சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல்
இலங்கை பலஸ்தீன் விடுதலை இயக்கம் பாராட்டு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்ரேல் காஸாவில் மேற்கொண்டு வரும் பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், அந்நாட்டுக்கு எதிராகவும் உரிய சர்வதேச சட்ட நடவடிக்கைகளை மெற்கொள்ளுமாறும் தென் ஆபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையை இலங்கை பலஸ்தீன் விடுதலை இயக்கம் பாராட்டியுள்ளதுடன் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பலஸ்தீன் விடுதலை இயக்கத்தினர் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு விஜயம் செய்து தென்னாபிரிக்காவுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்ததுடன் பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடிதமொன்றினையும் கையளித்தனர். நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா சயிட்டும் கலந்து கொண்டிருந்தார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதியைப் பெற்றுத் தருவதற்காக தென்னாபிரிக்கா முன்வந்துள்ளமையை இலங்கை மக்கள் பாராட்டுகின்றனர். பலஸ்தீனர்களின் மீதான படுகொலைகள், அவர்களது வாழ்விடங்கள் மற்றும் வாழ்வதற்கான சூழ்நிலையினை அழித்துள்ளமை, பலஸ்தீனர்களின் பொருளாதார வளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை என்பன இஸ்ரேலின் சட்ட விரோத செயல்களாகும்.
இஸ்ரேல் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஒத்துழைப்புடன் இவற்றை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் படுகொலைகள் ஒரு நாள் அல்லது வாரம் அல்ல. நான்கு மாதங்களாகத் தொடர்கின்றன. முழு உலகமும் பார்த்திருக்க இந்த அநியாயங்கள் தொடர்கின்றன.
பலம் பொருந்திய மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் இந்த படுகொலைகள் தொடர்வதுடன் இதற்காக அந்நாடுகள் நிதியுதவி, இராணுவ உதவி மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்கி வருகின்றன.
ஐக்கிய நாடுகள், ஜெனீவா பிரகடனம், சர்வதேச நீதிக் கட்டமைப்பு அனைத்தும் மீறப்பட்டுள்ளன.
அந்நியர் ஆட்சியை நாட்டிலிருந்தும் வெளியேற்றி தென்னாபிரிக்கா அங்கு தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி ஆட்சியமைத்துள்ளமை பெரும் வரவேற்பைப் பெற்றது.
சியோனிய இஸ்ரேலின் ஆதிக்கத்தினால் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தில் நீண்ட காலமாக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
தென்ஆபிரிக்காவில் போன்று இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
தென்னாபிரிக்காவின் முயற்சியினால் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைக்கு நீதி மூலம் தீர்வு கிட்ட வேண்டும். மேலும் உயிர்ப்பலிகள், அழிவுகள் இடம்பெறுவதற்கு முன்பு தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் விடுதலைக்கான இயக்கத்தின் உறுப்பினர் டெஸி தஹலானை விடிவெள்ளி தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியது. அவர் தெரிவிக்கையில், ‘இஸ்ரேல் பலஸ்தீனர்கள் மீது மேற்கொண்டுவரும் தொடரான தாக்குதல்கள் இனப்படுகொலைகள் வாழ்விடங்களை நிர்மூலமாக்கியமைக்கு எதிராக இஸ்ரேலுக்கு எதிராக எந்தவொரு நாடும் களத்தில் இறங்கவில்லை. தென்னாபிரிக்கா மாத்திரமே சர்வதேச நீதிமன்றினை நாடியுள்ளது.
தென்னாபிரிக்கா இஸ்ரேலிலிருந்த தனது தூதுவராலயத்தை மூடியது. தென்னாபிரிக்காவிலிருந்த இஸ்ரேல் தூதுவரை திருப்பியனுப்பியது.
எந்தவோர் அச்சுறுத்தலுக்கும் பயப்படாது தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளமை பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது என்றார்.- Vidivelli