ஹூதிகளுடன் போரிட கடற்படை கப்பலை அனுப்புவது சரியான தீர்மானமா?

0 272

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘யெமன் ஹூதி­க­ளுக்கு எதி­ராக போராட செங்­கடலில் இலங்கை கடற்­படைக் கப்­பல் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளது.’’

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கூறிய இக் கரு­த்து பெரும் சர்ச்­சைசைக் கிளப்­பி­யுள்­ள­து.
ஜனா­தி­பதி இந்தத் தக­வலை பகி­ரங்க நிகழ்வில் வெளி­யிடும் வரை இது தொடர்­பான எந்த தக­வலும் வெளியே கசி­ய­வி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. அந்­த­ள­வுக்கு இதில் இர­க­சி­யத்­தன்மை பேணப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி தனது இருப்பை தொடர்ந்தும் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு உள்­நாட்­டிலும் சர்­வதேசத்­திலும் பல நகர்­வு­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

சர்­வ­தேச நாடு­களின் பாது­காப்புச் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்ளார்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் கொழு­ம்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற ‘ஷில்ப அபி­மானி 2023’ விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்தார். அவர் அங்கு உரை­யாற்றும் போதே குறிப்­பிட்ட முக்­கிய தக­வலை வெளி­யிட்டார்.

‘‘உக்­ரேனில் போர் நடை­பெ­று­கி­றது. காஸா­விலும் போர் தொடர்­கி­றது. இந்­நி­லைமை கார­ண­மாக பொருட்­களின் விலை அதி­க­ரிக்­கலாம். இதே­வேளை செங்­க­டலில் ஹூதி குழு­வினர் கப்­பல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­து­வதால் கப்பல் போக்­கு­வ­ரத்து செங்­கடல் ஊடாக ஏற்­க­னவே நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்தக் கப்­பல்கள் செங்­கடல் ஊடாகப் பய­ணிக்­காமல் தென்­னா­பி­ரிக்­காவின் ஊடாக சுற்­றி­வந்தால் அதன் கார­ண­மாக பொருட்­களின் விலை அதி­க­ரிக்கும். எனவே ஹூதி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வாக இலங்கை கடற்­ப­டையின் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்ப உடன்­பட்­டுள்ளோம்’’ என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­திருந்­தார்.

கடற்­ப­டையின் ஊடக பேச்­சாளர்
ஹூதி கிளர்ச்சிக் குழு­வினர் செங்­க­டலில் மேற்­கொண்டு வரும் தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்­காக இலங்கை கடற்­படை செங்­க­ட­லுக்கு கடற்­படை கப்­ப­லொன்­றினை அனுப்பி வைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தென கடற்­ப­டையின் ஊடகப் பேச்­சாளர் கயான் விக்­கி­ர­ம­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடற்­ப­டை­யி­ன­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தை­ய­டுத்து கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பிரி­யந்த பெரே­ராவின் கண்­கா­ணிப்பின் கீழ் ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான விஷேட நட­வ­டிக்­கை­க­ளுக்­கென கடற்­ப­டை­யிடம் சமு­துர, சாகர, விஜ­ய­பாகு, பராக்­கி­ர­ம­பாகு, சிது­ரல, சயு­ரல, கஜ­பாகு ஆகிய விஷேட எட்டு கப்­பல்கள் உள்­ளன. இந்தக் கப்­பல்கள் மீது ஹெலி­கொப்­டர்­களை இறக்கும் வச­தி­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளன என கடற்­ப­டையின் ஊடக பேச்­சாளர் தெரி­வித்தார்.

மேலும் கடற்­ப­டையின் கப்­ப­லுக்கு தேவை­யான எரி­பொருள் பெற்­றுக்­கொள்ளல், உணவு விநி­யோகம், யுத்த ஆயு­தங்கள் பெற்­றுக்­கொள்ளல் என்­பன தொடர்பில் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் கூறினார்.
செங்­க­டலில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான யுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வு­வதே கடற்­படை கப்­பலின் இலக்­காக இருக்­கு­மெ­னவும் அவர் கூறினார்.

பிராந்­தி­யத்தில் போர் அபாயம்
செங்­கடல் வழி­யாகப் பய­ணிக்கும் வர்த்­தகக் கப்­பல்கள் மீது தாக்­குதல் நடத்த ஆரம்­பித்த ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் தற்­போது அமெ­ரிக்க போர்க் கப்­பல்­க­ளையும் வணிகக் கப்­பல்­க­ளையும் தாக்­கு­வ­தற்கு ஆரம்­பித்­துள்­ளதால் அப்­பி­ராந்­தி­யத்தில் பதற்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் ஜன­வரி 4ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் சுமார் 25 தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பிரட் கூப்பர் தெரி­வித்­துள்ளார்.

ஹூதி படை­யினர் அண்­மையில் வணிக கப்பல் ஒன்றைத் தாக்கி கைப்­பற்ற முற்­பட்­ட­போது அவர்­க­ளது 4 பட­குகள் மீது அமெ­ரிக்க கடற்­ப­டையின் ஹெலி­கொப்டர் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யது. இத்­தாக்­கு­தலில் 4 பட­கு­களில் 3 பட­குகள் நிர்­மூ­ல­மா­கின. ஒரு படகு தப்பிச் சென்­றது.

அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பாவில் இருந்து சுயஸ் கால்வாய் ஊடாக இந்­தியப் பெருங்­கடல் நோக்கி வரும் கப்­பல்கள் செங்­க­டலில் பய­ணித்து யேம­னுக்கும், ஜி­புடிக்கும் இடை­யி­லுள்ள குறு­க­லான பாப் அல் மண்டாப் நீரி­ணையைக் கடந்தே ஏடன் வளை­கு­டா­வுக்குள் நுழைய வேண்டும். இது­போன்றே இந்­தியப் பெருங்­க­டலில் இருந்து அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பா­வுக்குச் செல்லும் கப்­பல்­களும் ஏடன் வளை­கு­டாவில் இருந்து பாப் அல் மண்டாப் நீரிணை வழி­யா­கவே செங்­க­ட­லுக்குள் பிர­வே­சித்து சுயஸ் கால்­வாயை கடந்து செல்ல முடியும்.
யேம­னுக்கும் ஜிபுட்­டிக்கும் இடையில் அமைந்­தி­ருக்­கின்ற குறு­க­லான பாப் அல் மண்டாப் நீரிணை தான் இப்­போது செங்­க­டலில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு ஆபத்­தான இட­மாக மாறி­யி­ருக்­கி­றது. குறு­கிய நேரத்தில் ஹூதி படை­யினர் இந்த வழி­யாக செல்லும் கப்­பல்­களை அடை­யவோ அவற்றின் மீது தாக்­குதல் நடத்­தவோ முடியும்.

ஹூதி படை­யி­ன­ருக்கு ஈரானின் ஆத­ரவு கிடைக்­கி­றது. இப்­ப­டை­யி­ன­ரிடம் ஏவு­க­ணைகள், வெடி பொருட்கள் ஏவக்­கூ­டிய ஆளில்லா விமா­னங்கள், பட­குகள், நவீ­ன­ ஆ­யு­தங்கள் இருக்­கின்­றன. காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்­தி­ருக்கும் நிலையில் இஸ்­ரே­லுக்கு மாத்­தி­ர­மன்றி அமெ­ரிக்­கா­வுக்கும் முழு உல­கத்­துக்கும் அழுத்தம் கொடுக்­கவே ஹூதி படை­யினர் செங்­க­டலில் இத்­தாக்­கு­தலை ஆரம்­பித்­தி­ருக்­கி­றனர்.

