காஸாவில் அல் ஜெஸீராவின் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்துக் கொல்லும் இஸ்ரேல்
எம்.ஐ.அப்துல் நஸார்
காஸாவில் இஸ்ரேல் மேலும் இரண்டு ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கொன்றதாக அல்-ஜெஸீரா குற்றம் சாட்டியுள்ளது.
ஹம்சா வாயெல் தஹ்தூஹ் மற்றும் முஸ்தபா துரியா ஆகியோர் பயணித்த கார் மீது இரண்டு ரொக்கெட்டுகள் வீசப்பட்டதில் அவர்கள் கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களில் இஸ்ரேல் 79 ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்துள்ள நிலையில் பிராந்தியத்தில் ‘முடிவுறாப் படுகொலைககள்’ புரியப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற ஆதரவுக் குழுவின் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளையில் அல்-ஜெஸீரா ஊடகம் காஸாவில் அதன் இரண்டு ஊடகவியலாளர்களை இஸ்ரேல் இலக்கு வைத்து கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஹம்சா தஹ்தூஹ் மற்றும் முஸ்தபா துரியா ஆகியோர் அல்-ஜெஸீராவுக்கான ஊடகப் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டதாக கட்டாரை தளமாகக் கொண்டியங்கும் ஊடக வலையமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, சுதந்திர ஊடகவியலாளரான ஹஸெம் ரஜப் காயமடைந்தார். காஸாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு உயிரிழப்புக்களை உறுதி செய்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலே இதற்குக் காரணமெனவும் குற்றம் சாட்டியுள்ளது.
காஸாவில் உள்ள அல் ஜெஸீராவின் பணியகத் தலைவரான வாயெல் தஹ்தூஹின் மூத்த மகன் தஹ்தூஹ், வாயெல் தஹ்தூஹின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பேரக் குழந்தை ஆகியோர் ஒக்டோபர் மாதம் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டனர்.
அவரது மகனின் மரணம் பற்றிய செய்தி வெளியான உடனேயே, அல் ஜெஸீராவின் 24 மணி நேர சேவையில் யுத்தம் பற்றிய செய்திகளை அறிக்கையிட்டுக் கொண்டிருந்த தஹ்தூஹ், மீண்டும் நேரலையில் தோன்றினார். ‘காஸா பகுதியில் என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் பார்க்க வேண்டும்,’ என அவர் அல்-ஜெஸீராவில் தெரிவித்தார். ‘என்ன நடக்கிறது என்றால், பாதுகாப்பற்ற மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஊடகவியலாளர்களான நாமும் பக்கச்சார்பாக நடத்தப்படுகின்றோம்’ எனத் தெரிவித்தார்.
யுத்தம் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும், தொடர்ந்து அறிக்கையிட வேண்டும் என்ற அவரது திடசங்கற்பம், பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளின் அடையாளமாக அவரை மாற்றியுள்ளது.
காஸாவில் உள்ள ஊடகவியலாளர்கள் யுத்தத்தின் பாதிப்புக்களை அறிக்கையிட மிகுந்த பிரயத்தனம் எடுக்கின்றனர், அதனால் அவர்களே அதிக ஆபத்துக்களையும் எதிர்நோக்குவதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்தது.
‘குறிப்பாக காஸாவிலுள்ள ஊடகவியலாளர்கள், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதோடு, தொடர்ந்தும் தமது உயிர்களை தியாகம் செய்து வருகின்றனர், மேலும் அதிக அச்சுறுத்தல்களையும எதிர்கொள்கின்றனர்’ என அந்த அமைப்பினைச் சேர்ந்த ஷெரிப் மன்சூர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
‘பலர் சக ஊழியர்கள், தமது குடும்பங்களையும் ஊடக வசதிகளையும் இழந்துள்ளனர், அது மட்டுமல்லாது பாதுகாப்பான புகலிடமோ வெளியேறுவதற்கான வழியோ இல்லாதபோது பாதுகாப்பைத் தேடி அவர்கள் ஓடவேண்டியுள்ளது.’
இன்றுவரை, இந்த மோதலில் 79 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டோப் டெலோயர் தெரிவித்தார். ‘இது நிச்சயமாக முடிவில்லாத படுகொலை’ என டிலோயர் சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.
