(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தவறான மத போதனைகளை நடத்தி, சமூக ஊடகங்களில் பெளத்த மதத்தின் கொள்கைகளைத் திரிபுபடுத்தி மக்களை தற்கொலைக்குத் தூண்டியதுடன் தானும் தற்கொலை செய்து கொண்ட ருவான் பிரசன்ன குணரத்ன என்பவரின் போதனைகளில் கலந்து கொண்டிருந்தவர்களைத் தேடி சி.ஐ.டி. பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரகசிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருவர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவரின் கீழ் 15 பேரடங்கிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஒரு பிரிவினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள ஏழு பேரின் வைத்திய அறிக்கையூடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். யூடியுப் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பதிவுகள் இவ்விசாரணைகளின் போது உள்வாங்கப்படவுள்ளன.
அத்தோடு சம்பந்தப்பட்ட மத போதகரின் போதனைகளை ஏற்பாடு செய்வதில் தொடர்புபட்டவர்கள் மற்றும் ஆதரவாளர்களை இனங்கண்டு அவர்களை விசாரணைக்குட்படுத்தி வாக்கு மூலமும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்த போதனைகளில் பங்குபற்றியவர்கள் தங்கள் குடும்பத்திலும் இருந்தால் அவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
47 வயதான மத போதகர் ருவான் பிரசன்ன குணரத்ன அடுத்த பிறவிக்கான தற்கொலையை ஊக்குவித்து போதனைகளை நடத்தியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் பல பகுதிகளில் இத்தகைய போதனைகளை நடத்திய குணரத்ன அண்மையில் 28.12.2023 அன்று ஹோமாகமயில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் சயனைட் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
30.12.2023 இல் அவரது இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அம்பலாங்கொடையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் குணரத்ன தற்கொலை செய்து கொள்வதற்கான போதனைகளை செய்தது தெரியவந்தது.
விசாரணைகளைத் தொடர்ந்து அம்பலாங்கொடையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் குணரத்னவின் மரணத்தைப் போன்றே மஹரகமவில் உள்ள விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளை குணரத்னவின் குடும்பத்தாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 21 வயதுடைய பெண் ஒருவரும் இதேபோன்று சடலமாக மீட்கப்பட்டார். ருஹுனு பல்கலைக்கழக மாணவியான இவர் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவரும் மத போதகரின் போதனைகளைப் பின்பற்றியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மத போதனைகளை வழங்குவதில் பிரபலமான குணரத்ன தனது பிரசங்கங்களின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இச்சம்பவங்களின் பின்னணியில் உள்ள சரியான நோக்கம் தெரியவில்லை.
இவர்களுக்கு நிதி நெருக்கடிகள் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குணரத்னவின் போதனைகளை செவிமடுத்தவர்கள் தமது வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை வேண்டியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில், போதகர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதனைகளை நடத்தியுள்ளார். மேலும் அவரது சீடர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவரை இறந்தவர்களும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான மத போதனைகளுக்கு பொதுமக்கள் பலியாகாமல் இருக்குமாறும் போதனைகளில் கலந்து கொண்டவர்களின் உறவினர்கள் போதனைகளினால் ஏற்படக்கூடிய தற்கொலை அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதகரின் போதனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் மத போதகர் தற்கொலையை நியாயப்படுத்தியுள்ளதுடன் அடுத்த ஆன்மாவைப் பெறுவதற்கு இதுவே இலகுவான வழி எனவும் போதித்துள்ளார் என்றார்.
தற்கொலை செய்து கொண்ட மத போதகரின் வழிகாட்டல்களின் கீழ் அவரது சீடர்கள் நாட்டில் இது போன்ற போதனைகளைத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதால் இது தொடர்பான விசாரணைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர என்போரின் வழிநடத்தல்களின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
30 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்
சுவர்க்கத்துக்கு செல்ல வேண்டுமென்றால் உயிர்துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை மத போதனைகள் மூலம் பரப்பி 7 பேரை தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூட நம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின்படி இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. இக் குழுவில் சில பெளத்த பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இனங்காணப்பட்ட 30 பேரையும் மதவாதக் கருத்துகளிலிருந்து விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.- Vidivelli