கிழக்கு, மேற்கு கப்பல் பய­ணங்­க­ளுக்கு செங்­கடல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. உல­க­ளா­விய கடல் வழி வர்த்­த­கத்தில் சுமார் 15 வீதம் செங்­கடல் வழி­யாக இடம்­பெ­று­கி­றது. தானிய வர்த்­த­கத்தில் 8 வீதமும், எண்ணெய் வர்த்­த­கத்தில் 12 வீதமும் எரி­வாயு வர்த்­த­கத்தில் 8 வீதமும் செங்­க­டல்­வ­ழி­யா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. செங்­கடல் வழி­யான கப்பல் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்டால் தென்­ஆ­பி­ரிக்­காவைச் சுற்­றியே கப்­பல்கள் பய­ணிக்க வேண்­டி­யி­ருக்கும். இதனால் மேற்­கு­ல­கத்தின் பொரு­ளா­தாரம் பெரிதும் பாதிக்­கப்­படும். ஹூதி­களின் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து தற்­போது கப்பல் நிறு­வ­னங்கள் கப்பல் பய­ணங்­களை இடை­நி­றுத்­தி­யுள்­ளன. இது­வொரு உல­க­ளா­விய நெருக்­க­டி­யாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

செங்­கடல் வழி­யான கப்­பல் போக்­கு­வ­ரத்­துக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளதால் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் அதி­க­ரிக்கும் ஆபத்­துள்­ள­தாக எச்­ச­ரித்­துள்ள ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஹூதி படை­யி­ன­ரி­ட­மி­ருந்து கப்­பல்­களைப் பாது­காக்க இலங்கை கடற்­படைக் கப்பல் ஒன்­றினை அனுப்ப இணங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­காக ஒவ்­வொரு இரண்டு வாரங்­க­ளுக்கும் 250 மில்­லியன் ரூபா செலவு ஏற்­படும் என்­றாலும் கடல் வழிப்­பா­தையை பாது­காப்­பது அவ­சியம் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

செங்­க­டலில் பய­ணிக்கும் கப்­பல்­களைப் பாது­காக்க அமெ­ரிக்கா ஏற்­க­னவே ஒரு கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. 20 நாடுகள் இந்த கூட்­ட­ணியில் இணைந்து கொள்­வ­தற்கு இணங்­கி­யி­ருப்­ப­தாக கடந்த டிசம்பர் மாதம் பென்­டகன் அறி­வித்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த 4ஆம் திகதி அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்­ளிட்ட 12 நாடுகள் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கையில் ஹூதி படை­யினர் தாக்­கு­தல்­களை நிறுத்த வேண்டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த 12 நாடு­களில் இலங்கை உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­வில்லை.

ஜனா­தி­பதியின் திட்­டத்­திற்கு
சஜித் எதிர்ப்பு
ஹூதி படை­யி­னரின் தாக்­கு­தல்­களை முறி­ய­டிக்க 250 மில்­லியன் ரூபா செல­விட்டு இலங்கை கடற்­படை கப்­பலை ஈடு­ப­டுத்தும் ஜனா­தி­ப­தியின் திட்­டத்­துக்கு எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச எதிர்ப்புத் தெரி­வித்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­விக்­கையில், ஹூதி படை­யி­னரின் தாக்­கு­தல்­களால் பொருட்­களின் விலைகள் அதி­க­ரிக்கும் என்­பது உண்மை. ஆனால் எமது வங்­கு­ரோத்து நாடா செங்­க­ட­லுக்குச் சென்று நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்? உலகில் பணம் படைத்த எத்­த­னையோ நாடுகள் இருக்­கின்­றன. அமெ­ரிக்­கா­வினால் இந்தச் செயலை செய்ய முடியும். 250 மில்­லியன் ரூபாவை எமது பழு­த­டைந்­துள்ள கணி­னி­களை திருத்­து­வ­தற்கு பயன்­ப­டுத்­தலாம் அல்­லவா? எமது கடற்­ப­டையை செங்­க­ட­லுக்கு அனுப்­பு­வது நகைப்­புக்­கு­ரிய விட­ய­மாகும்.
எமது வங்­கு­ரோத்து நிலைமை கார­ண­மாக மாண­வர்­க­ளுக்கு மதிய உணவு கொடுக்க முடி­யா­துள்­ளது. மாண­வர்கள் வகுப்­ப­றை­களில் மயக்­க­ம­டைந்து வீழ்­கி­றார்கள். பொருட்­களின் விலைகள் பெரிதும் உயர்ந்­துள்­ளன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி 250 மில்­லியன் ரூபா செல­வ­ழித்து கடற்­படை கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்­ப­வுள்ளார். இதனை நாம் எதிர்க்­கிறோம் என்றார்.

