செங்கடலுக்கு கடற்படையை அனுப்பும் தீர்மானம் மிக தவறானது
ஜனாதிபதியிடம் முஸ்லிம் தலைமைகள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்
அமெரிக்க தலைமையிலான படைகளுடன் இணைந்து செங்கடலில் யெமனின் ஹூதி படையினருக்கு எதிராக போரிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தீர்மானம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் தமது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யெமன் ஹூதிகளுக்கு எதிராக போராடுவதற்கென இலங்கை கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நிராயுதபாணிகளான பலஸ்தீனியர்களைக் கொன்று, காஸாவை முற்றாக அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலுக்கும் அதன் நேச அணிகளுக்கும் ஆதரவாக இலங்கையின் ஜனாதிபதி செயற்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சரும் உடந்தையாகவுள்ளதாகவே தெரிகிறது. அது மாத்திரமன்றி இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கையில் உள்ள எமது தலைவர்கள் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் ஆபத்தான தீர்மானங்களை மாற்றுவதற்கு எதுவுமே செய்யவில்லை. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்க விரும்பும் எந்தவொரு அரசியல் தலைமையும் 1.6 மில்லியன் முஸ்லிம் வாக்குகளையோ அல்லது ஏனைய சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளையோ புறக்கணிக்க முடியாது என்ற செய்தியை முஸ்லிம் தலைமைகள் மிக அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
2024 ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதி வடக்கிற்குச் சென்றார். வடக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து அவர் உரையாற்றினார். எனினும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பதற்கான எந்தவொரு அரசியல் அழுத்தத்தையும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் வழங்கியதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளிநாட்டு விஜயங்களை அனுபவிக்கிறார்களே தவிர, அதன் மூலம் துன்பப்படும் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli