ஏ.ஆர்.ஏ.பரீல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் குழுவினருக்குமிடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் யுத்த விமானங்கள், யுத்த டாங்கிகள், பீரங்கிகள் நடாத்திவரும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை காஸா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் சரியாக மதிப்பிடப்பட முடியாதவையாக மாறியுள்ளன.
இஸ்ரேலின் காட்டுமிராண்டித்த தனமான தாக்குதல்கள் சர்வதேச நாடுகளினால் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. என்றாலும் இஸ்ரேல் எதற்கும் கட்டுப்படாமல் தனது இலக்கை எய்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை காஸாவில் 21800 பலஸ்தீனர்கள் இஸ்ரேலினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஹமாஸின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 56,165 பலஸ்தீனர்கள் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திறந்த வெளியில் வாழும் அவலம்
பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த காஸா பிராந்திய மக்கள் திறந்தவெளியில் பூங்காக்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக பலஸ்தீன் அகதிகளுக்கான ஐ.நா. வின் நிவாரண முகவரமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ரபா எல்லைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவின் தென்பகுதியில் எகிப்து எல்லைக்கருகிலேயே ரபா அமைந்துள்ளது. குறிப்பிட்ட அளவு உதவிகளை வழங்குவதற்கே பலஸ்தீன் அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண முகவரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதன் அதிகாரி டவுமா தெரிவித்துள்ளார். ஆனால் காஸாவின் மனிதாபிமான தேவைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பகுதிகளுக்கு எமது அதிகாரிகள் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மனிதாபிமான நிவாரண உதவிகள் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் உதவிகள் விநியோகத்திலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் காஸா மீது யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து 41 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 10 கிலோ மீட்டர் அகலமான பரப்புக்குள் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை இஸ்ரேல் மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தியுள்ளது.
பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை முதலில் காஸாவின் வடக்குப் பகுதியிலேயே பலப்படுத்தியிருந்தது. ஆனால் அண்மையில் தென் காஸா பகுதியின் கான் யூனிஸ் மீது தனது தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. கான்யூனிஸ் பகுதியை ஹமாஸின் பலம்வாய்ந்த தளமாகக் கருதியே அங்கு தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
யுத்தம் பல மாதங்களுக்குத் தொடரும்
இஸ்ரேல் அனைத்து முனைகளிலிருந்தும் தாக்குதல்களைத் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றி தெரிவித்துள்ளார். யுத்தம் மேலும் பல மாதங்களுக்குத் தொடரும் என இஸ்ரேலின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள கருத்தினை இஸ்ரேலியப் பிரதமரும் உறுதி செய்துள்ளார்.
எங்களது பணயக் கைதிகளை ஹமாஸிடமிருந்து விடுதலை செய்து கொள்ளும் வரையும் ஹமாஸினை இல்லாதொழிக்கும் வரையும் யுத்தம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நகரத்தில் பாதுகாப்பினை எதிர்பார்க்கிறார்கள் என பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண ஏஜன்சியின் காஸாவுக்கான பணிப்பாளர் டொம் வைட் ரபா நகரிலிருந்து தெரிவித்துள்ளார். காஸா அகதிகள் பாடசாலைகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடம் பெயர்வதற்கு முடியாதுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி திறந்த வெளியில் பொலித்தீன் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். சன நெருக்கடி பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1.9 மில்லியன் மக்கள் காஸா பிராந்தியமெங்கும் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது ரபா பகுதியை நோக்கியே மக்கள் இடம்பெயர்கின்றனர். காஸாவின் கான்யூனிஸ் மற்றும் பல பகுதிகளில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடுமையான யுத்தம் இடம்பெற்று வருகின்றமையே ரபாவை நோக்கி மக்கள் இடம்பெயர்கின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது. நுசைரத் அகதி முகாம் அல்புரைஜ்ஜிக் மக்ஹாசி பகுதிகளிலும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
நோய்த்தொற்று அதிகரிப்பு
