அமெரிக்க சார்பு கொள்கை என்றால் ஜனாதிபதி ஏன் அணி சேரா மாநாட்டிற்குச் செல்லவேண்டும்?
பாராளுமன்றத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் கேள்வி
அமெரிக்க சார்பு கொள்கையைக் கடைப்பிடித்து செங்கடலுக்கு கடற் படையை அனுப்புவதானால், ஜனாதிபதி ஏன் அணிசேரா மாநாட்டுக்குச் செல்ல வேண்டும்? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது, சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு தெரியும். நீங்களும், நானும் உகண்டாவுக்கு சென்று வந்தோம். அங்கு ஜனாதிபதி அணிசேரா நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு 18 ஆம் திகதி பயணிக்கின்றார். இப்பொழுது இந்த நாட்டின் அணிசேராக் கொள்கை என்பது என்ன? அமெரிக்கச் சார்பு கொள்கையா?
அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் தேவைக்காக ஹூதிகளை ஒழிப்பதற்காக எங்களது கடற் படையை செங்கடலுக்கு ஜனாதிபதி அனுப்புவதானால், ஏன் அவர் அணிசேரா நாடுகளின் அரசு தலைவர்கள் மாநாட்டுக்குச் செல்ல வேண்டும்? என கேட்டார். – Vidivelli