பிரித்­தா­னிய பொரு­ளா­தா­ரத்தைப் பாதிக்கும்
செங்­க­டலில் யெமனின் ஹூதி படை­யினர் நடத்தும் தாக்குதல்கள் விலைவாசி உயர்வு மூலம் பிரித்தானிய பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என இங்கிலாந்தின் நிதி அமைச்சர் ஜெரமி ஹன்ட் கூறியுள்ளார்.
ஹூதிகளின் தாக்குதல்கள் பிரித்தானிய சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நாங்கள் இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டு வரும் யுத்தத்தை நிறுத்துவதற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தும், அமெரிக்க படைகளுடனான மோதலில் பலியான தங்கள் போராளிகளுக்காக பழிவாங்கும் நோக்கத்துடனே ஹூதிகள் செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்கள், மக்கள் மீதான வரிச்சுமை, விலைவாசி உயர்வு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றிலிருந்து மீள முடியாதுள்ளது. இவ்வாறான நிலையில் மில்லியன் கணக்கில் செலவிட்டு செங்கடல் பிராந்தியத்துக்கு இலங்கை கப்பலை அனுப்பி வைக்கப்படவேண்டுமா? ஹூதிகளுக்கு எதிராக நாம் போரிடத்தான் வேண்டுமா? என்ற நியா­ய­மா­ன விமர்சனம் மேலோங்கியிருக்கிறது.

சரக்கு கப்பல்களை பாதுகாக்கவே இலங்கை போர்க்கப்பல் – ரணில்
செங்­கடல் ஊடாக இலங்கை வரும் சரக்கு கப்­பல்­களின் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லினால் கொழும்பு துறை­முகம் உட்­பட நாட்டின் அனைத்து துறை­மு­கங்­களின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்டு இறக்­கு­மதிப் பொருட்­களின் விலை அதி­க­ரித்­து­விடும். என­வேதான் சரக்கு கப்­பல்­களைப் பாது­காக்க கடற்­ப­டையின் போர்க்­கப்­பலை அனுப்­பு­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கினேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், செங்­க­டலில் சரக்கு கப்­பல்­களின் போக்­கு­வ­ரத்து சுமுக­மாக இடம் பெறு­வதை உறுதி செய்­வ­தற்­கா­கவே போர்க்­கப்­பலை அனுப்­பு­கிறோம். மாறாக, இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போரில் ஒரு தரப்­புக்கு ஆத­ரவு வழங்கும் நோக்கில் இலங்கை செங்­க­ட­லுக்கு போர்க்­கப்­பலை அனுப்­ப­வில்லை. ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக செங்­க­டலில் இலங்கை கடற்­ப­டையின் போர்க்­கப்­பலும், சிறப்பு படை­யி­னரும் செயற்­ப­டு­வார்கள் என்றார்.

செங்­க­ட­லுக்கு போர்க்­கப்­பலை அனுப்ப வேண்டாம்
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடற்­ப­டை­யி­ன­ருடன் கூடிய போர்க்­கப்­ப­லொன்றை செங்­க­ட­லுக்கு அனுப்பி வைக்க மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்தை மாற்­றிக்­கொள்ள வேண்டும் என இலங்கை கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செய­லாளர் வைத்­திய நிபுணர் ஜீ. வீர­சிங்க அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்ளார்.

இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

மேலும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை நீண்ட கால­மாக அணி­சேரா வெளி­நாட்டுக் கொள்­கையை கடைப்­பி­டித்து வரு­கி­றது. இந்த ஏற்­பாடு அணி­சேரா வெளி­நாட்டுக் கொள்­கையை மீறு­வ­தாகும். அத்­தோடு ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் இலங்கையையும் கடற்படையையும் இலக்காகக் கொள்வார்கள். மேலும் பிரதான அரபு நாடுகளின் ஆதரவினையும் இலங்கை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.