இடம்பெயர்ந்துள்ள காஸா மக்கள் மத்தியில் நோய்த் தொற்றுகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாத மத்தியிலிருந்து டிசம்பர் மத்தி வரை காஸாவெங்கும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரொஸ் அட்நொம் செப்பிரி யஸ்சுஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் புகலிடங்களில் தங்கியிருக்கும் மக்களில் 136400 பேர் வயிற்றுப் போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 55,400 பேர் பேன் மற்றும் சிரங்குக்கு உள்ளானவர்களாகவும் 126 பேர் மூளை மற்றும் தண்டுவடம் பாதிப்புக்குள்ளானவர்களாகவும் மாறியிருப்பதாக உலக சுகாராத ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் உயிர் பலிகள்
மத்திய காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 24 மணி நேரத்தில் சுமார் 64 பேர் பலியானதுடன் 186 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு காஸாவுக்கு எதிரான போரை ஹமாஸ் குழுவினரை அழித்து வெற்றி கொள்ளும் வரை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஒன்று கூடி ஆராயவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கமும் இஸ்ரேல் பிரதமரின் நிலைப்பாட்டினையே கொண்டுள்ளது. இஸ்ரேல் யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக அமெரிக்கா மேலும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி காஸா மீதான தாக்குதலுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமை தேர்தலில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பகுப்பாய்வாளரான அடெல் அப்துல் கபார் தெரிவிக்கையில், ‘ஜோ பைடன் மக்கள் மத்தியிலான பிரபலத்தை இழந்து வருகிறார். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் அவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருவதைக் காண்பிப்பதாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்களில் காஸா நகரில் ஒமர் அல்முக்தார் வீதியிலுள்ள ஹம்மாம் அல் சம்ரா என்ற 800 ஆண்டுகள் பழமையான வரலாற்று முக்கியம் வாய்ந்த ஸ்தலமொன்று சேதமடைந்துள்ளது. காஸாவில் இஸ்லாமிய சகாப்தத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த ஒமர் பள்ளிவாசலும் அழிவடைந்துள்ளது.
அத்தோடு 13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த அல் பஹா மாளிகையும் தரைமட்டமாகியுள்ளது. இம்மாளிகையில் கிரேக்க ரோமன் மற்றும் இஸ்லாமிய சகாப்தங்களைச் சேர்ந்த கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அருங்காட்சியகமொன்றும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
2024 ஆம் ஆண்டில் யுத்தம் தொடர்ந்து நடக்கும்
பலஸ்தீனத்துக்கு எதிரான யுத்தத்தை 2024 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவதற்கும் அதற்கேற்றவாறு இராணுவத்தினரை பணியில் அமர்த்துவதற்கும் இஸ்ரேல் இராணுவம் ஒழுங்குபடுத்தப்படவுள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக தற்போது கடமையிலுள்ள ரிசர்வ் இராணுவத்தினர் ஒரு தொகையினர் திருப்பியழைக்கப்படுவதுடன் அவர்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு யுத்த முனைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காஸாவில் உள்ள இஸ்ரேல் ரிசர்வ் இராணுவத்தினர் விரைவில் இவ்வாரம் அங்கிருந்தும் வெளியேறுவார்கள். ெவளியேறும் அவர்கள் ஊக்கமளிக்கப்பட்டு சுறுசுறுப்பாக போர் புரிவதற்கு சக்தியளிக்கப்பட்டு மீண்டும் காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதனிடையே ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
லெபனானின் பெய்ரூத் நகரில் அமைந்துள்ள ஹமாஸ் அலுவலகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர் ஏழு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெனானானில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியைத் தீவிரப்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
57 வயதாக சாலிஹ் அல் அரூரி ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸஸாம் படையணியின் ஸ்தாபகர்களுள் ஒருவராவார். இவர் 15 வருடங்கள் இஸ்ரேலினால் சிறை வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் பலஸ்தீனிலிருந்து வெளியேறி லெபனானில் வசித்து வந்தார். இவரை தாம் இலக்கு வைத்துள்ளதாக ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன்னரே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத் தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக லெபனானின் இடைக்கால அரசின் பிரதமர் நஜீப் மிகாதி தெரிவித்துள்ளார். ‘‘இது இஸ்ரேலின் புதிய குற்றம்’’ என்றும் அவர் சாடியுள்ளார்.
லெபனானின் தலைநகர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு கடும் பதிலடி வழங்கப்படும் என ஹிஸ்புல்லாஹ் இயக்கம் எச்சரித்துள்ளது.- Vidivelli