(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டு மக்கள் கடைப்பிடிக்கும் மதங்களின் போதனைகளை திரிபுபடுத்தல், எதிர்த்தல் மற்றும் பல்வேறு சவால்களுக்குட்படுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்கு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.
நான்கு பிரதான மதங்களுக்கென இவ்வாறு நான்கு குழுக்களை நியமிக்கவுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைவாக குறிப்பிட்ட குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
மத போதனைகளை திரிபுபடுத்தி சமூகத்தில் பதற்ற நிலைமையினை உருவாக்கும் சிலரின் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கிலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத போதனைகளை திரிபுபடுத்தி நபர் ஒருவர் ஆற்றிய பிரசங்கங்களைத் தொடர்ந்து குறித்த நபர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் என சிலர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
நாட்டின் சட்ட கட்டமைப்பிற்குள் அனைவரும் அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli