நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணம் பலத்த பாதிப்புக்களை சந்தித்தது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி கடந்த வெள்ளிக்கிழமை வரை கால நிலை சார் அனர்த்தங்களால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 53641 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த வாரம் நிலைமை சுமுகமடைந்துள்ள போதிலும் சில மாவட்டங்களில் மக்கள் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேற வேண்டி ஏற்பட்டது. இக் காலப் பகுதியில் பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், தொண்டர்கள், தனவந்தர்கள் ஆகியோரின் பங்களிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டமை பாராட்டுக்குரியதாகும். விலைவாசிகள் உயர்ந்திருக்கும் பொருளாதார நெருக்கடிமிக்க இக்காலப்பகுதியில் கூட தேவையுடைய மக்களுக்கு உதவுவதில் எவரும் பின் நிற்கவில்லை. இந்த மனிதாபிமானம் என்றும் நீடிக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலரது வீடுகளுக்குள் நீர்புக கா1ரணம் அப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்களும் வடிகான்கள் முறையாகப் பராமரிப்படாமையுமே என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் கடல் மற்றும் ஆறுகளை நோக்கி நீர் செல்லும் வழிகளை மறித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நீர் ஓடும் வழிகள் முற்றாக தடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்றுதான் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்களுக்குள் கற்களும் மணலும் குப்பைகளும் நிறைந்துள்ளன. இதுவும் வீதிகளில் தேங்கும் நீர் உடனடியாக வழிந்தோட முடியாது வீடுகளுக்குள் நுழையக் காரணமாகும்.
அவ்வப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்கள் இவற்றைத் துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் பொது மக்களின் ஒத்துழைப்பின்மையே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. கிழக்கில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குப்பைகளை உரிய முறையில் அகற்றாதுள்ளமையும் மக்கள் குப்பைகளை வடிகான்களுக்குள் வீசுகின்றமையும் கவலைக்குரியதாகும்.
எனவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மழை காலத்திற்கு முன்னராகவே வடிகான்கள் துப்புரவு செய்யப்படுவதுடன் நீரோடைகளை மறைத்துள்ள கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த வருடமும் இவ்வாறானதொரு வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
வெள்ளம் வந்த பிற்பாடு பல இலட்ச ரூபாய்களை செலவு செய்து நிவாரணம் வழங்குவதை விட அதற்கு முன்னராகவே மிகக் குறைந்த செலவில் வடிகான்களைத் துப்புரவு செய்து நீர் ஓடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதே வினைத்திறன்மிக்கதாகும். இது குறித்து கிழக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள், சிவில் சமூக நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.
அக்குறணைப் பிரதேசம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதற்கும் இவ்வாறான சட்டவிராத கட்டுமானங்களே காரணமாகும். இதே காரணத்தினாலேயே இன்று கிழக்கும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.
எனவே இவ்வாறு வெள்ள அனர்த்த பாதிப்புகளைச் சந்திக்கும் பிரதேசங்கள் அனைத்தும் அடுத்த வருட வெள்ளத்தை எதிர்கொள்ள இப்போதிருந்தே தயாராகுவது அவசியமாகும். இதற்கென முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தயும் விரும்புகிறோம்.- Vidivelli