா மக்கள் மற்றும் பொதுவாக பலஸ்தீனியர்களின் மனித உரிமைகளை நிலை நிறுத்த மறுத்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு அரசாங்கங்களும், அரசுகளுக்கிடையிலான அமைப்புகளும் தோல்வியுற்றுள்ளன.
மனித உரிமைகள் என்பது ஒரு “மேற்கத்தேய கருத்தமைவு” எனப் பெரும்பாலும் கூறப்படுகின்ற போதும், காஸா விடயத்தில் மனித உரிமைகள் பிரச்சினையில் மேற்கத்தேய அரசாங்கங்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கின்றன.
உலகளாவிய தெற்கின் ஓர் அங்கத்தவரான தென்னாபிரிக்கா இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில் துணிச்சலை வெளிக்காட்டியுள்ளது. மியன்மாரின் ரோஹிங்கியா மக்களின் அவல நிலையை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில் காம்பியாவும் இது போன்றே செயற்பட்டது.
இலங்கையும் உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகும். ஆயினும், காஸா நெருக்கடி தொடர்பில் எமது அரசாங்கம் வியத்தகு முறையில் வித்தியாசமான அணுகுமுறை ஒன்றினைக் கையிலெடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் “உடனடியான, நீடித்த மற்றும் நிலையான மனிதாபிமான போர் நிறுத்தம்” ஒன்றிற்கு 120 நாடுகள் வாக்களித்த நிலையில் அந்தப் பெரும்பான்மையுடன் இணைவதற்குப் பதிலாக, இலங்கை வாக்களிப்பதைத் தவிர்த்தது.
மேலும், 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு இலங்கை துரிதமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும் செல்லும் இந்த மக்கள், மோதல் காணப்படும் இடையக வலயங்களில் (buffer zones)பணிக்கு அனுப்பப்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுகின்றது. இவ்வாறு, அதிக ஊதியம் என்னும் வாக்குறுதியுடன் பொருளாதார ரீதியாக பாதிப்புறு நிலையிலுள்ள மக்களின் விரக்தியை அரசாங்கம் சுரண்டுவது மட்டுமன்றி, புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பது தொடர்பில் சிறந்த கடந்தகாலப் பதிவுகளைக் கொண்டிராத எமது அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதற்கு வாய்ப்பற்ற உயர் ஆபத்துள்ள பகுதிகளுக்கும் அவர்களை அனுப்புகின்றது. கொவிட் பெருந்தொற்றின் போதும் முன்னைய மோதல்களின் போதும் (ஈராக் – குவைத் போர், லெபனானில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு ஆகியவற்றின் போது) பல புலம்பெயர் தொழிலாளர்கள் எமது அரசாங்கத்தினால் கைவிடப்பட்டனர்.
செங்கடலில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் தலைமையிலான இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு கப்பல் ஒன்றினை அனுப்புவதற்கான அரசாங்கத்தின் முடிவு இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளது. இது இலங்கையை ஒரு பாரிய பூகோள அரசியல்சார் ஆயுத மோதலுக்குள் தள்ளுவதுடன் இதனை முகாமை செய்வதற்கான கொள்திறனும் எம்மிடம் போதாது. இலங்கை பாரம்பரிய ரீதியாக அணிசேரா நாடாக இருந்து வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் வலுவான வணிக ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளோம் என்பதுடன் இந்தத் தவறான தீர்மானத்தினால் இவை அனைத்தும் பாதிப்பிற்கும் உள்ளாக்கப்படும். மேலும், மக்கள் சந்திக்கும் அதிகளவான போஷாக்கின்மைப் பிரச்சினை மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் சுகாதாரத் துறை ஆகியவற்றுடனான ஒரு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாம் வாழும் நிலையில் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் ரூபா இதனால் செலவாகும்.
ஆழ்ந்த கலக்கத்தை ஏற்படுத்தும் இந்தச் சூழமைவில், காஸாவில் நிலவும் தீவிர நெருக்கடியை நிறுத்தும் முயற்சியில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் துடிப்பான ஈடுபாட்டிற்கு ஆதரவளிக்க நாம் விரும்புகின்றோம். உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் சர்வதேச ரீதியான பிரயோகத்தை வலியுறுத்துவதன் மூலம் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான தென்னாபிரிக்காவின் முயற்சிகளுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பின்வருவனவற்றிற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்:
– உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு, காஸா நெருக்கடி தொடர்பில் கோட்பாட்டுரீதியான அணுகுமுறை ஒன்றினை ஏற்றுக்கொள்ளல்.
– செங்கடலில் இடம்பெறும் ஆயுதமோதலில் ஈடுபடுவதற்கான அதன் தீர்மானத்தை உடனடியாக மீள்பரிசீலனை செய்தல்.
– பாதிப்புறு நிலையிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களைப் பாரதூரமான அபாயத்திற்கு உட்படுத்தும் இந்தக் கொந்தளிப்பான மோதலினுள் அவர்களை அனுப்புவதை மீள்பரிசீலனை செய்தல்.
– இலங்கை மக்கள் சார்பில், சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் தென்னாபிரிக்கா மேற்கொண்டுள்ள கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டிற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், இனப்படுகொலையைத் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும் எனத் தென்னாபிரிக்காவினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சமர்ப்பித்தலுக்கும் ஆதரவளித்தல்.- Vidivelli