காஸாவில் ஊடகவியலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றமை ‘மிகவும் கவலையளிக்கின்றது, அத்தனை ஊடகவியலாளர்களினதும் கொலைகள் தொடர்பிலும் சர்வதேச சட்டத்தினை இறுக்கமாக உறுதிசெய்யும் வகையில் முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணை நடத்தப்பட்டு, சட்டங்களை மீறியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை ஏற்றிச் சென்ற கார் மீது இரண்டு ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஒரு ரொக்கட் வாகனத்தின் முன்பக்கத்தைத் தாக்கியதோடு, மற்றொன்று சாரதியின் அருகில் அமர்ந்திருந்த ஹம்சாவை தாக்கியது. காரின் சிதைந்த பாகங்களை மக்கள் ஒன்றுகூடி பார்ப்பதை காணொளிக் காட்சிகள் காட்டியன, அதேவேளை வீதியில் இரத்தம் தேங்கிக் கிடந்தது. அப்பகுதியில் வேறு இடங்களில் எந்த சேதமும் காணப்படவில்லை.
‘இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரு விமானத்தை இயக்கிய ஒரு பயங்கரவாதியை தாக்கியதாக’ இஸ்ரேலிய இராணுவம் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது, மேலும் ‘பயங்கரவாதிகளின் தாக்குதலின் போது, அதே வாகனத்தில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது’ எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர் மத்திய கிழக்கில் தனது நான்காவது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் செயலாளர் அண்டெனி பிளிங்கன், தஹ்தூவின் இழப்புக்கு ‘ மிக ஆழமாக, வருந்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.
‘நானே ஒரு தந்தை என்ற வகையில், அவர் அனுபவித்த பயங்கரத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாதுள்ளது, ஒரு தடவை அல்ல, இப்போது இரண்டாவது தடவை. இது கற்பனை செய்ய முடியாத சோகம், மேலும் பல அப்பாவி பாலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கும் இதுவே நடந்துள்ளது.’ என அவர் கட்டாரில் தரித்திருந்தபோது போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ‘பாலஸ்தீன ஊடகவியலாளர்களின் காரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் குறிவைத்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும்’ இஸ்ரேல் ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே ‘இலக்கு’ வைப்பதாகவும் ‘ஊடக சுதந்திரத்தின் கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில், தாக்குதலொன்றின்போது மற்றொரு அல்-ஜெஸீரா ஊடகவியலாளரான மொமன் அல்-ஷராபியின் தந்தை, தாய் மற்றும் 20 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் பற்குபற்றினர், அங்கு கண்ணீருடன் தஹ்தூஹ் இறந்த தனது மகனின் கையை முத்தமிடுவதைக் காண முடிந்தது.
‘இஸ்ரேலிய கண்ணால் அன்றி உலகம் இரண்டு கண்களாலும் பார்க்க வேண்டும், பலஸ்தீன மக்களுக்கு நடக்கும் அனைத்தையும் அவர்கள் பார்க்க வேண்டும்,’ என தஹ்தூஹ் தெரிவித்தார்.
‘ஹம்சா அவர்களுக்கு (இஸ்ரேலியர்களுக்கு) என்ன செய்தார்? என் குடும்பம் அவர்களுக்கு என்ன செய்தது? அவர்களுக்கு பொதுமக்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை, ஆனால் காஸா பகுதியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்காமல் உலகம் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றது’ என கடந்த டிசம்பரில் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த தஹ்தூஹ் தெரிவித்தார். தஹ்தூஹ் காயமடைந்த தாக்குதலில் அல்-ஜஸீராவின் ஒளிப்பதிவாளர் சமிர் அபூ டக்கா கொல்லப்பட்டார்.
உத்தியோகபூர்வ இஸ்ரேலிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஹமாஸ் போராளிகள் காஸாவின் எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்த எதிர்பாராத தாக்குதலில் பொரும்பாலான பொதுமக்கள் உட்பட 1,140 பேர் கொல்லப்பட்டனர், இதனையடுத்து காஸாவில் போர் மூண்டது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதக் குழு என விமர்சிக்கப்படும் ஹமாஸை ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது, மேலும் காஸா மீது தொடரான குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது, 23,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் நம்பப்படுவதாகவும் காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலை செய்தியாக வெளியிட்ட மற்றொரு லெபனனைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரொய்ட்டர்ஸின் இஸாம் அப்துல்லா ஆவார். ராய்ட்டர்ஸ் விசாரணையின்படி, அவர் அக்டோபர் 13 அன்று லெபனானில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலைப் படமெடுக்கும் போது இஸ்ரேலிய டேங்க் குழுவினரால் கொல்லப்பட்டார்.
கடந்த 2022 மே மாதத்தில், அல்-ஜெஸீராவில் பணிபுரிந்த சிரேஷ்ட பாலஸ்தீனிய பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய இராணுவம் பின்னர் தனது இராணுவ வீரர்களில் ஒருவர் குறித்த பெண் ஊடகவியலாளரை சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டது – அவர் ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்ததால் அவர் ஒரு போராளி என்று தவறாகக் கருதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.- Vidivelli